வாக்குத்தத்தம்: 2019 ஆகஸ்டு 22 வியாழன்

என் நுகத்தை … ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். …உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத் 11:29) .
சங்கீதம் 90-94 | 1கொரிந்தியர் 2

ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 22 வியாழன்

நாம் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு … ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாவருக்காகவும் வேண்டுதல் பண்ணவேண்டும் (1தீமோ.2:2) நம்முடைய தேசத்தின் ஒவ்வொரு மாநிலங்களுக்காகவும், நமது பிரதமர், ஜனாதிபதி மற்றும் ஆளுமைப் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் யாவருக்காகவும் மன்றாடுவோம்.

மரணத்தின் மீது ஜெயம்

தியானம்: 2019 ஆகஸ்டு 22 வியாழன் | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 5:6-11

‘நாம் தரிசித்து நடவாமல்… கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்’ (2கொரி.5:6,8).

உலகத்தில் பிறந்த அனைவரும் சரீர மரணத்தைச் சந்திக்க வேண்டியது இயல்பு. ஆனால், நமது பாவத்திற்காக நாம் அடைய வேண்டிய மரண தண்டனையைத் தாமே ஏற்று, கிறிஸ்து நமக்காக மரித்ததுடன் நில்லாமல், அவர் உயிர்த்தெழுந்ததால் கிறிஸ்து இயேசுவையுடைய நமக்கு, சரீர மரணம் ஒரு நிழலாகவே உள்ளது. மரணமானது தேவபிள்ளைகளைப் பயமுறுத்தவோ அழிக்கவோ முடியாது. மரணம் முடிவு அல்ல; நமக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கை உண்டு. ஆனால் அன்றைக்கு அவரை நியாயாதிபதியாகவே சந்திப்போம். இன்று அவரை இரட்சகராகச் சந்திப்போமானால், நமக்கு நியாயத்தீர்ப்பின் நாள் பயமுறுத்தும் நாளாக அல்ல, மகிழ்ச்சியின் நாளாகவே இருக்கும். அந்த நாள் நமக்கு மகிழ்ச்சி தருமா? பயமுறுத்துமா?

‘பாவத்தின் சம்பளம் மரணம்’ (ரோம.6:23). ஆனால், ‘தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்’. இதனை விசுவாசிக்கின்ற நாம், இவ்வுலகில், ‘…தைரியமாகவேயிருந்து இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்’ என்று பவுலைப்போல கூற விரும்புகிறோமா?

சரீரம் மரணமடைந்தாலும், நாம் இரட்சகரோடு வாழும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆண்டவர் நமது மேய்ப்பனாக வீற்றிருந்து நம்மை என்றென்றும் வழி நடத்துவார். இவ்வுலக வாழ்வு முடிவுறும்போது, பரலோகத்தின் நம்பிக்கை நமக்கு இருப்பதால், நாம் பயப்படத் தேவையில்லை. மரணத்தின்மீது ஜெயம் என்பது, மரணத்தின் அதிகாரத்தை ஜெயித்து உயிர்த்தெழுவோம் என்ற நிச்சயமாகும். அந்த உயிர்த்தெழுதலிலே பங்கடையக்கூடிய நிச்சயத்தை நாம் பெற்றிருக்கின்றோமா? இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற நாம், ஒருநாள் மரண வாசலுக்கூடாகப் பிரவேசிக்கும்போது, ஆண்டவரின் பிரசன்னத்தால் பாதுகாக்கப்படுவோம் என்ற நிச்சயம் நமக்குண்டு. மரணம் நம்மை ஜெயிக்க முடியாது. ஏனென்றால், நாம் ‘கர்த்தரிடத்தில் குடியிருக்கும்படியாகவே செல்லுகின்றோம்’. அந்தநாள் எவ்வளவு பாக்கியநாள்! நாமும் ஒருநாள், கர்த்தரோடு நெருங்கி நிரந்தரமாக தங்கி வாசம்பண்ணப் போகின்றோம்.

‘கர்த்தர் என் மேய்ப்பர்’. ‘தேவன் என்னோடு கூட இருக்கிறார்’ என்று நிச்சயத்தை பெற்றிருக்கிற நாம், இன்னும் மரண பயத்தோடு நமது நாட்களை வீணாகக் கழிக்காமல், பயத்தைத் தூக்கியெறிந்துவிட்டு தேவபிரசன்னத்தை எப்போதும் வாஞ்சிப்போம்.

‘நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்’ (வெளி 1:18).

ஜெபம்: மரணத்தை ஜெயித்த எங்கள் ஆண்டவரே, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றிருக்கிற நாங்கள் மரணபயமில்லாமல் கர்த்தரிடத்தில் குடியிருக்கும் பாக்கியத்திற்காய் ஆயத்தத்தோடே காத்திருக்க உதவி செய்யும். ஆமென்.