ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 3 ஞாயிறு

“இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்” (லூக்.22:19) நமக்காக தம்மையே ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவின் சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் ஜீவபலியாக கர்த்தருக்கு நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

இன்னும் சிலுவையா?

தியானம்: 2019 மார்ச் 3 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 19:1-15

‘அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்” (யோவான் 19:16).

அநேக தடவைகள் உணர்த்தப்பட்டும், சத்தியத்தைப் புரிந்துகொண்டும், இன்னும் கடின இருதயத்தோடு கீழ்ப்படிய மனதற்றவர்களாக நம்மில் எத்தனைபேர் இன்னமும் ஆண்டவரையே குறை கூறுகிறோம்! அன்று பிலாத்துவும் இயேசுவுக்குச் சிலுவை தீர்ப்புக்கொடுத்தான். எனினும், இயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்கு நன்கு தெரியும். அவனே தனது வாயால், ‘இயேசுவிடம் குற்றத்தைக் காணேன்’ என்றும் சொன்னான். ஆனாலும் அவன் இயேசுவை விடுதலை செய்யாமல், சிலுவையைக் கொடுத்தது ஏன்?

ஆம், பிலாத்து ஜனங்களுக்குப் பயந்தான், இராயனை பகைக்கப் பயந்தான். தன் பதவி பறிபோய்விடுமோ என்றும் பயந்திருப்பான். இவையெல்லாமே அவனது கண்ணை மறைத்து விட்டது. தனக்கு முன்னாலே இருந்த உண்மைகளை அவன் விழுங்கிப் போட்டவனாக பொய்யையே தீர்ப்பாகச் சொன்னதால், இயேசுவுக்கு சிலுவை கொடுக்கப்பட்டது. “இயேசு சிலுவையில் மரிப்பதற்காகத்தானே வந்தார். ஆகவே அவருக்குச் சிலுவையைக் கொடுக்க ஒரு பிலாத்து இருந்துதானே ஆகவேண்டும்” என்று நம்மில் சிலர் எண்ணலாம். அது உண்மைதான். ஆனாலும், பிலாத்து எடுத்த தீர்மானம் முற்றிலும் சுயநலம் கருதியதாய் அவனது சொந்தத் தீர்மானமாயிருந்ததே தவிர, தேவனால் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாயிருக்கவில்லை. பிலாத்து தன்னிலே குற்றம் சுமராதபடி தன் கையைக் கழுவி இலகுவாகத் தப்பித்துக்கொண்டான் என்பதே உண்மை.

நாமும் பல வேளைகளில் தவறு என்று தெரிந்தும், சுய நன்மை கருதி, அல்லது நாம் தப்பிக்கொள்ள வேண்டுமென்று அத் தவறைச் செய்துகொண்டே இருப்பதுண்டு. இது தவிர்க்க முடியாத ஒன்று என்று சாக்குச்சொல்வதுமுண்டு. பாவத்தை விட்டுவிட மனதில் லாமல், விரும்பிச் செய்வதுமுண்டு. எல்லாவற்றையும் அறிந்தும், ஏற்றுக்கொண்டும், பின்னர் பின்மாற்றம் அடைந்து தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தேவ அன்பை உதாசீனம் செய்வதுமுண்டு. இவைகளெல்லாவற்றையும் நாம் மீண்டும் மீண்டும் செய்யும்போது, வேதனை நிறைந்த அந்தச் சிலுவையை நாம் ஆண்டவருக்குக் கொடுக்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. அவர் நிமித்தம் சிலுவை சுமக்க அழைக்கப்பட்ட நாம், நமது நடத்தையாலும், செயல்களினாலும் தேவ நாமத்துக்கு இழுக்குக் கொண்டு வரலாமா? இயேசுவுக்கு இன்னும் சிலுவையைக் கொடுக்கலாமா?

“அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும் பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்” (ஏசா.53:3).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, தவறு என்று தெரிந்தும் விட்டுவிட முடியாத ஒருசில காரியங்களினாலே உமது நாமத்துக்கு இழுக்கை ஏற்படுத்தாமல் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகளை பாக்கியமாக ஏற்றுக்கொள்ளும் கிருபையைத் தாரும். ஆமென்.