Daily Archives: July 19, 2019

ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 19 வெள்ளி

தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே (2கொரி.1:20) திருமணத்திற்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள சகோதர சகோதரிகள் தேவனுடைய வாக்குத்தத் தங்களை உறுதியாய் பற்றிக்கொள்ளவும், கர்த்தருடைய வேளையிலே திருமண காரியம் கைகூடி வருவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

தேவவல்லமை என்னில் விளங்க…

தியானம்: 2019 ஜூலை 19 வெள்ளி | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 1:8-10

‘நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாய் இருக்கத்தக்கதாக…’ (2கொரி. 1:9).

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதால் எல்லாத் தீங்கிலிருந்தும், சோதனை போராட்டங்களிலிருந்தும் தேவனுடைய வல்லமையானது நம்மை விலக்கிக் காத்து கைதாங்கி நடத்தவேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். அதில் தவறில்லை. ஆனால், தேவ வல்லமையானது கஷ்டங்களையும் போராட்டங்களையுமே முதலில் கொண்டு வருகிறது என்பதை நமக்கு முன்னே இருக்கிற ஏராளமான சாட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.

பவுலடியார் ரோமாபுரிக்கு கொண்டுசெல்லப்பட்ட செய்தியை அப்.27,28 அதிகாரங்களில் வாசிக்கிறோம். பவுல் தனக்குரிய யாவையும் குப்பை என்று தள்ளிவிட்ட சீஷன், ஒரு சுவிசேஷகன், ஒரு மிஷனெரி. ரோமாபுரிப் பயணம்கூட தேவ சித்தமாகவே இருந்தது. ‘நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும்’ என்று பவுலுக்குச் சொல்லப்பட்டிருந்தது (அப்.27:24). அப்படிப்பட்ட ஒருவர் எந்தவொரு தடையோ தொந்தரவோ இன்றி கொண்டுபோகப்பட்டிருக்கவேண்டும் என்று நாம் எண்ணலாம். ஆனால் அதற்கு மாறாகவே எல்லாம் நடந்தது. அவருக்கு ஓயாத துன்பம் கொடுத்த யூத மக்கள் ஒருபுறமிருக்க, பயணம் நெடுக பல துன்பங்கள் நேர்ந்தன. பெருங்காற்று, விஷப் பாம்பு என்று பூமியிலும் பாதாளத்திலுமுள்ள எல்லாச் சக்தியாலும் அவர் தாக்குண்டார். பிரயாணம் செய்த கப்பலும் உடைந்தது; உடைந்த துண்டுகளின் உதவியுடனேயே கரைசேர நேர்ந்தது. இந்த சங்கதிகள் தேவனின் வல்லமையைக் காட்டுகிறதா? அல்லது, தேவன் கைவிட்டார் என்று எண்ணத்தோன்றுகிறதா? ஆனால், பவுலோ, ‘கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது’ (2கொரி.1:5) என்கிறார்.

தேவனுடைய பிள்ளைகளான நமது வாழ்வில் எந்தவொரு பாடுகளோ மரண அச்சுறுத்தலோ வெறுமனே நிகழுவதில்லை. தேவனுக்கு விரோதியானவன் நம்மை இலகுவாகக் கைகழுவமாட்டான். அவன் நம்மைத் தாக்கும்போது தேவனுடைய வல்லமை அங்கேதான் எழும்புகிறது. மாத்திரமல்ல, தேவனைத் தவிர நமக்கு யாரும் உதவி செய்ய முடியாது என்ற நிலை உருவாக கர்த்தர் அனுமதிப்பதும் நமது நன்மைக்கேயாகும். தேவனை மாத்திரமே பற்றிப்பிடித்து ஜீவிக்கும்படி பெலமடைவது அந்த வேளைகளில்தான். ஆகவே, எந்தப் பாடுகளிலும் தைரியம்கொண்டு, தேவபலத்தால் அதை மேற்கொண்டு ஜெயம் பெறுவோமாக.

‘என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத்தாண்டுவேன்’ (சங்.18:1,29).

ஜெபம்: எங்களை பெலப்படுத்தும் தேவனே, தோல்விகளும் ஏமாற்றங்களும் வாழ்வில் வரும்போது பயந்து ஒளியாமல் நீர் தரும் உன்னத பலத்துடன் முன்செல்ல கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்