Daily Archives: April 7, 2019

ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 7 ஞாயிறு

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார் (1யோ.3:20) சகலத்தையும் அறிந்த தேவனை நினைவுகூரும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் நம்மை நாமே சோதித்து அறிந்து பங்குபெற நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

தேவ ஆலோசனை

தியானம்: 2019 ஏப்ரல் 7 ஞாயிறு | வேத வாசிப்பு: 1சாமுவேல் 23:1-5

‘அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்’ (1சாமு. 23:4).

தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து, இஷ்டத்துக்குத் தீர்மானங்கள் எடுத்து, கஷ்டங்களை அனுபவித்து, தங்கள் வாழ்வையே அழித்துப்போட்ட பலர், வேதத்திலும் சரி, நமது அன்றாடக வாழ்விலும் சரி நமக்கு உதாரணமாக இருக்கிறார்கள். அப்படியிருக்க, நாம் இன்னமும் அவ்வழியில் நடக்கலாமா?

தாவீது சிறுவயது முதற்கொண்டு அவனுக்குத் தேவனோடு நெருங்கிய ஒரு உறவு இருந்தது. ஆட்டிடையனாக இருந்தபோதே ஆடுகளைத் தாக்கவந்த கரடி, சிங்கத்திடம் இருந்து தன்னைத் தேவனே காப்பாற்றினார் என்று தாவீது தன் அனுபவத்தை சவுல் ராஜாவிடம் பகிர்ந்துகொள்கிறான். இப்போது அவன் ராஜாவாக வந்து ஒரு போருக்குப் போகுமுன்பும், தேவனை நோக்கியே ஆலோசனை கேட்பதைக் காண்கிறோம். “அப்போது நான் சிறுவனாக இருந்தேன், இப்போது நான் ராஜாவாகிவிட்டேன்; இனி எனக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை” என்று தாவீது இறுமாப்பாய் நடந்துகொள்ளவில்லை. பெலிஸ்தரோடு சண்டைக்குப் போகலாமா என்று கர்த்தரிடம் உத்தரவைப் பெற்ற பின்பே தாவீது யுத்தத்திற்குச் செல்லுவதைக் காண்கிறோம்.

முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது நாம் யாருடைய ஆலோசனையை நாடுகிறோம்? தேவ ஆலோசனைக்கு நமது வாழ்வில் எந்த இடத்தைக் கொடுத்துள்ளோம்? எல்லா வழிகளையும் தேடி, ஒன்றும் சரிவராத பட்சத்தில் தேவ பாதத்தைத் தேடிச் செல்கிறவர்கள் பலர். நமது தேவனுக்கு இன்னுமொரு பெயர், ‘ஆலோசனைக் கர்த்தர்’. அப்படியிருக்கும்போது, அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவரது ஆலோசனையைக் கருத்திற்கொள்ளாமல் விடலாமா? நமக்கு ஆலோசனையாக அவரது கற்பனைகள் உண்டு. நம்மை வழிநடத்தும்படிக்குச் சத்திய ஆவியானவர் நம்மோடு கூடவே இருக்கிறார். அப்படியிருந்தும் நம் சுயபுத்தியின்மேல் சாய்ந்து, தப்பான முடிவுகளை ஏன் எடுக்கவேண்டும்? பிலேயாம் என்னும் தீர்க்கன் தேவசத்தத்திற்குச் செவிகொடுக்காமல் புறப்பட்டுப் போனபோது, தூதனானவன் பட்டயத்தோடு எதிர்கொண்டு தடுத்தான். அப்பொழுது பிலேயாமின் கழுதை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தது. அதையும் உணராமல் பிலேயாம் கழுதையை அடித்தானே தவிர, தனது தவறை உணரவில்லை. தேவ வழிநடத்துதல் இல்லாமல் ஒரு அடியும் எடுத்து வைக்காதிருப்போமாக.

“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).

ஜெபம்: தேவனே, உமது ஆலோசனைக்கு காத்திராமல் சுயபுத்தியை சார்ந்துவிட்டோம், எங்களை மன்னியும். இனி உம்மையே மாத்திரம் சார்ந்துகொள்வோம். ஆமென்.

சத்தியவசனம்