ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 25 திங்கள்
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர் (சங்.90:1) கன்னியாகுமரி மாவட்டத்திற்காகவும் அங்குள்ள கிறிஸ்தவர்களுக்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்துக்கொண்டே இருக்கும் எதிரான இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படவும் கர்த்தரே அடைக்கலமாக இருந்து பாதுகாத்து வழிநடத்த ஜெபிப்போம்.
முக்கிய தடை
தியானம்: 2019 மார்ச் 25 திங்கள் | வேத வாசிப்பு: தானியேல் 9:20-27
‘ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும், எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்’ (தானி. 9:8).
“நான் ஜெபித்தால் ஆண்டவர் கேட்பாரோ தெரியவில்லை, எனவே எனக்காக நீங்கள் ஜெபியுங்கள்” என்று ஒருவர் சொன்னபோது, ஜெபத்தை ஆண்டவர் கேட்காமற் போவதற்கு வேதாகமம் கூறும் காரணங்கள் தான் என்ன என்பதை நான் யோசித்துப் பார்த்தேன்.
தானியேலின் ஜெபமோ உடனடியாகவே கேட்கப்பட்டு, காபிரியேல் தூதன் அவனோடு வந்து பேசுவதையும் காண்கிறோம். அவன் சொல்வதாவது, “தானியேலே, நீ பிரியமானவன். ஆதலால் நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கியபோதே கட்டளை வெளிப்பட்டது.” தானியேலின் ஜெபத்தைப் பார்த்தால், அங்கே பாவிகள் என்ற உணர்வும், பாவ மன்னிப்பின் ஜெபமும், தாங்கள் வெட்கத்துக்குரியவர்கள் என்ற எண்ணமும் இருப்பதைக் காண்கிறோம். எந்தவிதமான பெருமைக்கோ, பரிசுத்தவான்கள் என்ற எண்ணத்திற்கோ, அல்லது மேன்மையானவர்கள் என்ற உயர்ந்த சிந்தனைக்கோ அங்கே இடமிருக்கவில்லை. முழுமையும் தாழ்மையாக, தேவனை உயர்த்துவதான ஒரு வேண்டுதலின் ஜெபமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
தேவன் நமக்குச் செவிகொடுக்க முடியாதபடிக்குப் பெரும் தடையாக இருப்பது பாவம். “பெருமையுள்ளவர்களுக்கு தேவனே எதிர்த்து நிற்கிறார்” என்று வேதத்தில் வாசிக்கிறோம். எனவே பாவத்தோடும், பெருமையோடும் ஆண்டவரின் சமுகத்திற்குச் சென்று விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் தேவ சமுகத்திற்கு நிச்சயமாகவே ஏறெடுக்கப்படமாட்டாது. ஏசாயா தீர்க்கரின் புத்தகத்தில், இரட்சிக்கக்கூடாதபடிக்கு அவருடைய கைகள் குறுகிப்போகவும் இல்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவிகள் மந்தமாகவுமில்லை. நம்முடைய பாவங்களும் அக்கிரமங்களுமே அவர் நமக்குச் செவி கொடுக்க முடியாதபடி தடையாகவுள்ளது என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.
எனவே நமது ஜெபங்கள் கேட்கப்படவேண்டுமானால், நமது வாழ்வு தேவனுக்கு உகந்ததாக இருக்கவேண்டியது மிக அவசியம். நமது தேவைகளுக்காகவும், ஆபத்து நேரத்திலும் மட்டும் தேவனைத் தேடுவது என்பது ஒரு போலியான மாய்மாலமான ஒன்றாகவே இருக்கும். ஆண்டவரின் பிள்ளைகள் எப்போதுமே அவருடன் ஜெப உறவில் இருப்பார்கள். தேவசமுகத்தில் நம்மை ஆராய்ந்து அவருக்கு உகந்த வாழ்வை வாழ்வோம்.
“வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது” (நீதி. 28:9).
ஜெபம்: அன்பின் தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழிகளை என்னிடத்திலிருந்து களைந்துபோட என்னை உம் சமுகத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.