ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 27 புதன்

அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை (1இரா.8:56) வார்த்தையில் உண்மையுள்ள ஆண்டவர்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தைத் தந்தருளி ஊழியங்களை ஆசீர்வதித்திடவும் குறைவுகள் நீங்கி தேவநாமம் மகிமைப்பட வேண்டுதல் செய்வோம்.

நாள் முடிவில்

தியானம்: 2019 மார்ச் 27 புதன் | வேத வாசிப்பு: எபேசியர் 5:6-17

‘அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்’ (மத். 14:23).

ஒவ்வொரு நாளும் நாம் படுக்கைக்குச் செல்லும்போது, நாம் வாழுவதற்கு இன்னுமொரு நாள் உண்டோ என்ற நிச்சயமற்றவர்களாகவே செல்கிறோம். மீண்டும் ஒருநாள் கிடைத்ததும் அதை நமது இஷ்டம்போல் வாழ்ந்துவிடுகிறோம். ஒவ்வொரு நாளையும் ஆண்டவர் தம் கிருபையால் நமக்குத் தருகிறார் என்று நாம் சிந்திப்பது அரிது. ஒவ்வொரு நாள் முடிவிலும் தான் செய்ததை, தன்னை மதிப்பாய்வு செய்வதாக ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

“வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைக்கு உடன் படாமல் அவற்றைக் கடிந்துகொள்ளுங்கள். ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்கள்போலக் கவனமாய் நடவுங்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று அறிந்துகொள்ளுங்கள்.” பவுல் இப்படியாகப் பல ஆலோசனைகளைத் தந்திருக்கிறார்.

ஒருநாளில் நாம் செய்பவை, பேசுபவை, எல்லாவற்றிலும் இவ்விதமான நல்ல ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது மிகச் சிறந்தது. ஆண்டவருக்குப் பிரியமான வாழ்வு வாழுகிறோமா? நாள்முடிவில் அந்நாளை எப்படி கழித்தோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கிறோமா? ஆண்டவராகிய இயேசுகூட நாள் முழுவதும் மிகவும் பரபரப்பாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்தாலும், சாயங்காலமாகும்போது ஒரு மலையின் மேல் ஏறி, ஜெபம் பண்ணுவதற்கு தனித்திருந்தார் என்று வாசிக்கிறோம். இயேசுவின் வாழ்வில் சாயங்கால வேளையில் அப்படியொரு அமைதிநேரம் இருந்திருக்குமானால், நமக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

நாள் முடிவில் நாம் செய்வது என்ன? தொலைக்காட்சிப் பெட்டி முன்பாக அமர்ந்திருக்கிறோமா? வீடு வந்த களைப்புக்கு உண்டு படுக்கைக்குச் செல்கிறோமா? குடும்பத்தோடு நேரம் செலவிடுகிறோமா? எது செய்தாலும், அந்த நாளை மதிப்பிடும்போது, வரவிருக்கும் புதிய நாளை இன்னமும் சிறப்பாகக் கர்த்தருக்குள் வாழலாம். ஒவ்வொரு நாளும் நமக்குக் கிருபையாகக் கிடைப்பது என்பதை மறந்திடவேண்டாம்.

“நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே, உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந் தோன்றிப் பின்பு… புகையைப் போலிருக்கிறதே.” (யாக்.4:14).

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, என் மனமோ, வாழ்வோ உலகத்தின் பக்கம் சாய்ந்து விடாதபடிக்கு, சாயங்கால வேளையிலோ அல்லது ஒரு அமைதியான நேரத்திலோ தேவ பாதத்தில் அமர்ந்து என்னைப் பரிசோதித்துப் பார்க்க அர்ப்பணிக்கிறேன். ஆமென்.