ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 31 சனி
“என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது” (சங்.145:21) இந்நாள் வரையிலும் குறைவில்லாமல் நம்மை நடத்தி பாதுகாத்துவந்த பரிசுத்த தேவனை நம்முடைய இருதயத்தில் பாடி அவருக்கு மகிமைகளை செலுத்துவோம்.
நன்மை தொடருவது நிச்சயம்!
தியானம்: 2019 ஆகஸ்டு 31 சனி | வேத வாசிப்பு: 2சாமுவேல் 2:5-7
‘…நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்’ (சங்.23:6).
தாவீதை எதிரியாக நினைத்துத் துரத்தித் திரிந்த சவுல் மரணமடைந்தபோது கீலேயாத் தேசத்து மனுஷரில் சிலர் போய், அவனது உடலை அடக்கம் பண்ணினார்கள். இதனைக் கேள்விப்பட்ட தாவீது, அந்த யாபேசின் மனுஷரிடத்திற்கு தனது ஸ்தானாதிபதிகளை அனுப்பினார். ‘உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம் பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், நீங்கள் செய்த இந்த நன்மைக்குத் தக்கபடி உங்களை நடத்துவேன் எனவும், சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் எனவும் தாவீது அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார் என்று வாசிக்கிறோம்.
ஒரு சாதாரண மனிதனான தாவீது, தன்னை விரோதித்தவன் விஷயத்தில் இவ்வாறு நன்மையும் தயையும் செய்யும்போது, நமது பரம தந்தையாகிய ஆண்டவர் நமக்கு எவ்வளவு நன்மை செய்வார்! அவருடைய அன்பு மாறாதது, அது மனிதர் களுடைய அன்பைப்போல சூழ்நிலைகளுக்கு ஏற்றவிதமாக கூடிக்குறைவது அல்ல. எனவே, நாம் எந்நிலையிலிருந்தாலும் எப்பொழுதும் ஒரே விதமாகவே ஆண்டவர் நம்மை நேசிக்கிறார். அவர் நமக்கு நன்மை செய்கின்றவராகவே இருக்கிறார். அவர் நமக்கு ஒருபோதும் தீமையானதைத் தரமாட்டார். என்ற நிச்சயத்தை நாம் உடையவர்களாக மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போம். அப்போது தேவனின் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடந்துவரும்.
தேவனை நம்பி தேவ பயத்தோடு வாழ்கின்றவர்கள் நிச்சயமாக தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குரிய ‘..கிருபையையும் மகிமையையும் அருளுகிறவர்’ (சங்.84:11). ‘உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்’ (சங்.84:11). ஆம், நன்மையை யோசிக்கிறவர்களுக்கு தேவகிருபையும் சமாதானமும் உண்டு. தேவனை நம்பியவர்கள் எப்பொழுதும் அவரது நன்மையினாலும் கிருபையினாலும் நிறைந்தவர்களாகவே இருப்பர்.
தேவபிள்ளையே, கர்த்தரை நம்பி நன்மையைச் செய். அப்பொழுது அவரே உன்னைக் காப்பாற்றுவார். அவர் அருளும் நன்மையும் அவரது கிருபையும் நம்மைத் தொடர்ந்துவரும். நம்மை நன்மையால் நிறைப்பவருக்கு மகிமையாக நாமும் பிறரை நாடி நன்மை செய்வோமாக.
‘…எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்’ (ரோமர் 2:10).
ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, உம்மிடத்திலிருந்து நன்மையையும் கிருபையையும் எதிர்பார்க்கின்ற நான் பிறருக்கு நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமலிருக்க உமது பெலனைத் தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2019 ஆகஸ்டு 30 வெள்ளி
அவர் மூலமாய் … கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று … மேன்மை பாராட்டுகிறோம் (ரோம. 5:2) .
சங்கீதம் 120-131 | 1கொரிந்தியர் 9
ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 30 வெள்ளி
ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்.5:16) இவ்வாக்குப்படியே நம்மனைவரின் ஊக்கமான ஜெபத்தால் பிசாசின் கட்டுகள் உடைக்கப்படவும், பலவிதமானத் தேவைகளோடு உள்ள பங்காளர்கள் தேவனுடைய அளவற்ற இரக்கம் ஐசுவரியத்தாலே நிரப்பப்படவும் வேண்டுதல் செய்வோம்.
கொஞ்சக் காலம்
தியானம்: 2019 ஆகஸ்டு 30 வெள்ளி | வேத வாசிப்பு: 1யோவான் 4:2-6
‘கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். பூமியிலே நான் பரதேசி’ (சங்.119:1,19).
இப்பூமியும் அதிலுள்ள யாவும் கர்த்தருடையது. அவர் யாவையும் அறிந்திருக்கிறார். ‘சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்’ என்று ஏசாயா40:17ல் கூறுகிறார். இப்படியிருக்க, நம்மைச் சுற்றிலும் நடக்கின்ற சம்பவங்களைப்பார்த்து, இயேசு சீக்கிரம் வந்து விடுவார், உலகம் இனி அழியப்போகிறது என்று நாமும் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். நாம் இப்பூமியிலே வாழப்போவது கொஞ்சக்காலம் என்பதை அறிந்திருப்பதினாலேயே இப்படிப் பேசுகிறோமா? ஆம், இந்த உலகம் நிலையற்றது என்பதை சத்திய வேதம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
நாம் கடந்துவந்த காலத்தைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். நாம் சிறுவர்களாக இருந்தபோது பார்த்த உலகம், இன்று பயங்கரமாக ஒன்றுமில்லாததுபோல தோன்றுகிறதல்லவா! இவ்வுலகிலே நாம் நிரந்தரமாக வாழப்போவதில்லை. இப்பூமியில் நமது வாழ்க்கை தற்காலிக வாழ்வாகவே இருக்கிறது. அதனாலே ‘பூமியிலே நான் பரதேசி’ என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். ‘பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப் போலிருக்கிறது’ (யோபு 8:9) என்று யோபு கூறினார். அந்த நிழலைப்போன்ற வாழ்க்கையை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் இவ்வாழ்வில் மேய்ப்பனாகிய கிறிஸ்துவை பிரதிபலிக்கின்றவர்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த மாபெரும் அழைப்புக்கு நாம் உண்மையாய் இருக்கிறோமா? அல்லது, இவ்வுலகத்தின் பின்னால் செல்கிறோமா?
இவ்வுலக காரியங்களுக்காக சண்டையிட்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள ஆசையுள்ளவர்கள் பலருண்டு. நாமோ, நம்முடைய குடியிருப்பு தேவனிடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்திடவேண்டும். மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் பின்னே அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கிறவர்களாக அவருக்காகவே நாம் வாழுவோம். உத்தம மார்க்கத்தாராக, கர்த்தருடைய வேதத்தின்படி நடந்து இறுதியில் அவரிடமே நாம் சேருவோம். உலகம் பாவத்துக்குள் விழுந்தபோதும், அதிலிருந்து நாம் விடுதலை பெற்றவர்களாக உலகத்தை ஜெயிப்போம். ஏனெனில், இவ்வுலகத்தில் இருப்பவனிலும் நம்முடனே இருப்பவர் பெரியவர். ஆம், நாம் இந்தப் பூமியில் பரதேசிகள்; அதிலும் மேலாக, நம்மோடு இருப்பவர் பெரியவர் என்ற நிச்சயமும் நமக்கு வேண்டும்.
‘…காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது’ (2கொரி. 4:17).
ஜெபம்: தேவனே, நான் பரதேசியாய் வாழும் இவ்வுலகில் என் வாழ்வு தற்காலிகமானது என்றும் நான் இவ்வுலகத்திற்குரியவன் அல்ல என்பதையும் உணர்ந்து பரிசுத்தமாய் வாழ உமதருள் தாரும். ஆமென்.