ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 29 சனி

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான்14:27) வாக்குப் பண்ணின ஆண்டவர்தாமே உலகம் கொடுக்கவும் எடுக்கவும் கூடாத சமாதானத்தைத் தந்து நம்மை நடத்தினார். அவருக்கே சகல கனத்தையும் மகிமையையும் செலுத்தி அவரை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.

தேவனைத்தவிர வேறு யார்?

தியானம்: 2020 பிப்ரவரி 29 சனி | வேத வாசிப்பு: ஏசாயா 44:21-28

“உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர். நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்” (ஏசா.44:24).

“என் அம்மாவா இப்படிச் சொன்னார். இருக்காது” என்று சேகர் திட்டவட்டமாகச் சொன்னபோது, அவன் தன் அம்மாவை எவ்வளவாய் அறிந்து வைத்திருந்தான் என்பது விளங்கியது. நமக்கு ஒரு செய்தி சொல்லப்படும் போது, அதைச் சொன்னது யார் என்பதிலேதான், நாம் அச்செய்தியை நம்புவதும் நம்பாமல் விடுவதும் தங்கியிருக்கிறது, இல்லையா! ஆனால், இன்று செய்திகள் நம்பும்படியாக சோடிக்கப்பட்டு வெளிவரும்போது, நாமும் சோதிக்கப்படுகிறோம்.

கோரேஸ் ராஜாவைக்குறித்து, அவரது ஆளுகைக்கு ஏறத்தாழ 150 வருடங்களுக்கு முன்னரே ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். கோரேஸ் இதைப் பின்னர் கண்டெடுத்து, அதனால் உந்தப்பட்டு அந்தக் காரியத்தைச் செய்தார் என்று பிந்திய சரித்திரம் சொல்கிறது. எருசலேம் விழும் என்று அது விழுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரும், தேவாலயம் மீண்டும் கட்டப்படும் என்று அது கட்டப்படுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரும் ஏசாயா உரைத்தார். நமது எதிர்காலத்தையெல்லாம் தமது கரங்களில் வைத்திருக்கிற தேவனைத் தவிர வேறு யாரும் இதை அறிந்திருக்க முடியாது என்பதற்கு இதற்கும் மிஞ்சி என்ன நிரூபணம் வேண்டும்? ஆனால், அன்றும் இன்றும் தேவன் உரைக்கிறார் என்று சொல்லி தீர்க்கதரிசனம் என்ற பெயரில் பல காரியங்கள் கூறப்படுகிறது; சிலதை அவற்றை நாமும் நம்புகிறோம். தேவனுடைய வார்த்தைகளுடன் பல மாயைகளைப் பயமின்றி கலந்துவிடுகிறவர்கள் இன்று அநேகர். “நானே உன்னைத் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினவர்; நானே உன் பாவங்களை மன்னித்து உன்னை மீட்டவர்; நான் பொய் சொல்வேனா” என்று கர்த்தர் கேட்கிறார். “என் வார்த்தைகளைவிட்டு, உனக்குப் பிரியமானதைச் சேவித்து, பணிந்து, அவற்றை நம்பியிருக்கிறது என்ன” என்றும் கர்த்தர் கேட்கிறார்.

நம்மை உருவாக்கின தேவனைவிட்டு, பாவத்திலிருந்து நம்மை மீட்டு எடுத்த இரட்சகரை விட்டு, வேறு யாரை நாம் நம்பமுடியும்? சிந்திப்போம். தேவ நாமத்தைச் சொல்லிச் சொல்லி, உண்மையில் நாம் யாரை இன்று சேவிக்கிறோம்? நமது எல்லாக் காலங்களையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்ற தேவனுடைய வார்த்தையைவிட்டு நாம் யாருடைய வார்த்தைகளை நம்பப் போகிறோம்? உணர்ந்து தேவனிடமே மனந்திரும்புவோமாக.

“…நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்” (ஏசா.45:4).

ஜெபம்: என்னை பெயர் சொல்லி அழைத்த தேவனே, என் தாயின் கர்ப்பத்திலே என்னை தெரிந்தெடுத்து உமது பிள்ளையாய் எங்களை மாற்றினீரே உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 28 வெள்ளி

பலவிதமான துயரத்திலும் வேதனையிலும் இக்கட்டிலும் இருந்து கர்த்தருடைய அற்புதமான விடுதலைக்காக காத்திருக்கும் பங்காளர்கள் …நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும் நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்கு சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை (1தீமோ.6:17) வைத்து தொடர்ந்து விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டுதல் செய்வோம்.

பயப்படத்தக்கவர்!

தியானம்: 2020 பிப்ரவரி 28 வெள்ளி | வேத வாசிப்பு: எரேமியா 5:20-25

அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாகச் சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்கு…” (எரே. 5:22).

கடற்கரையின் மாலை காட்சி மனதுக்கு ஆறுதல் தருகின்ற ஒன்று; அது கவலைகளை மறக்கச்செய்யும். கடலுக்குள் தன்னை ஒளித்துக்கொள்ள தீவிரிக்கும் செந்நிற சூரியனின் சிறிய உருண்டை; அந்த ஒளியில் மினுமினுக்கும் கடலின் அழகு; வெள்ளை நுரை தள்ளியபடி மேலெழுந்து சீறிவரும் அலைகள்; கரையில் வந்ததும், ஒரு புன்சிரிப்புடன் திரும்பிக் கடலுக்குள் செல்லும் அமைதி; உண்மையில் நமக்கு நம்பிக்கை தருகின்ற இக்காட்சிகளில் தேவ கரத்தை நாம் காணவில்லையென்றால், கண்கள் இருந்தும் நாம் குருடர்தான். ஆனால், இதே கடல்தான் ஒருநாள் சீறி எழுந்து, தன் எல்லையைத் தாண்டியது. “கடலையும் காற்றையும் அமர்த்தினவர் ஏன் மௌனமாயிருந்தார்?” “நமக்கு ஏன் இது?” என்று பல கேள்விகள் அன்று எழுந்தன. எரேமியா 5:22ம் வசனத்தை அப்போதுதான் முதன்முதலாக வாசித்து, அவ்வசனத்தை மாத்திரம் பிடித்துக்கொண்டு கேள்வி எழுப்பியவர்களும் இல்லாமல் இல்லை.

அன்று, தென் ராஜ்யமாகிய யூதா தேவனைவிட்டு சோரம்போனது. யூதா பாபிலோனினாலே சிறைப்பிடிக்கப்பட்டு, எருசலேம் பிடிபட்டு, தேவாலயம் அழிக்கப்படுவதற்கு முன்னர், கர்த்தர் யூதாவை மனந்திரும்புதலுக்கு அழைப்பு விடுத்த வார்த்தைகள்தான் எரேமியாவின் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள். கர்த்தர் தமது மக்களுக்கு திரும்பத் திரும்ப மனந்திரும்புதலுக்கு அன்புடனும், எச்சரிப்புடனும் அழைப்பு விடுத்தார். தாம் யார் என்பதை வெளிப்படுத்தினார். தம்மால் எல்லாம் முடியும் என்பதைப் புலப்படுத்தினார். தாம் அவர்களைக் கைவிடுவதில்லை என்று வாக்களித்தார். கடல் அலைகளுக்கே எல்லையை வகுத்தவர், தமக்கு வருகின்ற தீங்குகள் தம்மை நெருங்காதபடிக்கு காக்க வல்லவர் என்பதை யூதா சிந்திக்க மறந்தது. இறுதியில் பாபிலோன் வந்து யூதாவைச் சிறைப்பிடித்து, எருசலேமையும் அழித்தது; இது சரித்திர உண்மை.

நடந்து முடிந்த கடற்சீற்றங்களுக்கும் பேரழிவுகளுக்கும் தீர்ப்பு சொல்ல நாம் யார்? ஆனால், அதன் எல்லையை வகுத்தவருடைய அனுமதியின்றி அந்த அலைகள் பேரலைகளாக மாறியிருக்குமா? இவ்வாறான பேரழிவுகள் நேரிடும்போது தேவனிடம் திரும்பியவர்கள் ஏராளம். ஜாதி மதபேதமின்றி ஒருவரையொருவர் நேசித்தவர்கள் ஏராளம். ஆனால், மறுபடியும் நாம் யாவற்றையும் மறந்து, அன்றைய யூதாவைப்போல நம் இஷ்டப்படி நடப்பது எப்படி? நம் தேவனுக்கு முன்பாக நாம் அதிராமலிருப்பது எப்படி?

“நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வெளி. 3:19).

ஜெபம்: உன்னதமான தேவனே, நீர் பயப்படத்தக்கவர், உமது வல்லமையுள்ள கரங்களில் என்னை ஒப்படைத்து மனந்திரும்புகிறேன். ஆமென்.