ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 31 ஞாயிறு
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன் (யோவான்.14:18) என்று திருவுளம்பற்றின தேவன்தாமே திக்கற்ற சூழ்நிலைகளிலும் மனம் தளர்ந்த நேரங்களிலும், நமது சுகவீனங்களிலும் நம்மை கைவிடாமல் நடத்திவந்த பாதைகளுக்காகவும் அவரது உருக்கமான இரக்கங்களுக்காகவும் நன்றி செலுத்தி துதிப்போம்.
உணர்வுடன் கலந்தது!
தியானம்: 2019 மார்ச் 31 ஞாயிறு | வேத வாசிப்பு: யாக்கோபு 5:13-18
“உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் பண்ணக்கடவன்; …மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்” (யாக். 5:13).
ஒரு பிள்ளை தனக்கு ஆபத்து என்றவுடன் உடனடியாக எப்படி தன் பெற்றோரை அழைக்கிறானோ, அப்படியேதான் நமது ஜெபமும் இருக்கவேண்டும். நமக்கு ஒரு அவசரம் என்றதும், அறைக்குச் சென்று, முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணுவதற்கு முன்னர், அந்த இடத்திலேயே நின்று, ‘ஆண்டவரே இந்த நிலையில் எனக்கு உதவி செய்யும்’ என்று ஜெபிப்பதுதான் உணர்வுடன் கலந்த ஜெபமாக இருக்கமுடியும்.
எந்நேரத்திலும் நமது இருதயத்திலிருந்து ஜெபம் ஏறெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். யாக்கோபு தன் நிருபத்தில், துன்பப்பட்டால் ஜெபிக்கவும், மகிழ்ச்சியாயிருந்தால் கர்த்தருக்குச் சங்கீதம் பாடவும் சொல்லுகிறார். அதேவேளை ஒருவன் வியாதிப்பட்டால் மருத்துவரிடம் போவது முக்கியம். அத்தோடு சபையின் மூப்பரை வரவழைத்து ஜெபிப்பதின் முக்கியத்துவத்தையும் இங்கே அவர் சுட்டிக்காட்டுகிறார். குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதையும், நீதிமானின் ஜெபம் பெலனுள்ளது என்பதையும் யாக்கோபு எடுத்துரைக்கிறார். எலியா, நம்மைப்போல ஒரு மனிதனாக இருந்துங்கூட அவன் மழைக்காக ஜெபித்தபோது மூன்று வருடங்களும் ஆறுமாதங்களும் மழையில்லாமல் இருந்தும், பின்னர் மீண்டும் அவன் ஜெபித்த போது மழை வந்ததையும்கூட யாக்கோபு குறிப்பிடுகிறார்.
ஆகவே, எந்நேரத்திலும், எல்லாவற்றிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்படுவது முக்கியமானது என்பதேயே மீண்டும் மீண்டும் யாக்கோபு வலியுறுத்துகிறார். எல்லா வேளைகளிலும் ஜெபிக்க நாமும் கற்றுக்கொள்வது அவசியம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் ஜெபித்துவிட்டு, பின்னர் ஜெபத்தைப்பற்றியே நினையாமல் இருப்பது நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவின் குறைவினையே காட்டுகிறது. எந்நேரமும் ஜெபம் நமது உணர்வோடு கலந்ததாக இருப்பின் நாம் பரம பிதாவோடு எந்நேரமும் தொடர்பில் இருக்கிறோம் என்று அர்த்தப்படுமல்லவா.
ஜெபம், நமது வாழ்வில் எந்த இடத்தைப் பிடித்திருக்கிறது? எந்நேரமும் எல்லா சந்தர்ப்பத்திலும் நாம் தேவனோடு பேசிக்கொண்டே இருக்கிறோமா? அல்லது ஜெபத்திற்காக ஒரு இடத்தை ஒழுங்குபண்ணி அதில் மட்டும்போய் ஜெபித்துவிட்டு பின்னர் நமது அன்றாட நடவடிக்கைகளில் ஜெபத்தை மறந்து விடுகிறோமா? சிந்தித்து மனந்திரும்புவோம்.
“அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்” (சங். 55:17).
ஜெபம்: அன்பின் தேவனே, எனது ஜெப ஜீவியத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, என் தேவனுடனான உறவை இனி பலப்படுத்த எனக்கு கிருபையருளும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2019 மார்ச் 30 சனி
கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது (சங்.144:15).
யோசுவா 10,11 | லூக்கா.6:20-49
ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 30 சனி
வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? (யோபு.38:33) அண்டசராசரங்களையும் படைத்து ஆளுகை செய்துவரும் நமதாண்டவர்தாமே பாராளுமன்றத் தேர்தலிலும் எல்லா மாநிலங்களையும் தமது ஆளுகையின் கட்டுப்பாட்டிற்குள்ளே வைத்து தேவசித்தம் மாத்திரமே நிறைவேற உதவி செய்யுமாறு மன்றாடுவோம்.
தேவனே பதில் தாரும்
தியானம்: 2019 மார்ச் 30 சனி | வேத வாசிப்பு: சங்கீதம் 6:1-10
‘கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை எற்றுக்கொள்ளுவார்” (சங். 6:9).
தன் சிநேகிதியின் இரட்சிப்புக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தாள் சுமதி. ஒருநாள் அந்த சிநேகிதி, “உனக்குச் சொல்லுவதற்கு என்னிடம் ஒரு நல்ல செய்தியுண்டு” என்று சுமதிக்கு ஒரு செய்தி அனுப்பினாள். சுமதியும், “முப்பது வருடங்களாகத் தனது சிநேகிதிக்காக ஜெபித்த ஜெபம் கேட்கப்பட்டுவிட்டது” என்று தேவனுக்கு நன்றி கூறினாள். ஆனால் மறுநாள் அவளைத் தேடிவந்த சிநேகிதியோ எதிர்மாறான செய்தி ஒன்றைச் சொன்னபோது, சுமதிக்கு, “இது ஏன்?” என்று தேவனிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை.
இங்கே தாவீதும் கர்த்தரை நோக்கிக் கதறுகிறார்: “என்னைக் கடிந்து கொள்ளாதேயும், இரக்கமாயிரும், தண்டியாதேயும். எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்” என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறார். “நான் பெலனற்றுப் போனேன், துயரத்தில் என் கண் குழிவிழுந்து போயிற்று, என் ஆத்துமா வியாகுலப்படுகிறது” என்று தனது நிலையைக் கூறி கதறுகிறார். “படுக்கையில் என் கண்ணீரால் கட்டிலை நனைக்கிறேன்” என்று தன் துக்கத்தின் ஆழத்தினை எடுத்து இயம்புகிறார். ஆனால் இறுதியிலோ ஒரு முடிவுக்கு வருகிறார். “அக்கிரமக்காரரே நீங்கள் எல்லாரும் என்னை விட்டு அகன்று போங்கள். கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்” என்கிறார். முடிவாக, “கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார்” என்ற நம்பிக்கையோடு இச் சங்கீதத்தை நிறைவு செய்கிறார்.
நமது விண்ணப்பத்துக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால் கர்த்தர் அதை மறுத்துவிட்டார் என்று அர்த்தம் கிடையாது. நாம் தொடர்ந்து நம்பிக்கையோடே ஜெபிப்போம். கர்த்தர் இல்லை என்று சொன்னாலும் அதுவும் அவர் நமக்குத் தரும் நன்மையான பதிலே என்று நம்புவோம். இல்லையென்ற பதிலால் நமக்கு வருகின்ற வேதனைகளை உணர்ந்த ஆண்டவராகவே அவர் இருக்கிறார். காரணம், கெத்செமனேயில், “இப்பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால்…” என்று ஜெபித்தபோது கிடைத்த பதிலும் இல்லை என்பதே. ஆக, நாம் ஏன் சோர்வடைய வேண்டும்? நமது ஆண்டவர் அனைத்தும் அறிந்தவர். அவருக்கு எப்போது, எப்படி பதிலளிப்பது என்பது நன்றாகவே தெரியும். ஜெபத்திலே போராடி சோர்ந்து போயிருக்கிறோமா? திடன்கொள்ளுவோம்! கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர். அவர் நன்மை மாத்திரமே செய்வார். நாம் ஜெபிப்போம். பதிலளிப்பதோ அவரது சித்தம்.
“தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).
ஜெபம்: ஜெபத்தைக் கேட்கிற என் தேவனே, எனக்கு நன்மையானபடி பதிலளிக்கிறீர் என்ற நிச்சயத்தை இன்று எனக்குத் தந்தபடியால் உம்மை துதிக்கிறோம். ஆமென்.