வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 30 வியாழன்

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; (எரே. 7:23)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 20-21 | மாலை: மத்தேயு 21:28-46

ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 30 வியாழன்

உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன் (சங்.119:101) கர்த்தருடைய வார்த்தைகளை அனுதினமும் வாசித்து அதன்படி நடப்பதற்கு தீர்மானம் பண்ணின நாம் அந்த தீர்மானத்தில் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதற்கு கர்த்தர் கிருபை செய்ய வேண்டுமென்று அவருடைய சமுகத்தில் நம்மைத் தாழ்த்தி ஜெபிப்போம்.

ஆத்துமாவின் ஆறுதல்!

தியானம்: 2025 ஜனவரி 30 வியாழன் | வேத வாசிப்பு: சங்.31:1-7; 2 கொரி.1:2-4

YouTube video

“என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (சங்.94:19).

என் வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியிலே தனித்துவிடப்பட்டேனோ என ஒரு உள்ளுணர்வோடு போராட நேர்ந்தது. அடுத்த அடி எங்கே எப்பக்கம் வைப்பது என்று அறியாமல் திகைத்து நின்றேன். “நான் தடுமாறிவிழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் நான் விசாரப்படுகிறேன்”(சங். 38:17,18) என சங்கீதக்காரனின் ஜெபத்தை ஏறெடுத்தேன். என் இதயத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள் அலைமோதின. இதனைப் படிக்கும் சகோதரா, நீயும் உன் உள்ளம் உடைந்த நிலையில் தத்தளிக்கிறாயா? கலக்கத்தைவிட்டு, கர்த்தரை நோக்கிப்பார். என்னைத் தாங்கிய தேவனுடைய வார்த்தையே உன் சிறுமையில் உனக்கு ஆறுதலும் மீட்பும் அருளுவதற்கு வல்லமையுள்ளதாக உன்னிடத்தில் கடந்துவரும் (சங். 119:49,50).

இன்னும் ஒருதடவை பயங்கரமான வியாதியினால் தாக்குண்டு, உள்ளத்தில் விசாரங்கள் பெருக செய்வதறியாமல் தவித்திருந்தேன். மூன்றாம் நாளிலே கர்த்தர் தாமே யோர்தான் நதியிலே தாம் செய்த மகத்தான அற்புதத்தை நினைவுபடுத்தி என்னை ஆறுதல் படுத்தினார் (யோசுவா 3:1-17). என் ஆத்துமா தேற்றப்பட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். தேவன் தமது கிரியையை என்னில் ஆரம்பித்தார். தேவபிள்ளையே, மரணபோராட்டத்தில் அகப்பட்டு உன் உள்ளமும் விசாரத்தினால் நிரம்பியிருக்கிறதா? தேவன் உன்னைத் தேற்ற வல்லவராயிருக்கிறார். இப்படியே பலவித காரணங்களினால் பெருகும் விசாரங்களும், என்னவாகுமோ என்ற அங்கலாய்ப்புகளும், குடும்பம் உடைந்துவிடுமோ என்ற ஏக்கங்களும் துக்கங்களும் பலரது உள்ளத்தில் இன்று பெருகிக் காணப்படுகின்றன. நிம்மதியின்றி தவிப்பவர்கள் ஏராளம்.

பிரியமானவர்களே, பவுலடியார் நமது தேவனுக்கு அருமையான நாமம் ஒன்றைச் சூட்டியுள்ளார். “சகலவிதமான ஆறுதலின் தேவன்” இதிலே “சகல” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ஆம், சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு ஆறுதல் செய்கிறவர் (2 கொரி.1:3,4) “அவரே நம் உபத்திரவத்தைப் பார்த்து, நமது ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறவர்” (சங்.31:7) “அவர் நம் ஆத்துமாவைத் தேற்றுகிறவர்” (சங்.23:3). இவ்வார்த்தைகள் பொய்யல்ல. வியாகுலங்கள் பெருகும் நேரங்கள், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று தவிக்கும் நேரங்கள்தான், தேவனுடைய அன்புக்கரத்தின் ஆறுதலை நாம் அதிகமாக அனுபவிக்கும் நேரமாகும். அப்போது, விசாரங்களுக்கு மேலாக வியக்கத்தக்க மகிழ்ச்சியால் நமது ஆத்துமா நிரம்புவதை நாம் அறியலாம்.

ஜெபம்: என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கும் பிதாவே, உம்மை மறந்த நாட்களை மன்னித்து, என்னைத் தூக்கி நிறுத்தும் ஐயா. விசாரங்கள் என் வாழ்வில் பெருகும் போது உமது ஆறுதல்கள் என்னை தேற்றுகிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.