ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 22 திங்கள்
முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர் (லேவி.19:32) நமது பங்காளர் குடும்பங்களில் விருத்தாப்பிய வயதுள்ளோர் யாவரது குடும்பத்தின் சமாதான, சந்தோஷத்திற்காக அவர்களது பெலவீனங்களில் கர்த்தரின் பெலன் பூரணமாய் விளங்க வேண்டுதல் செய்வோம்.
என்றும் மாறாத தேவசமுகம்
தியானம்: 2019 ஜூலை 22 திங்கள் | வேத வாசிப்பு: எபிரெயர் 1:8-12
‘ …அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைத்திருப்பீர்’ (எபி.1 :11).
தனிமையில் உட்கார்ந்து, நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துபோன ஒருவரைக் குறித்து, அல்லது இறந்துபோன நமது இதயத்திற்கு ஏற்ற நபர்களை நினைத்துப் பார்க்கும்போது, அந்த வெறுமை நம்மைக் கொன்றுபோடும்; முட்டி மோதும் கண்ணீரை அடக்கமுடியாதிருக்கும். இப்படிப்பட்ட வெறுமையுணர்வில் நாம் வாழ்வில் ஒருமுறையேனும் துன்பப்பட்டிருக்கலாம். தனிமை கொடுமையானது; அதிலும் தனிமையுணர்வு மிகவும் கொடுமைமிக்கது. இந்தக் கொடூரமான உலகில் இதெல்லாம் நேரிடும். அதற்காக தேவனுடைய பிள்ளைகளான நாம் புலம்ப வேண்டியதேயில்லை.
அநாதியாய் தமது இருதயத்தில் நிலைகொண்டிருந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் படைத்த தேவன், அதைப் பார்த்து ரசித்து, ‘இது நல்லது’ என்று கண்டார். ஆனால், இப்படைப்புகளெல்லாம் ஒருநாள் அழிந்துபோம். படைத்த அவரோ நிலைத்திருப்பார். எபிரெய கிறிஸ்தவர்கள், யூதக் கிறிஸ்தவர்கள் மற்ற யூதர்களால் தள்ளிவைக்கப்பட்டனர். இதனால் மனமொடிந்த இவர்கள், மாறாத கிறிஸ்துவை, தங்கள் பழைய நம்பிக்கைகளுடன் பரிமாற்றம் செய்ய நினைத்தனர். ஆகவேதான் எபிரெய ஆசிரியர் அவர்களை எச்சரிக்கிறார். மாறிப்போகின்ற இவ்வுலகில் மாறாத பாதுகாப்பு கிறிஸ்து ஒருவரே. அவர் மாறாதவராய் நமக்கு அருகில் எந்நேரமும் இருக்கிறார் என்பதை நாம் நம்பவேண்டும். தடுமாறும் மனநிலை இந்த உணர்வை மறைத்துப்போட இடமளிக்கக் கூடாது. இந்த உணர்வு சூழ்நிலையைச் சார்ந்ததாய் அல்ல; நமது இருதயம் சார்ந்ததாக இருக்கவேண்டும். தேவசமுகம் நிஜத்திலும் நிஜம். ஒருவர் நம்மோடு இருக்கிறார் என்ற அறிவு நமது உணர்வைத் தட்டியெழுப்பும்.
நமது துன்பத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றிலும் மேலாக ‘தேவன் என்னுடன் இருக்கிறார்’ என்பதே என் இதயத்தை மகிழ்விக்கப் போதுமானது. பவுல் எழுதிய கடைசி நிருபம் என்று நம்பப்படுகிற இரண்டாம் தீமோத்தேயுவிலே, தான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் எல்லோரும் தன்னைக் கைவிட்டார்கள் என்று மனந்திறந்து எழுதுகிறார். அதற்காக அவர் உடைந்து போகவில்லை. ஏனெனில் கர்த்தர் தன்னுடன் இருப்பதை அவர் உணர்ந்தார். இது தனிமை உணர்வைச் சார்ந்தது அல்ல. ஏனெனில் அவர் என்றும் தேவசமுகத்தை உணர்ந்திருந்த ஒருவர். அதனால் தனித்துவிடப்பட்ட அந்தப் பாதகமான துயர சூழலிலும் தளும்பவில்லை. இன்று தனித்துவிடப்பட்ட உணர்வுக்குள் நாம் தள்ளப்படுவோமானால் நாம் என்ன அறிக்கை பண்ணுவோம்?
‘கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, …என்னைப் பலப்படுத்தினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்’ (2 தீமோ 4:17).
ஜெபம்: எங்களை கைவிடாத தேவனே, சந்தோஷமோ, துக்கமோ, எதுவாயினும் நாங்கள் தனித்து அல்ல; நீர் எங்களோடு இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.