Daily Archives: July 20, 2019

வாக்குத்தத்தம்: 2019 ஜூலை 20 சனி

உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும் (சங் 28:2).
எஸ்தர். 3-5 | அப்போஸ்தலர் 19:1-22

ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 20 சனி

நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் (வெளி.19:5) தேவாதிதேவனை உயர்த்தும் பாடல்கள் செய்திகளடங்கிய சத்தியவசன சிடி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இவ்வூழியத்தினாலே மேலும் அநேகருடைய வாழ்க்கைத் தொடப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.

வெற்றியும் தோல்வியும்

தியானம்: 2019 ஜூலை 20 சனி | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 4:8-11

‘எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு…’ (2கொரி.4:11).

வியாதியோ, பிரிவோ, மரணமோ, எந்த இக்கட்டிலும் மன உளைச்சலுக்குள்ளாவதும் நொருங்கிப்போவதும், தொய்ந்துபோவதும் மிக இலகு. அதே சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடி ஜெயிப்பது கடினம் என்றாலும், தோல்வியும் வெற்றியும் நம்மிடம்தான் இருக்கிறது. தன் வாழ்வை முற்றிலும் கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்த பவுலுக்கு, நம் கணிப்பின்படி, எந்தவொரு கஷ்டமும் வந்திருக்கக்கூடாது. ஆனால், இன்றைய வாசிப்புப் பகுதி, மூல பாஷையிலுள்ளபடி இதைவிட நன்றாக மொழிபெயர்க்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுவொரு சகிக்கமுடியாத போராட்டமாகும்.

முதலாவது, சத்துரு கூட்டம் எப்பக்கமும் நெருக்குகிறது. ஆனால் தேவன், பவுல் நுழைந்து போகும் அளவிற்கு வழிவிட்டதால் நசுங்கிப் போகாமல் வெளியேறுகிறார். அடுத்தது, வழிகளெல்லாம் அடைக்கப்பட்டு கலங்கி நிற்கிறார் பவுல். ஆனால், அடுத்த அடி எடுத்துவைக்கத்தக்க ஒளிக்கற்றை ஒன்று தெரிகிறது. விசாலத்தை அவர் நாடவில்லை. அந்த ஒற்றை ஒளிக்கதிரின் உதவியுடன் மனம் ஒடிந்து போகாமல் வெளியேறுகிறார். அடுத்து, சத்துருவால் ஓயாமல் துரத்தப்படுகிறார். ஆனாலும், அவரைக் காக்கும் தெய்வம், அருகில் நிற்பதால் அவர் கைவிடப்படவில்லை. மேலும், கீழே விழத் தள்ளப்படுகிறார். மரணம் நேரிடும் அபாயம் வருகிறது. ஆனால் அவர் மடிந்து போகவில்லை. இயேசுவின் மரணத்தை அவர் ஏற்கனவே சுமந்து நிற்பதால், இனி அவரை எதுவும் சாகடிக்கமுடியாது. ஏனெனில் கிறிஸ்துவின் ஜீவன் தனக்குள் விளங்குகிறது என்கிறார். தனது பணி முடியும் வரைக்கும் யாரும் அவரை எதுவும் செய்யமுடியாது என்ற உறுதி பவுலுக்கு எப்பொழுதும் இருந்தது.

நம்பிக்கையின் நுனிக்கு வந்ததுபோலத் தெரிந்தாலும், நாம் ஒருபோதும் அந்த இடத்துக்கு வருவதேயில்லை என்பதையே பவுல் நமக்குக் கற்றுத் தருகிறார். அழிவுக்கேதுவான இந்தச் சரீரம் பாவத்துக்கும் பாடுகளுக்கும் உட்படும்; ஆனால், தேவன் நம்மை ஒருபோதும் கைவிடார். மரணத்தை வென்ற கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் அல்லவா! நித்திய வாழ்வின் நிச்சயம் உண்டல்லவா! நமக்கு வரும் அவமானங்களும், பாடுகளும், கிறிஸ்துவின் வல்லமை நம்மில் விளங்கத்தக்க தருணங்களும், அவர் நம்மோடிருக்கிறார் என்பதற்குச் சாட்சியுமாயிருப்பதை நாம் விசுவாசிப்போமானால், அதுவே நமக்கு ஜெயம். இல்லை, நாம் முறுமுறுத்துப் பின்வாங்குவோமானால், அதுவே நமக்குத் தோல்வி. இதில் நாம் எதை தெரிவு செய்யப்போகிறோம்?

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1கொரி. 15:57).

ஜெபம்: ஜெயங்கொடுக்கும் தேவனே, நாங்கள் எதிர்நோக்கும் பாடுகளும் சோதனைகளும் போராட்டங்களும் நீர் எங்களோடிருந்து உமது வல்லமையை விளங்கப்பண்ணும் தருணங்களாக இருப்பதை கற்று தந்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

சத்தியவசனம்