ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 2 வெள்ளி

சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் (யோவா.18:37) இம்மாதத்தில் ஒளிபரப்பாக வுள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பு பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் நிகழ்ச்சிகளை புதிய நண்பர்களும் விசுவாசிகளும் கண்டு கர்த்தரை அறிகிற அறிவில் வளர வேண்டுதல் செய்வோம்.

மேய்ப்பனிலும் மேலான தகப்பன்

தியானம்: 2019 ஆகஸ்டு 2 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 10:11-17

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன்ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11).

பழைய ஏற்பாட்டிலுள்ள பலர் தேவனுடன் நெருங்கி வாழ்ந்துள்ளனர். தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கு, தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம், தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்ற சாட்சிபெற்ற மோசே என்று பலரைக் காண்கிறோம். என்றாலும், மனிதருக்கும் தேவனுக்குமுள்ள இந்த உறவானது, கிறிஸ்துவிலேயே பூரணமாக்கப்பட்டது. அதையே இரட்சகர் நமக்காகச் சிலுவையில் நிறைவேற்றினார். “நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கின்றான்” என்றார் இயேசு. அவர் நமக்காகவே சிலுவையை ஏற்று, பாடுபட்டு, சிந்திய இரத்தத்தினாலே நாம் பாவமன்னிப்பு என்ற அளப்பரிய ஈவை பெற்றிருக்கிறோம். இதனாலேயே இழந்த உறவை மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

இயேசு, தம்மை ஒரு நல்ல மேய்ப்பனாக அடையாளப்படுத்தியதோடு நிறுத்திவிடாமல், அப்படியே செயற்பட்டதையும் நற்செய்தி நூல்களிலே வாசிக்கிறோம். இந்த நல்ல மேய்ப்பனை அறிந்த நாம், அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கிறோமா? “என்னுடையவைகளை நான் அறிந்தும், என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன். ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்று இவ்வுலகிலே ஒரேயொருவர் மட்டுமே ஆணித்தரமாகக் கூறியுள்ளார். அவரே நம் இரட்சகராகிய இயேசு. அவரின்றி வேறு நல்ல மேய்ப்பர்கள் எவரும் இவ்வுலகிலே கிடையாது.

ஆண்டவர் இயேசுவை நல்ல மேய்ப்பனாகவும், ஆடுகளுக்கு உற்ற காவலனாகவும் மாத்திரமல்லாமல், அதற்கு மேலாகவும் யோவான் அவரை வெளிப்படுத்தியுள்ளார். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவா.1:12). அப்படியானால் நாம் அவரது மந்தைகள் மாத்திரமல்லாமல், அதைவிட மேலான உரிமையுள்ளவர்கள் அல்லவா! உண்மையில், அவரை ஏற்றுக்கொண்டவர்களானால், நாம் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்றுக்கொள்கிறோம். இது எத்தனை பெரிய பாக்கியம்! இத்தனை மேலான சிலாக்கியம் நமக்குக் கிடைத்திருக்க, நாம் இந்தப் பரம தந்தையோடு உறவைப் பேணாமல் இருப்பது தகுமா? இன்று நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால், மேய்ப்பனிலும் மேலான அந்த தகப்பனுடன் அவரது பரிசுத்த உறவில் நிலைத்து நிற்கிறோமா என்பதைச் சிந்திப்போம்.

‘…நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்’ (ரோ. 8:15).

ஜெபம்: எங்கள் நல்ல ஆண்டவரே, நீரே எங்கள் நல்ல மேய்ப்பராகவும் தகப்பனாகவும் இருந்து எங்களை நேசித்து வருகிறீர். அந்த அன்பின் உறவில் நாங்களும் உண்மையோடே காணப்பட கிருபைச்செய்யும். ஆமென்.