ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 வியாழன்

“நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்” (ஏசா.55:12) இவ்வாக்குப்படியே கர்த்தர் இப்புதிய வருடம் முழுவதும் எல்லாச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் நம்முடைய குடும்பங்கள் காக்கப்படுவதற்கு ஜெபிப்போம்.

சேர்த்துக்கொள்ள வருகிறார்!

தியானம்: ஜனவரி 1 வியாழன்; வாசிப்பு: வெளிப்படுத்தல் 22:17-21

“…மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்
என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”
(வெளிப்படுத்தல் 22:20)

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசகர்கள் அனைவருக்கும், சத்தியவசன ஊழிய ஸ்தாபனத்தினரின் சார்பிலே அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப் புதிய ஆண்டிலும் கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் தமது புதிய கிருபையினால் நிரப்பி வழிநடத்துவாராக.

நமது நேசத்திற்குரியவர், “நான் சீக்கிரமாய் நாடு திரும்புகிறேன்” என்று தகவல் சொன்னால், நமக்குள் எழுகின்ற முதல் உணர்வு சந்தோஷம்தான். நீண்ட நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கின்ற மகிழ்ச்சி ஒருபுறம், அவர் நமக்கு கொண்டு வருகின்ற பரிசுகளைக் குறித்த எதிர்பார்ப்பு இன்னொருபுறம். மேலும், அவருடைய வருகை நமது குறைகளை நீக்கும், தேவைகளைச் சந்திக்கும், துக்கத்தை ஆற்றும் என்கிறதான எதிர்பார்ப்பு…. இப்படியாக அநேகம் உண்டு. நாம் என்ன மனநிலையில் இருக்கிறோமோ, அதற்கேற்றபடியே நமது சந்தோஷமும், அந்த வருகையின் நாளுக்குரிய எதிர்பார்ப்பும் இருக்கும். இது இயல்பு. நம்மோடு நிரந்தரமாக இருக்கமுடியாத ஒரு உறவினரின் வருகைக்காக நமது மனம் இவ்வளவாக ஏங்குமானால், நம்மை நிரந்தரமாகத் தம்முடன் சேர்த்துக் கொள்கிறவரும், அதற்காக தமது ஜீவனையே கொடுத்து வழியை வகுத்தவருமாகிய கிறிஸ்துவின் வருகை நமக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தரவேண்டும்! ஆனால், அவர் வருகிறார் என்ற செய்தியை அறிந்திருக்கிற நமக்குள் அந்த மகிழ்ச்சி இருக்கிறதா! அல்லது, அதைக் குறித்தே சிந்திக்கவும் நேரமற்று, போராடிக்கொண்டே இப் புதிய ஆண்டுக்குள் வந்திருக்கிறோமா!

வேதாகமத்திலே அநேக வாக்குத்தத்தங்களைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் “கிறிஸ்து வருகிறார்” என்ற வாக்கு நிறைவேறும் நாட்கள் நெருங்கிவிட்டது என்ற செய்தி தரும் மகிழ்ச்சியை வேறேதுவும் நமக்குத் தரமுடியாது. ஆம், நமது ஆண்டவர் நம்மைத் தம்முடன் சேர்த்துக்கொள்ள சீக்கிரமாக வருகிறார். இனி பாவத்தின் கொடூரம் நம்மை வேதனைப் படுத்தாது. கண்ணீர் இருக்காது. வியாதி வேதனை நீங்கிப்போகும். பாடுகள் துயரங்கள் மாறிப்போகும். இவ்வுலகிற்கு நாம் பட்ட கடன்களை அவர் நீக்கிப் போடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் ஆண்டவரை திறந்த முகத்தோடு சந்திப்போம். தேவபிள்ளையே, இதைவிட ஒரு மகிழ்ச்சி நமக்கு ஏது? கிறிஸ்து வரும்போது நமக்குரிய பலனோடும் வருவார். ஆகவே, “இயேசு வருகிறார்” என்ற நல்ல செய்தியோடு இந்த ஆண்டுக்குள் பிரவேசிப்போமாக. கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் உன்னத ஆசீர்வாதங்களால் நிரப்புவாராக. ஆமென்.

ஜெபம்: “ஆண்டவரே, சீக்கிரமாக வாரும். என் பாடுகள் நீங்கி உம்மோடு என்றும் வாழ என்னை உம்முடன் சேர்த்துக் கொள்ளும். ஆமென்.”

தேவனுடைய மாறாத வார்த்தைகள்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2015)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: லூக்கா 21:1-38

“ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே
தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்” (லூக்கா 21:38).

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அவருடைய சுகமளிக்கும் வல்லமையைப் பெற்றுக்கொள்ளவும், மரித்தவர்களை அவர் உயிரோடெழுப்புவதைக் காணவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றினர். இயேசு கிறிஸ்து ஒரு தீர்க்கதரிசி, ஓர் ஆசாரியர், ஓர் அரசர், மேலும் இவர்கள் அனைவரிலும் மேலானவர். நற்செய்தி ஆசிரியர்கள் அவரை ஒரு பிரசங்கியாராகவும் போதகராகவும் சித்தரிக்கின்றனர். தமது சிலுவைப் பாடுகளின் வாரத்திற்கு முன்னர் இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் தினந்தோறும் பிரசங்கித்து வந்தார் என லூக்கா தமது நற்செய்தி நூலில் எழுதியுள்ளார்.

“ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்” (லூக்கா 21:38).

அவரது செய்திகள் புதுமையானது மாத்திரமல்ல; சத்தியமாகவும் இருந்தன.

இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் பிரசங்கித்தவைகளில் பெரும்பாலானவை தீர்க்கதரிசன உரைகளாகவே இருந்தன. லூக்கா 21ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் இயேசுகிறிஸ்து எருசலேம் தேவாலயத்தின் பொக்கிஷங்களைக் கடந்துசென்றபொழுது அப்பிரமாண்டமான ஆலயத்தின் மாட்சிமையைப் பற்றிய தமது கருத்தினைத் தெரிவித்தார். அத்தேவாலயம் இடிக்கப்படும் என்று அவர் முன்னுரைத்தார். அது கி.பி.70ஆம் ஆண்டில் நிறைவேறியது. ரோமர்களால் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.

அவ்வதிகாரத்தின் பிற்பகுதி இவ்வுலகத்தின் மகா உபத்திரவ காலத்தில் எருசலேமைப்பற்றிய இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசன உரைகளாகும். சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் என வானத்தில் காணப்படும் சில அடையாளங்களை அவர் விவரித்தார். தமது விண்ணரசை ஸ்தாபிக்க மனுஷகுமாரன் வல்லமையோடும் மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருமுன் இப்பாவ உலகை நியாயந்தீர்ப்பார் என அதிகாலையில் தேவாலயத்தில் தம்மைத் தேடிவந்த மக்களுக்கு அவர் போதித்தார் (வெளி.19:11-16).

அனுதினமும் மக்கள் அவருடைய போதனைகளைக் கேட்கும்பொழுது அவர், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (லூக்கா 21:33) என அவர்களுக்குக் கூறினார். மாறும் இப்பிரபஞ்சத்தில், இயேசுகிறிஸ்துவின் வாய்மொழிகளும், தேவனால் பரிசுத்த வேதாகமத்தில் அருளப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளும் என்றும் அழியாமல் இருக்கும். வானத்தின் சத்துவங்களை அசைக்க வல்லமையுள்ள தேவன் தமது வார்த்தைகளையோ அசையாமல் நிலைநிறுத்தி வைத்திருக்கும் வல்லமை பெற்றவர். இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசனமாக உரைத்தபடி வானங்கள் ஒழிந்து போனாலும் அவரது வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போகாது.

அன்று எருசலேம் தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து அனுதினமும் மக்களுக்கு போதித்தார். இன்றைய இருபதாம் நூற்றாண்டில் அவர் அவ்வாறு செய்யாவிட்டாலும், தேவனுடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமம் மூலமாக நம்முடன் அவர் பேசுகிறார். அதிகாலையில் அவரைத் தேடி தேவாலயத்தில் வந்த மக்களிடம் பேசியது போல இன்று நமக்கும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.

ஒரு கொடிய நோயிலிருந்து மீண்டு, ஓய்வெடுப்பதற்காக கலிபோர்னியாவின் தென்பகுதிக்கு வந்த ஆன்ட்ரூ பிரேசர் என்ற தேவ மனிதரைப் பற்றி திரு.ஐயர்ன்சைடு என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

அப்பக்திமான் மிகவும் களைப்புற்றிருந்தாலும் தம்முடைய பழைய வேதாகமத்தைத் திறந்து, ஐயர்ன் சைடு இதுவரை கேட்டிராத சத்தியங்களை தேவ வார்த்தையிலிருந்து விளக்கினார். அவரது வார்த்தைகளால் அசைக்கப்பட்ட திரு.ஐயர்ன் சைடு, அவரை நோக்கி, “இக்காரியங்களை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்? ஏதேனும் வேதாகமக் கல்லூரியில் பயின்றீர்களா?” என்று ஆர்வத்துடன் வினவினார். அதற்கு பிரேசர் பதிலாக, “என் அன்பு இளைஞனே, என்னுடைய அயர்லாந்து நாட்டின் வடபகுதியிலுள்ள என்னுடைய சிறு குடிசையின் தரையில் முழங்காலில் நின்று நான் இவைகளைக் கற்றுக்கொண்டேன். அங்கே மணிக்கணக்கில் நான் முழங்காலில் நின்று, தேவ ஆவியானவர் எனக்கு இவ்வார்த்தையை விவரித்துச் சொல்லி கிறிஸ்துவை என் ஆத்துமாவில் வெளிப்படுத்த வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன். உலகின் வேறு எந்த பல்கலைக் கழகத்திலும், வேதாகமக் கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத சத்தியங்களை அந்த மண் தரையிலே முழங்காலில் நின்று நான் கற்றுக் கொண்டேன்” என்று உரைத்தார்.

வேதாந்தங்களின் ஆழ்ந்த சத்தியங்களை ஒரு வகுப்பறையில் கற்றுக்கொள்வதைவிட, தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இறையியல் மற்றும் வேதபாட வகுப்புகளில் முறையான கல்வி கல்லாதவர்களும், இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொள்ள வெட்கப்படக்கூடாது.

வேத அறிஞர்கள் அனைவரும், முழங்காலில் நின்று அதிகாலை துவங்கி அந்த நாள் முழுவதும் மாலை வரை தேவனுடைய புத்தகத்தில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நமக்கும் அத்தகைய அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை நாம் நழுவ விடாது இன்றே பயன்படுத்துவோமாக.

அதிகாலைப் பாடல்:
உம் ஜீவ வார்த்தை அழகிய மலர்ச்சோலையாகும் – அதை
நாடிவருவோர் அழகிய மலர்க்கொத்தைப் பறிக்கலாம்;
உம் வார்த்தை ஓர் ஆழமான ஆபரணச் சுரங்கமாகும் – அதைத்
தேடிவருவோர் அரிய வளங்களைப் பெறலாம்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(10) ஏனைய மொழி பெயர்ப்புகள்

இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் பேசப்படும் மொழிகளுள் 8 மொழிகளில் முழு வேதாகமமும், 12 மொழிகளில் புதிய ஏற்பாடும் 30 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1968ஆம் ஆண்டு வேதாகமச்சங்க அறிக்கை, பிலிப்பைன்ஸ் நாட்டின் 8 மொழிகளில் முழு வேதாகமமும் 2 மொழிகளில் புதிய ஏற்பாடும், 33 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை அறியத்தருகின்றது.

வைக்கிளிப் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் தாம் இதைவிட இன்னும் 33 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளை மொழிபெயர்த்து அச்சிட்டுள்ளதாக 1970இல் அறிவிக்கப்பட்டது. இவ்வேதாகம மொழி பெயர்ப்பாளர்கள் 1966ஆம் ஆண்டு நேபாள நாட்டிலும் வேதாகம மொழி பெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளனர். தாய்வான் நாட்டின் இரு மொழிகளில் புதிய ஏற்பாடும் 10 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

பசிபிக் தீவுகளின் மொழிகளில் வேதாகமம்

பசிபிக் சமுத்திரத்தின் தென் மேற்குப் பகுதியில், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தீவுகளே பசிபிக் தீவுகளாகும். 30 முக்கிய தீவுக்கூட்டங்களைக் கொண்டுள்ள இச்சமுத்திரத்தில் மொத்தம் 1500 தீவுகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் குக் (1728-1779) என்பவரே முதல் தடவையாக இத்தீவுகள் பற்றிய விபரங்களை அறிந்து அவற்றை மேற்குலகுக்கு அறிவித்தவராவார். இவர் சேன்விச் எனும் தீவுக்கு சென்றபோது அங்கிருந்த மக்களால் கொல்லப்பட்டார். பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் இத்தீவுகளைப்பற்றி ஜேம்ஸ் குக் கண்டு பிடித்த பின்னர், வியாபாரிகளும் மிஷனரிகளும் இத்தீவுகளுக்குச் செல்லத் தொடங்கினர். 1776இல், ரோம சபை தாஹித்தி எனும் தீவுக்கு மிஷெனரிகளை அனுப்பியது. எனினும், சில மாதங்களில் அவர்கள் திருப்பியழைக்கப்பட்டனர்.

1797 இல் லண்டன் மிஷனரி சங்கம் சொசைட்டி தீவுகளுக்கு 30 மிஷெனரிகளை அனுப்பியது. அதன் பின்னர் ஏனைய மிஷெனரி சங்கங்களைச் சேர்ந்தவர்களும் பசிபிக் தீவுகளுக்குச் செல்லத் தொடங்கினர். இத்தீவுகளில் இருந்த மக்கள் காட்டுவாசிகளாகவும், நரமாமிசப் பட்சினிகளாகவும் இருந்தமையினால் நூற்றுக்கணக்கான மிஷெனரிகள் இத்தீவுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்படியிருந்தும் தொடர்ச்சியாக அங்கு சென்ற மிஷெனரிகள் பல தீவுகளின் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கியுள்ளதோடு, தேவனுடைய வார்த்தையையும் அவர்களுடைய மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். 1797 இல் சொசைட்டி தீவுகளுக்குச் சென்ற 30 மிஷெனரிகளில், 18 பேர் தாஹித்தி எனும் தீவில் தமது ஊழியங்களை ஆரம்பித்தனர். எனினும், இவர்கள் பலவிதமான இக்கட்டுகளுக்கும் முகங்கொடுத்தமையினால் 11 பேர் மறுவருடமே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டனர்.

எனினும், 1812இல் அத்தீவின் அரசன் கிறிஸ்தவனாகியமையினால், முழுத் தீவினரும் கிறிஸ்தவர்களாகினர். 1838இல், தாஹித்திய மொழியில் வேதாகமம் வெளியிடப் பட்டது. 1797இல், பசிபிக் தீவுகளுக்கு வந்த 30 லண்டன் மிஷெனரி சங்க மிஷெனரிகளில், 11 பேர் தொங்கா தீவுகளுக்குச் சென்றனர். எனினும், ஒருவருடத்திற்குள்ளாகவே இவர்களில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதன் பின்னர் 1822 இல், மெதடிஸ்ட் மிஷெனரி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இத்தீவுகளுக்குச் சென்றனர். ஆரம்பத்தில் இத்தீவுகளில் மிஷெனரிகளுக்கு எதிர்ப்பும் கடும் உபத்திரவங்களும் இருந்தபோதிலும், இவர்கள் தமது பணியைத் தொடர்ந்து செய்தனர். இவர்களுக்கு உதவிட மிஷெனரிகள் சிலர் இத்தீவுகளுக்கு வந்தனர். 1850 இல் தொங்கா தீவுகளின் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாகினர்.

பிற்காலத்தில் வேறு மிஷன்களைச் சேர்ந்தவர்களும் இத்தீவுகளில் பணியாற்றியுள்ளனர். 1828 இல் சமோஆ தீவுகளைச் சேர்ந்த ஒருவர் தொங்கா தீவுக்குச் சென்றிருந்தபோது கிறிஸ்தவனாகியதோடு, தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றபின் அங்கு சுவிசேஷத்தை அறிவித்து பலரை கிறிஸ்தவர்களாக்கியுள்ளார். பின்னர் 1830 இல் லண்டன் மிஷெனரி சங்கம் இத் தீவில் தனது ஊழியத்தை ஆரம்பித்தது. 1855-த்திற்குப் பின் மெதடிஸ்ட் மிஷெனரி சங்கம் இத்தீவுகளின் ஊழியத்தில் முக்கிய பங்கு வகிக்கத்தொடங்கியது. 1850 அளவில், முழு வேதாகமமும் சமோஆ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தொங்கா தீவுகளில் ஊழியம் செய்த மிஷெனரிகள் அத்தீவில் கிறிஸ்தவர்களாகியவர்களுடன் 1835 இல், ஃபிஜித் தீவுகளுக்குச் சென்றனர். அங்கு கடும் எதிர்ப்புகளுக்கும் உபத்திரவங்களுக்கும் மத்தியில் இவர்கள் ஊழியம் செய்தனர்.

ஆரம்பத்தில் ஒருசிலர் மட்டுமே கிறிஸ்தவர்களானார்கள். ஃபிஜித் தீவுகளில் மிஷெனரிகளுக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அங்கு ஒரே ஒரு மிஷெனரி மட்டுமே இரத்த சாட்சியாக மரித்துள்ளார். ஆனால், அவருக்கு உதவிய 9 ஃபிஜித் தீவு வாசிகள் 1867இல் கொல்லப்பட்டு அத்தீவின் நரமாமிசப் பட்சினிகளுக்கு உணவானார்கள். அதே போல, அங்கு சென்ற தொங்கா தீவு கிறிஸ்தவர்களும் இதேவிதமாக மரித்துள்ளனர். ஆனால், 1854இல் ஃபிஜித் தீவுகளின் தலைவனொருவன் இரட்சிக்கப்பட்டதன் பின், இத்தீவுகள் கிறிஸ்தவமையமாகத் தொடங்கின. இத்தீவுகளுக்குச் சென்ற மிஷெனரிகள் ஒவ்வொருவரும் தாம் பணியாற்றிய பிரதேச மக்களது மொழிகளைக் கற்று, அம்மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்க்கத் தொடங்கினர். 1848இல், இத்தீவுகளின் பிரதான மொழியான பாவன் மொழியில் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது.

பசிபிக் தீவுகளில் இன்னுமொரு தீவுக்கூட்டமான புதிய ஹெப்ரைடஸ் எனும் தீவுகளுக்கு முதன் முதலாக 1839இல் சென்ற மிஷெனரிகள் இருவரும் அத்தீவில் கால் வைத்தவுடனேயே கொல்லப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு உணவாகினர். இவர்களில் ஒருவர், 20 வருடங்களாக சொசைட்டி தீவுகளில் பணி யாற்றிய லண்டன் மிஷெனரி சங்கத்தைச் சேர்ந்த ஜான் வில்லியம்ஸ் ஆவார். இதன் பின்னர், சமோஆ தீவுகளைச் சேர்ந்த பல கிறிஸ்தவர்கள் இத்தீவுகளுக்கு மிஷெனரிகளாகச் செல்லத்தொடங்கினர். 1848 இல், பிரஸ்பிட்டேரியன் மிஷெனரி சங்கத்தைச் சேர்ந்த ஜான் கெடிய் என்பவர் இத்தீவுகள் ஒன்றிற்குச் சென்றார். பல இக்கட்டுகளுக்கு மத்தியிலும் இவர் அங்கு கிறிஸ்தவத்தை வளரச்செய்ததோடு, அப்பிரதேச மக்களது மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து புதிய ஏற்பாட்டை அம்மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இது, 1860 இல் வெளி வந்தது.

1901ஆம் ஆண்டில், இத்தீவுகளின் 22 மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. 1852 இல், கெரோலினா தீவுகளுக்கு அமெரிக்கன் போர்ட் சங்கத்தின் மிஷெனரிகள் சென்றனர். 1958 அளவில், ஜெர்மன் நாட்டு மிஷெனரிகள் இத்தீவுகளின் மொழிகளுள் ஒன்றான ட்ரூக் மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். 1850 இல், நியூசிலாந்து நாட்டு ஆங்கிலிக்கன் மிஷெனரி சங்கம் சொலமன் தீவுகளில் தமது ஊழியங்களை ஆரம்பித்தது. இதன்பிறகு ஏனைய மிஷன் சங்கங்களும் இப்பகுதிகளில் சுவிசேஷத்தைப் பரப்பின.

பசிபிக் தீவுகளிலேயே பெரிய தீவான பப்புவா நியூகினியில் 1871 இல் லண்டன் மிஷெனரி சங்கம் தனது பணிகளை ஆரம்பித்தது. அதன் பிறகு மெதடிஸ்ட், லூத்தரன், ஆங்கிலிக்கன் மற்றும் சுயாதீன சபை மிஷன்களும் அங்கு பணியாற்றத் தொடங்கின. லண்டன் மிஷெனரி சங்கத்தினது முயற்சி காரணமாக 1956 இல் பப்புவா நியூகினி தீவின் இருமொழிகளில் புதிய ஏற்பாடு வெளிவந்தது. மெதடிஸ்ட் மிஷெனரிகள் முழு வேதாகமத்தையும் இன்னுமொரு மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். 1956இல் வைக்கிளிப் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் இத்தீவுக்குச் சென்று, அங்கு 521 வித்தியாசமான மொழிகளைப் பேசும் மக்கள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் 83 கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பசிபிக் தீவுகளில் நூற்றுக்கணக் கான மிஷனரிகள் இரத்தசாட்சிகளாக மரித்துள்ளனர். அப்படியிருந்தும், மிஷனரிகள் அத்தீவுகளின் மக்களை இரட்சிப்புக்குள் கொண்டு வந்துள்ளதோடு, அம்மக்களுடைய மொழிகளில் வேதாகமத்தையும் மொழி பெயர்த்துள்ளனர்.

மத்திய அமெரிக்க மொழிகளில் வேதாகமம்

ஐக்கிய அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட பகுதியே மத்திய அமெரிக்கா என அழைக்கப்படுகின்றது. இதில், மெக் சிகோ, கெளத்தமாலா, ஹொண் டூரஸ், எல் சல்வடோர், நிக்கரகுவா, கொஸ்ட்டரிக்கா, பனாமா எனும் நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் பலதரப்பட்ட கோத்திரங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மிஷனரிகள் இந்நாடுகளுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்லத் தொடங்கினர். இவர்களில் இந்நாடுகளின் மக்களது மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், வில்லியம் டெளன்சென்ட் என்பவராவார். இவரது முயற்சியினால் உருவான வைக்கிளிப் முகாம், வேதாகமம் உலகின் பல கோத்திர மக்களது மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கான வழிகளைத் திறந்துள்ளது.

மூன்றாம் உலக நாடுகளில் வாழும் பலதரப்பட்ட கோத்திரங்களைச் சேர்ந்த மக்களது மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவதற்குக் காரணமாயிருந்த வில்லியம் டெளன்சென்ட், 1896 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா எனுமிடத்தில் பிறந்தார். இவர் 1917 இல் மத்திய அமெரிக்காவிலுள்ள கெளத்தமாலாவிற்கு மிஷனரியாகச் சென்று, அங்கு ஸ்பானிய மொழி வேதாகமங்களை விற்பனை செய்து வந்தார். எனினும், நாளடைவில் அவ் வேதாகமங்களால் கெளத்தமாலாவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கக்சிகுவெல் எனும் மொழியைப் பேசும் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். கக்சிகுவெல் எனும் மொழி அச்சமயம் பேச்சுமொழியாக மட்டுமே இருந்தது. அதற்கு எழுத்துக்கள் இருக்கவில்லை. அம்மொழி பேசிய மக்களோடு வாழ்ந்து அவர்களது மொழியை அறிந்துகொள்ள முற்பட்ட டெளன்சென்ட், அம்மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து வேதாகமத்தை அம்மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என தீர்மானித்தார். பத்துவருடக் கடும் முயற்சியின் பின், 1929 இல் டெளன் சென்ட் புதிய ஏற்பாட்டை கக்சிகுவெல் மொழியில் மொழிபெயர்த்தார்.

அதன்பின்னர் கெளத்தமாலாவிலிருந்த ஏனைய கோத்திர மக்களது மொழிகளுக்கும் எழுத்து வடிவம் கொடுத்து அம்மொழிகளிலும் வேதாகமத்தை மொழிபெயர்க்க டெளன் சென்ட் தீர்மானித்தார். எனினும், அவர் அங்கத்தவராக இருந்த மிஷெனரிச் சங்கம் அதற்கு அனுமதி கொடுக்காதமையினால், அச்சங்கத்திலிருந்து விலகி, 1934 இல் வைக்கிளிப் முகாமை ஆரம்பித்தார். இம் முகாமின் நோக்கம், வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டிராத கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்ப்பதாகும்.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2015)

1. ஜூலை – ஆகஸ்டு மாத தியானபுத்தகத்தில் ஜூலை மாதத்தின் தியானங்கள் ஆதியாகமத்திலிருந்து எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளின் தியானங்களும் உண்மையிலேயே எனது ஆவிக்குரிய வாழ்விற்கு பெரும் உதவியாக இருந்தது. தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Xavier, Chennai.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் கிடைக்கப்பெற்றேன். ஜூலை மாதத்தில் ஆதியாகமம் புத்தகத்தின் பகுதிகளை எடுத்து ஒவ்வொரு நாளும் வாசித்து ஆவிக்குரிய மன்னாவை பெற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மேலும் ஆகஸ்டு மாதத்தில் யோனா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து சத்தியங்களை அறிந்து கர்த்தரைத் துதித்தேன். ஞாயிறு பிற்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சியையும் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியையும் பார்க்க ஆவலோடு காத்திருப்பேன்.

Mr.Arul Jeganathan, Thiruppathur.

3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை தினமும் வாசித்து ஆசீர்வாதத்தைப் பெற்று கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs. Leelabai, Madurai.

4. சத்தியவசனம் இருமாத இதழ் தவறாமல் கிடைக்கிறது. நான் இதை ஒவ்வொருநாளும் மிகுந்த அக்கறையுடன் படித்து அதில் இருக்கும் முக்கியமான வசனங்களையும் குறிப்புகளையும் எழுதி வைத்து வருகிறேன். புத்தகவெளியீடு மேன்மேலும் வளரவும் ஜெபிக்கிறேன். இந்தமாதம் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய தியானங்கள் மறக்க முடியாதவை.

Mrs.Lalitha, Arakkonam.

5. Greetings in Jesus Name. I am regularly receiving your monthly Magazine, Anuthinamum Christhuvadan Tamil in time and praise God for that. From the bottom of my heart, I thank you personally for that Magazine. It is very useful to my spiritual life. We are daily remembering you, your family and also the ministry in our prayers. May God bless you.

Mr.S. Mathews, Vellore.

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை வேதாகமத்தை ஒழுங்கும் கிரமமுமாக வாசிக்க உதவியாயிருப்பதை நினைத்து ஆண்டவரைத் துதிக்கிறேன். ஜூலை மாதத் தியானத்தில் அர்த்தமும் அந்த தியானமும் மிக ஆசீர்வாதமாகவும், வேதாகமத்தை இன்னும் அதிகமாக வாசிக்கவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவதற்கு பிரயோஜனமாகவும் இருந்தது. எழுதிய தேவபிள்ளைகளுக்கு நன்றி. என்னுடைய சகோதரர் ஒருவருக்கும் இதை அறிமுகப்படுத்தியுள்ளேன்.

Mrs.E. Jeyaseeli Edward, Vadipatti.

page 1 of 2