Daily Archives: April 2, 2019

ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 2 செவ்வாய்

நீதிமான்களுடைய கொம்புகளோ உயர்த்தப்படும் (சங்.75:10) சத்தியவசன ஊழியத்தை தங்கள் அன்பின் உதாரத்துவமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கி வருகிற அனைத்து விசுவாசபங்காளர்கள் ஆதரவாளர்கள் குடும் பங்களை கர்த்தர் உயர்த்தி ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

நமக்காக வேண்டிக்கொள்ளும் ஒருவர்

தியானம்: 2019 ஏப்ரல் 2 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 8:18-27

‘ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்’ (ரோ.8:27).

சிறுவர் பாடசாலையின் கலை விழாக்களிலே எல்லாப் பிள்ளைகளுமே பங்கெடுப்பார்கள். அதற்குப் பெற்றோரும் உறவினரும் அழைக்கப்படுவார்கள். மேடையிலே பிள்ளைகள் வந்து பாடும்போதும், கதை சொல்லும்போதும், அவரவரின் பெற்றோரின் வாய்களும் பிள்ளைகள் சொல்லுவதை அல்லது பாடுவதை முணுமுணுக்கும். தற்செயலாக யாரும் சொல்லாமல் நின்றுவிட்டாலும், இப்பெற்றோர் இங்கிருந்து சொல்லிக் கொடுக்கவே எத்தனிப்பர்.

நாம் வேண்டிக்கொள்ளும்போது நமக்கு முடியாதபோது, வார்த்தைகள் வராதபோது, நாம் சோர்ந்துபோயிருக்கும்போது, ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடுகூட நமக்காக வேண்டிக்கொள்ளுகிறார். ஆவியானவர் நமது பல வீனங்களில் நமக்கு உதவி செய்கிறவர். நமது யாவற்றையும் அவர் அறிந்திருக்கிறவர். அவர் நம்முடன்கூடவே இருக்கிறவர். ஆகவே நாம் ஜெபிக்கும்போது தனியாக இல்லை; ஆவியானவரும் நம்மோடு கூடவே உதவி செய்பவராக இருக்கிறார். இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். தேவனுக்கு ஏற்றபடி ஜெபிக்கமுடியாதபோதும் ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். தேவனுடைய கட்டளைக்கு அமைந்ததாக, அவரது சித்தத்திற்கு ஒத்ததாக, அவரைப் பிரியப்படுத்துகிறதான ஜெபங்களை ஏறெடுக்க ஆவியானவரை நாம் சார்ந்திருப்போமாக. அக்கிரம சிந்தையோடும், பாவத்தோடும் ஏறெடுக்கும் எந்த ஜெபமும் தேவசமுகத்துக்கு ஏறெடுக்கப்படாது. அங்கே ஆவியானவரின் உதவியும் நமக்குக் கிடைக்காது.

நாம் சோர்ந்துபோகும் வேளைகளில், துக்கம் தொண்டையை அடைத்திருக்கும் வேளைகளில், நம்மால் ஜெபிக்கமுடியாத வேளைகளில் நம்மோடு கூட இருந்து நமக்காக ஜெபிக்க, நாம் ஜெபிப்பதற்கு உதவிட ஆவியானவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கு எவ்வளவு ஆறுதலைக் கொடுக்கிற நல்ல செய்தி! ஆண்டவர் இயேசுவை ஆவியானவர்தாமே வனாந்தரமான இடத்திற்கு கொண்டுசென்றார். அங்கே அவர் நாற்பது நாட்கள் புசியாமல் இருந்தபோது, சாத்தானின் சோதனையை ஜெயித்தபோது எல்லா வேளைகளிலும் அவருக்கு ஆவியானவரின் உதவி இருந்தது என்பது புரிகிறதல்லவா. அதுபோலவே, நமக்கு உதவிட ஆவியானவர் நம்மோடும் இருக்கிறார். ஆமென்.

“நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். …பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத். 10:19,20).

ஜெபம்: அன்பின் தேவனே, சோர்ந்துபோன எங்கள் ஜெபவேளையில் ஆவியானவரின் உதவியைத் தந்து எங்களை பெலப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. ஆமென்.

சத்தியவசனம்