Daily Archives: August 8, 2019

வாக்குத்தத்தம்: 2019 ஆகஸ்டு 8 வியாழன்

புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலும் ஜெபம் பண்ணவேண்டும் (1தீமோ. 2:8).
சங்கீதம் 25-30 | ரோமர் 6

ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 8 வியாழன்

கடைசி நாட்களில் மனுஷர்கள் துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், சுகப்பிரியராயும் இருப்பார்கள் (2தீமோ.3:4) இந்த தீர்க்கதரிசன வார்த்தையின்படியே சோஷியல் மீடியாக்களினால் பெருகி வரும் பாவங்கள், பாலியல் குற்றங்கள், தேவனுடைய நாமம் தூஷிக்கப்படும் அவமானச் செயல்கள் இவற்றில் ஈடுபடும் கிறிஸ்தவர்களின் மனமாறுதலுக்காக மன்றாடுவோம்.

மேய்ப்பரின் மாதிரி

தியானம்: 2019 ஆகஸ்டு 8 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 10:1-18

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் (யோவான் 13:15).

எல்லாவற்றுக்கும் ஒரு மாதிரி இருக்கிறது. அதுபோலவே, நாமும் நமக்குப் பிடித்தவர்களை நமக்கு மாதிரியாகக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், நமக்குச் சரியான மாதிரி தேவன் ஒருவரே. “காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்” (யோபு 38:41) என்று கர்த்தர் யோபுவிடம் கேட்டார். “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்” என்று இயேசு கூறினார் (மத்.6:26). தமது சகல சிருஷ்டிகளையும் கவனிக்கின்ற தேவனே நமக்கு மாதிரியாயிருக்கிறார்.

ஒரு நல்ல மேய்ப்பன் எப்படியிருப்பான் என்பதை இயேசு விளக்கிக் காட்டினார். நல்ல மேய்ப்பன் தொழுவத்தின் வாசல் வழியாகவே தொழுவத்துக்குள் பிரவேசிப்பான். ஆடுகள் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்குமளவுக்கு அவன் ஆடுகளுக்கு மிக பரிச்சயமானவனாக இருப்பான். அவன் தன் ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் பெயர் வைத்தே கூப்பிடுவான். அவன் ஆடுகளுக்கு முன்னே நடந்துபோவான். ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் அவைகள் அவன் பின்னே செல்லும். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனையும் கொடுக்கத் தயாராயிருப்பான். ஆக, இன்று மேய்ப்பராக, தலைவராகப் பணிபுரிகின்ற நாம் ஆண்டவருடைய இந்த மாதிரியைப் பின்பற்றவேண்டும்.

அத்துடன், ஆண்டவர், தமது சீஷரைவிட்டுப் பிரிகின்ற நேரம் வந்தபோது, அவர்களுடைய கால்களைக் கழுவி, தாழ்மைக்கு ஒரு முன்மாதிரியைப் பதித்தார். இதைச் செய்யும்போது அவர் கூறியதுதான் முக்கியமானது. “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவுங்கள்” என்றார். ஆம், ஒரு நல்ல மேய்ப்பன் நமக்கு மாதிரியை வைத்துப் போயுள்ளார். நாம் பின்பற்றுவதற்காக ஒரு தாழ்மையின் செயற்பாட்டைச் செய்தே காட்டுவாராயின், அவர் மாதிரியில் நின்று நாமும் தாழ்மையுள்ளவர்களாக வாழவேண்டாமா?

இன்று நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு விதத்திலே தலைமை தாங்குகிறவர்களாக, மேய்ப்பர்களாக இருக்கிறோம். குடும்பத் தலைவன் தலைவி, ஆசிரியர் போன்ற பல நிலைகளில் நாம் இருக்கலாம். இந்த நம் வாழ்விலே நமக்கு யாரை மாதிரியாகக் கொண்டுள்ளோம்?

நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன். இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை. ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர் (எரே. 17:16 ).

ஜெபம்: நல்ல மேய்ப்பரே, உம்மைப் பின்பற்றுகிற எங்கள் வாழ்விலும் நீர் காண்பித்தத் தாழ்மையைப் பிரதிபலிக்கிறவர்களாக நாங்கள் வாழ உமதருள் தாரும். ஆமென்.

சத்தியவசனம்