வாக்குத்தத்தம்: 2019 ஜூலை 31 புதன்

சேனைகளின் தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது (ஏசா 6:3).
யோபு 29-31 | அப்போஸ்தலர்27:1-20

ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 31 புதன்

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது (சங்.89:8) வல்லமையுள்ள கர்த்தர் இம்மாதத்தின் ஒவ்வொரு நாளையும் அவருடைய தயவால் சுகமாய் கடந்துவரச் செய்தார். கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, தேவனுடைய நன்மையும் கிருபையும் நம்மை தொடர்ந்து பாதுகாக்க ஒப்புவித்து ஜெபிப்போம்.

கோழையா? வீரனா?

தியானம்: 2019 ஜூலை 31 புதன் | வேத வாசிப்பு: யாக்கோபு 4:5-10

‘…தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ (யாக். 4:7).

நாம் எதற்காகப் பயப்படவேண்டும்? எதற்காகக் கவலைப்பட வேண்டும்? துரத்தி வருகின்ற நாய்க்குப் பயந்து புறமுதுகு காட்டி ஓடினால், அது தொடர்ந்து துரத்தி நம்மை நிச்சயம் கடிக்கும். அதே நாயைத் திரும்பிப் பார்த்து, குனிந்து ஒரு கல் எடுத்து பாருங்கள். நாய் பயந்து ஓடிவிடும். ஆனால், கல் எடுக்கவேண்டும் என்ற தைரியம் நமக்கு வேண்டுமே. ஆகவே தான் யாக்கோபு, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்பதற்கு முன்னதாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் என்று முதலில் எழுதியுள்ளாரோ!

இந்நாட்களில் மறக்கப்பட்டுவருகிறதும், அந்நாட்களில் வேதாகமத்திற்கு அடுத்ததாகப் போற்றப்பட்டதுமான ஜான் பனியன் அவர்கள் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ என்ற புத்தகத்தில் விபரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சியும் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கைக் காட்சிகளே. கிறிஸ்தியான் பல பிரயத்தனங்களின் பின்னர் சிலுவையை தரிசிக்கிறான். அவன் முதுகை அழுத்திய பாரச்சுமையும் கழன்று உருண்டோடிவிட்டது. அதன் பின்னர் அவன் சந்தித்த அவலங்கள் சொல்லிமுடியாதன. ஒரு காட்சியிலே அவன் தாழ்மை என்ற பள்ளத்தாக்கின் வழியாய்ச் செல்ல நேரிடுகிறது. அதன் வழியே சற்றுத் தூரம் வந்தபோது, ‘அப்பொல்லியோன்’ என்ற ஒரு கேவலமான பிசாசு கிறிஸ்தியானுக்கு எதிராய் வருகிறது. அதைக் கண்ட அவன் பயந்து கலங்கினான். இப் பிசாசை எதிர்ப்பதா அல்லது திரும்பி வந்த வழியே போய்விடுவதா என்று கிறிஸ்தியான் தனக்குள் சிந்திக்கிறான். அவன் தரித்திருக்கும் போராயுதங்கள் யாவும் சரியாக அணியப்பட்டிருந்தாலும், முதுகைப் பாதுகாக்க எதுவும் இல்லை என்பது அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வருகிறது. பின்னிட்டுத் திரும்பினால் அப்பொல்லியோனின் அம்புகள் முதுகை துளைக்கும். அப்புறம் எப்படிப் பிழைப்பது? ஆகவே, நின்று நிலை பேராமல் எதிர்த்து நிற்பதே புத்தி; என் ஜீவனைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நான் பின்வாங்கக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்கிறான் கிறிஸ்தியான்.

பிரியமானவர்களே, நாம் பெருமைகொண்டு அழிந்துபோகாதிருக்க கர்த்தர், தாழ்மை என்ற பள்ளத்தாக்கில் நம்மை நடத்தக்கூடும். அங்கே அப்பொல்லியோன் நம்மைச் சந்திப்பான் என்பது தெரிந்தும் அவர் நம்மை நடத்துகிறார். ஏன்? நாம் எதிர்த்து நின்று பலங்கொண்டு ஜெயம் பெறுவதே தேவசித்தம். எதிர்க்கும் போதுதான் நாம் பலமடைகிறோம். நம் மார்பிலே மார்க்கவசம் உண்டு, கரத்திலே கேடயமுண்டு. ஆகவே பயமின்றி எதிர்க்கலாம். ஆனால் முதுகுகாட்டிப் பின்வாங்கினால் காயப்படுவதும், சில சமயம் அழிந்துபோவதும் உறுதி. எதிர்த்து முன் செல்லுகிறவன்தான் வீரன்!

‘பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்’ (எபே. 4:27).

ஜெபம்: ஜெயம் கொடுக்கும் தேவனே, நீர் எங்களை கோழைகளாக இருக்க அழைக்கவில்லை; சாத்தானையும் அவன் சேனைகளையும் எதிர்த்து நின்று முன்செல்ல அழைத்திருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 30 செவ்வாய்

இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி .. சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா.52:7) கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் அனைத்து மிஷெனரி ஸ்தாபனங்களுக்காக, அனுப்பப்பட்டுள்ள மிஷெனரிகளுக்காகவும் அவர்கள் குடும்பங்களுக்காகவும், அவர்களை ஜெபத்தினாலும் பொருளாலும் தாங்கும் விசுவாச குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

நம்புகிறதற்கு ஏதுவில்லாவிட்டாலும்!

தியானம்: 2019 ஜூலை 30 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 4:16-25

“(ஆபிரகாம்) … நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்” (ரோமர் 4:18)

விசுவாசத்தை நாம் உருவாக்க முடியாது; பிறர் சொல்லி வளர்த்துக்கொள்ளவும் முடியாது. மெய்யான விசுவாசம், தேவ ஆவியானவரால் நமக்குள் அருளப்பட வேண்டும். அந்த உன்னத ஆசியை நாம் பெற்றுக்கொள்ள கர்த்தரோடு நெருங்கி ஜீவித்து, அவர் அனுமதிக்கின்றவற்றை நமது வாழ்வில் முழுமனதோடு ஏற்று நடப்பது அவசியம். விசுவாசம் என்பது கிள்ளித்தரவும் அள்ளியெடுக்கவும் கடைச்சரக்கு அல்ல. அது விசுவாசம். இரண்டாயிரம் பிள்ளைகளை விசுவாசத்தில் பராமரித்த ஜார்ஜ் முல்லர் அவர்களிடம், ‘உறுதியான விசுவாசம் கொள்வதற்கு வழி என்ன’ என்று ஒருவன் கேட்டான். அதற்கு அவர், “இதற்கு ஒரே வழி சோதனைகளைச் சகிப்பதேயாகும். நான் கடுமையான சோதனைகளில் உறுதியாய் நின்றதால்தான் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டேன்” என்றாராம். ஆம், எல்லாம் அற்றுப்போகும் நேரம், அல்லது எதுவும் சாத்தியமில்லை என்கிற நேரமே விசுவாசிக்கக் கற்றுக்கொள்ளும் நேரம்.

ஆபிரகாமின் வாழ்வில் நாம் அதைத்தான் காண்கிறோம். அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்ற வாக்கைப் பெற்றபோது, ஆபிரகாமுக்கு ஒரு பிள்ளையும் இல்லை; பிறக்கக்கூடிய சாத்தியமும் இருக்கவில்லை. அப்போது ஆபிரகாமுக்கு வயது நூறு. சாராளும் வயதுசென்ற கிழவி. எப்படி நம்புவது? ஆனால் ஆபிரகாமோ, வாக்குப்பண்ணினவரில் முழு நம்பிக்கையும் வைத்தார்.

சோதனைகள் நம்மை நெருக்கும்போது, வாக்கைப் பிடித்துக்கொண்டு, வாக்களித்தவரைச் சந்தேகிப்பதே நாம் செய்யும் தவறு. சோதனை நேரமே நாம் விசுவாசத்தில் வளரக்கூடிய நல்ல தருணம் என்று ஏன் சிந்திப்பதில்லை? நாம் அறிந்திராவிட்டாலும், அவரது சிங்காசனத்தை உறுதியாய் பிடித்துக்கொள்ள தேவன் நம்மைப் பயிற்றுவிக்கிற நேரம் அதுதான் என்பதை நாம் ஏன் உணருவதில்லை. ‘நான் பயப்படும் நாளில் உம்மை நம்புவேன்’ என்கிறோம்; பின்னர் நம்ப தடுமாறுகிறோம். இது, நான் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை அல்ல; இது தேவன் என்னில் கொண்டிருக்கும் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையாக இருக்கட்டும். நசுக்கப்படும்போதும், இழப்புகளைச் சந்திக்கும்போதும் நாம் சுருண்டுபோகிறோம். ஆனால், பெறு மதிமிக்க பரிமளதைலம் தயாரிக்க அநேகமான மலர்கள் நசுக்கப்படவேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். சோதனைகளைச் சகிப்பது என்பது, நடப்பது நடக்கட்டும் என்று இருப்பது அல்ல; தேவசித்தம் என்னில் நிறைவேறட்டும் என்று காத்திருப்பதாகும்.

‘…பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்’ ( யாக். 1:2,3).

ஜெபம்: விடுதலையின் தேவனே, ஜார்ஸ் முல்லரைப் போல சோதனைகளைச் சகிக்கவும், அதில் உறுதியாய் நின்று விசுவாசத்தைக் கற்றுக்கொள்ளவும் கிருபை தாரும். ஆமென்.