வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 1 புதன்

கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் (ரோமர் 12:10).

நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. (சகரி. 8:13)
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 1,2 | மாலை: மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 1 புதன்

கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும், உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும் (சங்.143:1).

வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12) என்ற வாக்குப்படி இப்புதிய ஆண்டில் கர்த்தர் நமக்கு முன்பதாக சென்று பாதைகளை செவ்வைப்படுத்தி, நம்மைப் போதித்து அவருடைய வழிகளில் நடத்தும்படியாக நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

கர்த்தருக்கு அருமையானவர்களே!

தியானம்: 2025 ஜனவரி 1 புதன் | வேத வாசிப்பு: வெளி.5:1-10; 7:14

YouTube video

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய், நானும் உன்னைச் சிநேகித்தேன் (ஏசாயா 43:4).

தேவனுடைய பெரிதான கிருபையால் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் எமது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை நடத்தின ஆண்டவர்தாமே இப்புதிய ஆண்டிலும் ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான நன்மைகளினாலும் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது (சகரி.8:13).

நம்மைச் சுற்றிலும் பயங்கரங்கள் சூழ்ந்திருந்தாலும், கர்த்தருடையபெரிதான கிருபையினாலும் இரக்கத்தினாலும் இன்னுமொரு புதிய ஆண்டுக்குள் நாம் கால் பதித்திருக்கிறோம். நமக்குள் ஆண்டவர் அளித்திருக்கிற அவரது சமாதானம் நம்மை இன்னமும் ஆண்டுகொண்டிருப்பதால் கர்த்தரை ஏகமாய் ஸ்தோத்தரிப்போமாக. இந்த புதிய ஆண்டின் இந்த முதல் நாளிலே ஒரு வேதவாக்கியத்தை நாம் சற்று சிந்திப்பது நல்லது. “வழிகளிலே நின்று பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு, விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 6:16).

இஸ்ரவேலைக் கண்டித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா, பிற்பகுதியில் மக்களைத்தேற்றி, சொன்னது: “பயப்படாதே” என்பதுதான். இன்றும் இந்தக் கடினமான காலப்பகுதியில் கர்த்தர் நம்மைப்பார்த்தும், “பயப்படாதே, நீ என்னுடையவன்” என்று உரிமை பாராட்டுகிறார். ஆனால் நாமோ, நமது பெறுமதிப்பை உணருவதில்லை. கர்த்தர் நம்மை மீட்டெடுத்தபோது நாம் இருந்தநிலை என்ன? இன்று நாம் வாழும் வாழ்வுக்கு நாம் தகுதியானவர்கள்தானா என்பதை நாம் சிந்திக்கவேண்டும். பாவம் புதிதல்ல, ஏதேனில் நடந்ததுதான் இன்றும் தொடருகிறது. ஆனால், அதற்கு முகங்கொடுக்கும்போதுதான் நாம் கலங்கிப்போகிறோம். அந்தக் கலக்கத்தைப் போக்கும் வழியையும் கர்த்தர் எரேமியா மூலம் நமக்குத் தந்திருக்கிறார். நாம் நடக்கவேண்டிய பாதை தேவனால் பூர்வத்திலேயே வகுக்கப்பட்டுவிட்டது. எக்காலத்துக்குமுரிய வேதாகமம் நமக்குத் தந்திருக்கிற கர்த்தருடைய வழிகள், பழையதானாலும் கீழ்ப்படிகிறவர்களுக்கு அவை புதியவைதான்!

பிரியமானவர்களே, உலகக்கணிப்பின்படி வேதாகமம் பழையது என்றாலும், அதன் வழியில் நாம் நடக்கப்போகிறோமா? அல்லது, உலகம் காட்டும் நவீன கவர்ச்சியின் பாதையில் நடக்கப்போகிறோமா? என்பதை இன்று தீர்மானிப்போம். வரும் நாட்களில் பிரச்சனைகளும் நெருக்கடிகளும் அதிகரிக்கலாம். ஆனால், நமக்கு ஒரு இளைப்பாறுதலின் ஸ்தலம் உண்டு. இப்புதிய ஆண்டில் கர்த்தருடைய வழியில் நடப்பதே நமக்கு இளைப்பாறுதல்! அவர் நமக்கு முன்செல்வார்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, இப்புதிய ஆண்டில் பிரவேசிக்க எனக்கு கிருபை செய்தீரே உமக்கு ஸ்தோத்திரம்! இவ்வாண்டில் வேதாகமம் காட்டும் பூர்வ பாதையில் நடக்க என்னை அர்ப்பணிக்கிறேன். இவ்வாண்டு முழுவதும் கரம்பிடித்து வழிநடத்தும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு புத்தாண்டிற்குள் தேவன் நம்மை பிரவேசிக்க கிருபை செய்தபடியால் தேவனைத் துதிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் தேவன் நம்மை பாதுகாத்து நம் தேவைகளையெல்லாம் சந்தித்து வழிநடத்தினபடியால் அவருக்கு நன்றி பலிகளை ஏறெடுப்போம். இப்புதிய ஆண்டிலே உங்கள் ஒவ்வொருவரையும் குடும்பமாக ஆசீர்வதிக்க தேவனிடம் வேண்டுதல் செய்கிறோம். இவ்வாண்டில் தேவசமாதானமும் சுகமும் உங்கள் இல்லத்தில் நிறைவாய் தங்கியிருக்க தேவன் கிருபை செய்வாராக! 2025ஆம் ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள சத்தியவசன ஊழியப்பணிகளை தேவன் தாமே ஆசீர்வதிக்கவும் தொலைக்காட்சி ஊழியம், இலக்கிய பணி, இணைய தளம் மற்றும் சோஷியல் மீடியா ஊழியங்கள் ஆகியவற்றிற்கான தேவைகள் அனைத்தையும் தேவன் சந்திக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வூழியங்கள் வாயிலாக நற் செய்தி அறிவிக்கப்படவும் பங்காளர்கள் வேண்டுதல் செய்ய அன்போடு கேட்கிறோம்.

சத்தியவசன ஊழியத்தைக் கடந்தாண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றிகூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம். தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2024ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும். 2025ஆம் வருட சத்தியவசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர் கள் 82ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும்.

ஜனவரி மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இப்புதியவருடத்தில் நாம் காட்டவேண்டிய அன்பைக்குறித்து எழுதியுள்ள தியானங்களையும், பிப்ரவரி மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோஸ் அவர்கள் பலதலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

நல்ல போராட்டம்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நெகேமியா 4:1-20

நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் என்றேன் (நெகேமியா 4:20).

தேவனுடைய ஊழியத்தை நாம் உண்மையாய்ச் செய்யும்பொழுது, தேவனின் எதிரிகளின் எதிர்ப்புகள் நமக்கு நிச்சயமாக உண்டு. சில வைராக்கியமான கிறிஸ்தவர்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள போராட்டம் தொடர்பான உருவகங்களால் கலக்கமடைந்துள்ளனர். ஆனால் அந்த உருவகங்களை நாம் புறக்கணிக்கமுடியாது. யூத மக்களின் வரலாற்றில் அவர்கள் அநேக போர்களை சந்தித்தனர். திருச்சபையும் தனக்குரிய எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. முதல் முறை சபை என்ற சொல் புதிய ஏற்பாட்டில் கட்டிடத்தையும் யுத்தத்தையும் இணைத்தே குறிப்பதாக உள்ளது (மத்.16:18). பவுல் அப்போஸ்தலனும் யுத்தங்களைச் சார்ந்த உவமைகளை தனது நிருபங்களில் எழுதுவதைத் தவிர்க்கவில்லை (எபே.6:10-20; 2தீமோ.2:1-4; 1 கொரி.15:57; 2 கொரி.2:12-17; 10: 4-6). தேவனுடைய பகைவர்களை நாம் எதிர்க்கும்பொழுது அவர் நமக்காக யுத்தம் பண்ணுவார்.

தேவனுடைய தன்மை இதனை வெளிப்படுத்துகிறது: செங்கடலை இஸ்ரவேலர் கடந்த பின்னர் “ஆண்டவர் போரில் வல்லவர்” (யாத்.15:3) என்று பெண்கள் பாடினர். அமலேக்கியர் இஸ்ரவேலரைத் தாக்கியபொழுது மோசேயின் ஜெபமும், யோசுவாவின் படையும் அவர்களைத் தோற்கடித்தது (17:8-16). மோசே இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து ஒரு பலிபீடத்தைக்கட்டி அதற்கு “யேகோவாநிசி” (ஆண்டவர் என் வெற்றிக்கொடி) என்று பெயரிட்டழைத்தார். மோசேயின் கடைசி வார்த்தைகளில் “உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே” (உபா.33:29) என்று விளக்கியுள்ளார். “ஆண்டவர் பராக்கிரமசாலியைப் போல் புறப்பட்டு யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு முன்செல்வார்” (ஏசா.42:13) என்று ஏசாயா தீர்க்கதரிசியும், “கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்” (எரே.20:11) என்று எரேமியா தீர்க்கதரிசியும் எழுதியுள்ளார். நம்முடைய தேவன் பரிசுத்தர், நீதியும் நேர்மையும் அவரது பரிசுத்த தன்மைக்கு சாட்சிகள். தேவஜனங்கள் துன்மார்க்கரின் கூட்டத்துக்கு எதிர்த்து நிற்கும்பொழுது, ஆண்டவரும் அவர்களோடு போராடுவார்.

தேவனுடைய உடன்படிக்கையை லேவியராகமம் 26,27 மற்றும் உபாகமம் 28-30 வரையுள்ள அதிகாரங்களில் நாம் காணலாம். இஸ்ரவேலர் கானானை அடைந்தபொழுது, “நீங்கள் உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள், அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்” (லேவி.26:7,8). “உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்” (உபா.28:7) என்று தைரியப்படுத்துகிறார்.

தேவனின் உடன்படிக்கை இதனை அறிவிக்கிறது: இயேசு தமது இரத்தத்தால் சபையுடன் செய்த உடன்படிக்கையானது, நிலம், செல்வம் இவற்றுடன் தொடர்புடையது அல்ல. ஆனால், அது ஆன்மீகம் தொடர்பானது. அவருடைய சபையை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளமாட்டாது (மத்.16:18). “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1கொரி.15:57). “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4). கிறிஸ்தவ வீரர்கள் சமாதானத்தின் காலணிகளை அணிந்துள்ளனர் (எபே.6:15). நாம் நற்செய்தியை அறிவிக்கும்பொழுது போரையல்ல; சமாதானத்தையே நாடுகிறோம். எனவே சாத்தான் நம்மை எதிர்க்கிறான். “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:37).

தேவனுடைய பிள்ளைகள் இதனைச் சார்ந்து இருக்கவேண்டும்: இந்த ஆன்மீகப் போராட்டத்தில் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்தவர்களாய் ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவருடைய வாக்குறுதியை நம்பியிருப்பதே நமது பங்கு. அனுதினமும் அவருடைய வார்த்தையை தியானித்து, ஆவியானவருக்கு நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்காய் உறுதியாய் நிற்கவேண்டும். இருமனமுள்ள கிறிஸ்தவர்கள் வெற்றியை அல்ல தோல்வியையே தழுவுகிறார்கள். “நல்மீட்பர் பட்சம் நில்லும்” (Stand up, Stand up for Jesus) என்ற பழைய பாடலுக்கேற்றபடி இந்த ஆன்மீக போரில் தேவனுக்கு சாட்சியாக நிற்பதும் ஒரு சாதனையே. இது நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்புகளைத் தருகிறது. போர்கள் வரும் பொழுது “நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்” (நெகேமியா 4:20) என்று நெகேமியா சொன்னதை நினைவில் வையுங்கள். நீங்கள் தனியாகப் போராடவில்லை. நாம் தேவனுடன் இணைந்திருப்பதால் அவரும் நம்முடன் போராடுகிறார். “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு” (1 தீமோ. 6:12).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

3. வேதாகமம் தவறில்லாதது. மாறாதது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (ஜனவரி – பிப்ரவரி 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தின் தனித்தன்மையைக் காட்டுவதற்கு ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் உண்டு. அவைகள்

1. INSPIRATION – அகத்தூண்டுதல் பெற்றது.

2. ILLUMINATION – உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது.

3. INERRANCY – தவறில்லாதது.

4. INFALLIBILITY – பிழையில்லாதது.

இந்த நான்கு வார்த்தைகளும் I என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதைக் கவனிக்கவும். இவற்றில் முதலாவது வார்த்தை அகத்தூண்டல் (Inspiration) பற்றிப் பார்த்துவிட்டோம். மற்ற மூன்றையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவற்றுக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பைச் சிந்திப்போம்.

2. உட்கருத்தை உணர்த்திக் காட்டுவது

அப்படி என்றால் என்ன?

கர்த்தரால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ள உதவுதல். அறிவு பூர்வமாக மட்டுமல்ல, சொற்பொருளின் படி மட்டுமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக அந்த கருக்தை அறிந்துகொள்ளவும், அந்த பகுதி அல்லது வார்த்தையின் மூலம் தேவன் நமக்குத் தரும் செய்தி என்ன வென்று உணர்த்துவதும் ஆகும்.

பரிசுத்த ஆவியானவர் வேதவசனங்களை நமக்கு விளக்கிக்காட்டும்போது, புரிந்துகொள்ள உதவும்போது. அந்த வார்த்தையின் பொருள் என்ன? என்று கற்பிக்கிறார்.

அது நமது வாழ்க்கையை எப்படி மாற்றமுடியும்? என்று காட்டுகிறார்.

அது எப்படி நமக்கு வழிகாட்ட முடியும் என்றும் காட்டுகிறார்.

முந்தின அதிகாரத்தில் நாம் கண்ட உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர், உலகத்துக்குச் சமாதானம் கொண்டுவர ஒரு திட்டத்தை உங்களிடம் விளக்கிக் கூறினார். நீங்கள் அதைக் கேட்டு, அந்தத் திட்டத்தை உங்கள் சொந்த வார்த்தையிலும், மொழிநடையிலும் எழுதினீர்கள். ஆனால், அவர் நீங்கள் எழுதுவது அவருடைய உள்ளத்திலிருந்த கருத்துத்தானா? அவர் தெரிவிக்க விரும்பிய செய்திதானா? என்று சரிபார்த்து, சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கம் கொடுக்கவும் உதவி செய்தார். தன் செய்தியை உறுதிசெய்து கொண்டார். அவர் உங்களை அழைத்துத் தன் அலுவலகத்தில் அமரச்செய்து உலக சமாதானத் திட்டத்தை உங்களிடம் விளக்கிக்கூறியதே வெளிப்படுத்துதல் ஆகும்.

பின்னர் நீங்கள் எழுதும்போது சரி யான பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சரியான விளக்கத்தைக் கூறவும் உங்களுக்கு உதவியதே அகத் தூண்டுதல் ஆகும்.

இப்படி வெளிப்படுத்தல் பெற்று, அகத் தூண்டுதலின் உதவியுடன் நீங்கள் எழுதி முடித்ததன் கருத்து உங்களுக்குச் சரியாகப் புரிந்திருக்காது. எனவே அடுத்தபடியாக உட்கருத்தை உணர்ந்து கொள்ளுதல் (Illumination) தேவை.

பொதுச் செயலாளர் நீங்கள் எழுதிய தற்கு விளக்கம் தருகிறார். நீங்கள் எழுதியதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். நீங்கள் எழுதியதை நீங்கள் புரிந்துகொள்வதன்மூலம் அது உங்கள் இருதயத்துக்கும் உள்ளத்துக்கும் சென்று சேர்ந்துவிடுகிறது. அந்தச் சமாதானத்திட்டம் செயல்படுத்தப்படலாம். நீங்களும் அதற்கு உதவி செய்யமுடியும் என்று நீங்கள் அறியும்போது, இந்தச் செய்தி உங்கள் இருதயத்தில் சென்றடைந்துவிட்டது. உங்கள் உள்ளத்திலும் நிறைந்துவிட்டது! இதுதான் உட்கருத்தை உணர்ந்துகொள்வதின் பலன். இந்தச் செய்தி உங்கள் உள்ளம் வழியாகச் சென்று உங்கள் இருதயத்தை மாற்றிவிட்டது.

வேதாகமத்தை வாசிக்கும்போது இது நமக்கு மிகவும் தேவைப்படுகிறது. நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை வாசிக்கும்போது, நாம் அதைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து நன்மை பெறவும், நீங்கள் வாசிக்கும் பகுதியை தேவன் உங்களுக்கு உணர்த்திக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதற்கு இரண்டு பதில்கள் உள்ளன.

முதலாவதாக, நம்மிடம் இயற்கையாக இருக்கும் குருட்டுத்தன்மை, ஆவிக் குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் செய்துவிடுகிறது. வேதாகமம் தேவனுடைய புத்தகம். வேறு எங்கும் நாம் காணமுடியாத ஆவிக்குரிய சத்தியங்கள் நிறைந்தது. ஆவிக்குரிய மனப்பான்மை இல்லாதவர்கள் வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது.

கர்த்தருடைய வசனம் கூறுகிறது: ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான் (1கொரி. 2:214).

உலகம் அறியாத ஆவிக்குரிய சத்தி யங்களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றவர்கள் மட்டுமே, தேவவசனங்களில் உள்ள ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்து கொள்ளமுடியும். பேதுரு இயேசுவிடம், நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய கிறிஸ்து என்று கூறியபோது இயேசு என்ன சொன்னார்? இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை (மத்.16:17). இந்த உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த அறிவாளிகளால் கூடப் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் உண்டு. ஏனென்றால் அவர்கள் ஆவிக் குரியவர்கள்அல்ல. பரிசுத்த ஆவியானவர் தங்களுக்குள் வாசம் செய்யாவிட்டால் மிகச்சிறந்த அறிவாளிகள்கூட எளிய ஆவிக்குரிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி பாவம் அவர்களுடைய கண் களை மறைத்துவிடுகிறது. எனவேதான் தேவஆவியால் உட்கருத்து உணர்த்தப்படுவது மிகவும் முக்கியமானது.

மக்கள் ஏன் வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாதபடி மாம்சக்கண்கள் குருடாக்கப்பட்டிருப்பது முதல் காரணம். அவர்கள் சாத்தானாலும் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிக் கூறினார்: எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால். கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி.4:3,4).

சாத்தானானவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாயிருக்கிறான். மக்கள் தேவனுடன் உறுதியான உறவுகொள்ள முடியும் என்ற சத்தியத்தை உணரமுடியாதபடி அவன் செய்துவிடுகிறான். இதைத்தான் சாத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான்.

வேதத்தின் உட்கருத்தை நாம் உணருதல் மிகவும் முக்கியம். உங்களுக்கு வேதாகமத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்குமானால், நீங்கள் உங்களைத் தற்பரிசோதனை செய்யுங்கள்.

நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம் செய்கிறாரா?

பரிசுத்தாவியானவர் உங்களுக்குள் இல்லையானால், அவர் வேதத்தின் உட் கருத்தை நீங்கள் புரிந்துகொள்ள உதவி செய்யமாட்டார். நீங்கள் ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாது. உங்களுக்குள் பரிசுத்தாவியானவர் இருப்பாரானால், நீங்கள் வேதத்தை வாசிக்கத் தொடங்கு முன் அமைதியாய்ச் சில நிமிடங்கள் ஜெபம் செய்யுங்கள். ஆவியானவர் உங்கள் ஆசிரியராயிருந்து வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவிசெய்யும்படி வேண்டுங்கள். ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று வேதம் கூறுகிறது.

I – வரிசையில் அடுத்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. Inerrancy and Infalliability தவறாதது, பிழை இல்லாதது. பலர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒரேபொருள் உள்ளதுபோலப் பயன்படுத்துவர். ஆனால், அவற்றின் கருத்து வித்தியாசமானது. ஒரு பழமொழி கூறப்படுவதை அறிவோம். தவறுவது மனித இயற்கை; மன்னிப்பது தேவனின் இயற்கை. தவறுவது (Inerrancy) என்றால் ஒரு தவறைச் செய்தல். தவறாதது என்று ஒன்று இருக்குமானால் அதில் தவறு ஏதும் இருக்காது. இதை ஆங்கிலத்தில் Error Free என்பார்கள். அதைத்தான் தவறில்லாதது என்று பதில் கூறுகிறோம்.

வேதாகம நூல்களை முதன்முதலில் எழுதியவர்கள் அவற்றில் ஒரு பிழையும் இல்லாதமுறையில் எழுதினார்கள். அவற்றில் தவறுகளோ, முரண்பாடுகளோ இல்லாதவகையில் எழுதியிருந்தார்கள். தோற்சுருள்களிலும் பாப்பிரஸ் தகடுகளிலும் எழுதப்பட்ட மூலப்பிரதிகள் தவறில்லாதவைகளாய் இருந்தன.

அடுத்த வார்த்தை Infallible – பிழை யில்லாதது. இதன்பொருள் வேதாகமத்தில் தவறு இருக்கமுடியாது என்பதாகும். வேதாகமம் தவறில்லாததாய் இருப்பது மட்டுமல்ல; அது தவறு எதையும் வைத்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. சரியில்லாத எதுவும் வேதாகமத்தில் இடம்பெறமுடியாது. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியம் என்றென்றும் நிலைத்து நிற்கும். எக்காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் அதில் எவ்வித மாறுதலும் ஏற்படாது.

வேதாகமம் தேவனால் தரப்பட்டுள்ளது. எனவே அதில் தவறு இல்லை, தவறு இருக்கவும் முடியாது. இப்படித் தவறில்லாத புத்தகம் வேதாகமம் மட்டுமே. நான் பல டஜன் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், அவற்றில் தவறில்லாத புத்தகங்கள் ஏதும் இல்லை.

வேறு எந்தப் புத்தகமும் தவறே இல்லாதது என்று கூறப்பட முடியாது. வேதாகமம் இப்படித் தவறில்லாததாகவும் பிழை இல்லாததாகவும் இருக்கக் காரணம் என்ன? தேவனுடைய குணாதிசயமே அதற்குக் காரணம். அவரிடம் தவறு அல்லது பிழை எப்படி இருக்கமுடியும்?

பொய்யுரையாத தேவன் (தீத்து 1:3) என்று பவுல் குறிப்பிடுகிறார். தேவன் உண்மையில்லாத எதையும், சரியில்லாத எதையும், தவறான எதையும், பிழையான எதையும் வேதபுத்தகத்தில் அனுமதிக்கமாட்டார்.

உதாரணமாக, பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் ஒரு தவறான செய்தியை எழுதுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தேவனுக்கு அனைத்தும் தெரியும். பவுல் எழுதியிருப்பது தவறு என்றும் தெரியும். நீதியுள்ள தேவன் இதைக்கண்ட பின்னரும் ஒன்றும் செய்யாமல் இருப்பாரா? நான் வணங்கும் பரிபூரண தேவன் அப்படிச் செய்யமாட்டார்.

வேதாகமம் தவறில்லாதது. வேதாகமத்தில் எந்தப் பிழையும் இருக்கமுடியாது. ஏனெனில் அது வேனுடைய வார்த்தை.

வேதாகமம் தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையது. உலக வரலாற்றில் எல்லாப் புத்தகங்களிலிருந்து வேதாகமம் மட்டும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது மற்ற எல்லா எழுத்துக்களைப் பார்க்கிலும் வித்தியாசமானது. ஏன்? ஏனெனில் இது தேவனுக்குச் சொந்தமானது. இது தேவனுடைய குணாதிசயத்தைப் பிரதிபலிக்கிறது. உலகமக்கள்மீது தேவன் வைத்திருக்கும் அன்பை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

உங்கள் வேதாகமத்தை வாசித்துச் சந்தோஷப்படுங்கள். சத்தியத்தை வாசிக்கிறோம் என்று நிச்சயம் கொள்ளக்கூடிய இடம் அது ஒன்றே.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2