Daily Archives: March 12, 2019

ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 12 செவ்வாய்

நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:23) அமெரிக்க தேசத்தில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தினாலே ஏராளமான ஆத்தும அறுவடை காண்பதற்கும் அவ்வூழியத்தின் நிதி நெருக்கடிகள் நீங்கி தடையின்றி ஊழியம் செய்யப்படுதவற்கும் ஜெபம் செய்வோம்.

தேவனுக்குச் சித்தமானால்…

தியானம்: 2019 மார்ச் 12 செவ்வாய் | வேத வாசிப்பு: மாற்கு 1:40-45

‘அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, … உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக் கொண்டான்’ (மாற்கு 1 :40).

அந்நாட்களில் ஒருவனிடத்தில் குஷ்டரோகம் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் தனது வீட்டை, சமூகத்தைவிட்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திலேயே வாழவேண்டும். அவன் குணமானாலும் அதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்குக் காண்பித்து ஊர்ஜிதம் செய்த பின்பே அவன் ஊருக்குள் வர முடியும்.

இப்படியான ஒருவனுக்கு சொஸ்தமாவது எத்தனைஅவசியம் என்பது யாருக்கும் புரியும். அப்படியிருந்தும், இந்த மனிதன் இயேசுவிடம் வந்து “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும்” என்று சொல்லும்போது அவன் தனது விருப்பத்தை தேவசித்தத்துக்குள் உள்ளடக்குவதைக் காண்கிறோம். அதாவது தனது விருப்பம் தேவனுடைய சித்தத்திற்குட்பட்டதாய் அமையவேண்டும் என்று அவன் விரும்பினான். இயேசுவோ, “எனக்குச் சித்தமுண்டு; நீ சுத்தமாகு” என்று சொல்லி அவனைக் குணப்படுத்தினார்.

இன்று நாமும் பல விஷயங்களைத் தேவனிடம் கேட்கிறோம். ‘உமக்குச் சித்தமானால்…’ என்றும் சொல்லுகிறோம். ஆனால் எவ்வளவாய் அதை நமது வாழ்வில் உணர்ந்து சொல்லுகிறோம் என்பது கேள்விக்குறிதான். நாம் பல தடவைகளிலும் தேவனுக்கு வரையறைபோட்டும் காரியங்களைக் கேட்கிறோம். இயேசு, பிதாவின் சித்தத்தைச் செய்யவென்று உலகிற்கு வந்தபோது, அவர் தான் படப்போகும் பாடுகளை நினைத்து எந்த வரையறையும் முன்வைக்கவில்லை. பிதாவின் சித்தத்தை முழுமையாக நிறைவேற்றி நமக்கு விடுதலையைப் பெற்றுத்தந்தார். அப்படியானால் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எவ்வளவுக்கு அவரது சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து, அதற்கு இணங்கி நமது வாழ்வைக் கொண்டு செல்லுகிறோம்?

கன்னிமரியாள் பரிசுத்தாவியினால் கர்ப்பவதியாவாள் என்று தேவதூதன் சொன்னபோது, அதை ஏற்றுக்கொள்ள மரியாளுக்குக் கடினமாக இருந்தாலும், “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை; தேவனுடைய சித்தப்படியே ஆகக்கடவது” என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்ததைக் காண்கிறோம். அந்த அர்ப்பணம் நம்மிடம் உண்டா? இந்தத் தபசுகாலங்கள் தேவனண்டைக்கு நம்மை கிட்டிச்சேர்க்கும் நாட்களாய் அமைய வேண்டுமானால், “பிதாவே, உமது சித்தம் ஆகட்டும்” என்று நம்மை விட்டுக்கொடுப்போமாக. நமது வாழ்வில் மாற்றப்பட வேண்டியவற்றை மாற்றவும் ஒப்புக்கொடுப்போமாக.

“ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” (எபே. 5:17).

ஜெபம்: “பிதாவே, உந்தன் சித்தம் என்னிலே, எந்தன் இஷ்டம் அதுவே” என்று என்னை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்