Daily Archives: March 4, 2019

ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 4 திங்கள்

“இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்” (2இரா.7:9) இம்மாதத்தின் அனைத்து வாரங்களிலும் ஒலி/ஒளிபரப்பாக உள்ள வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தடையின்றி நடத்தப்படுவதற்கும், அதற்கு தேவைப்படும் அனைத்து பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும், கர்த்தர் செய்ய நினைத்த காரியம் தடைபடாது நிறைவேற்றப்படுவதற்கும் ஜெபிப்போம்.

புதிய மாற்றத்தால்…

தியானம்: 2019 மார்ச் 4 திங்கள் | வேத வாசிப்பு: லூக்கா 19:1-10

‘…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின’ (2கொரி.5: 17).

மனித மாம்சத்தை உண்ணும் ஒரு சிவப்பு இந்தியன், ஒரு இடத்தில் அமர்ந்திருந்து வேதப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாசித்த வண்ணம் இருந்தான். அவ்வழியாக வந்த ஒரு சுற்றுலாப் பயணி, “இப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று இவ்வளவு ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று அந்தச் சிவப்பு இந்தியனைப் பார்த்து ஏளனமாகக் கேட்டான், அப்பொழுது அந்த மனிதன், “நான் இந்தப் புத்தகத்தைப் படித்திராவிட்டால், இன்று இவ்விடத்தை விட்டு நீ உயிரோடே சென்றிருக்கமாட்டாய்” என்றானாம். ஆம், ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும்போது அவனது வாழ்வு முற்றிலுமாக மாறிவிடுகிறது.

நாம் கிறிஸ்துவுக்குள்ளாக புதிய சிருஷ்டிகள் என்று சொல்லுவோமானால், நம்மிலும் மாற்றம் காணப்படவேண்டியது அவசியமல்லவா? மாற்றம் நமது உள்ளான மனதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில், எல்லாவிதமான பொல்லாத பாவசிந்தனைகளும் உள்ளத்துக்குள்ளிருந்தே வெளிவருகிறது என்று இயேசு சொன்னார். நமது உள்ளம் புதிதாக்கப்படவேண்டும். சிலர், ‘நான் கிறிஸ்துவை அறியும் முன்பு பெரிய பாவங்கள் செய்தேன், பெரிய பொய்களைச் சொன்னேன், ஆனால் இப்போதோ சின்னப் பாவங்கள்தான், அதிலும் எப்பொழுதாவது ஒருதரம் செய்கிறேன். சின்னப் பொய்களை மாத்திரமே சொல்கிறேன்’ என்று சொல்லுவதுண்டு. பாவத்திலே பெரிய பாவம், சிறிய பாவம் என்று ஒன்று உண்டா? தேவனுடைய பார்வையில் பாவம், பாவமே. பாவத்தை தேவன் வெறுக்கிறார், அதை அவர் அருவருக்கிறார்.

அன்று சகேயு, ‘ஆண்டவரே, நான் இதுவரை செய்த அநியாயத்தை இனிமேல் செய்ய மாட்டேன்’ என்று சொல்லவில்லை. இயேசுவும், “அநியாயமாய் உழைத்த பணத்தை உடனே திரும்பக் கொடுத்துவிடு” என்று சொல்லவில்லை. தனது வாழ்வில் ஏற்பட்ட புதிய மாற்றத்தினால், சகேயு தானாகவே தீர்மானம் பண்ணிக்கொண்டான். “ஆண்டவரே, நான் அநியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாய் கொடுக்கிறேன்” என்றான். அவனை வெறுத்த ஜனங்கள் இப்போது ஆச்சரியப்பட்டார்கள். இதுதான் சகேயுவின் வாழ்வில் ஏற்பட்ட புதிய மாற்றம். இதுதான், அவன் தேவனுக்குக் கொடுத்த மகிமை! நமது வாழ்வு மாற்றமடைந்திருப்பது உண்மையானால் அந்தப் புதிய மாற்றத்தால் தேவ நாமம் மகிமைப்படவேண்டும். அந்தப் புதிய மாற்றம் பிறரில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். அது நமது வாழ்வில் நிகழ்ந்ததா?

“தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது” (1 யோவான் 3:9).

ஜெபம்: மகிமையின் தேவனே, என் வாழ்க்கையிலும் நீர் விரும்புகிற மாற்றம் ஏற்படவும் உமக்குப் பிரியமானதைச் செய்யவும் என்னை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்