ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 28 வெள்ளி
நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார் (நீதி.3:33) பலவித பொருளாதார தேவைகளோடு இருக்கும் பங்காளர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம். இம் மாதம் முழுவதும் கர்த்தர் நமது குடும்பங்களுக்கு, ஊழியங்களுக்கு, தேசத்திற்கு செய்த சகல நன்மைகளுக்காகவும், அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காகவும் முழுஇருதயத்தோடு நன்றி செலுத்துவோம்.
கற்றிடத் தாமதியாதே!
தியானம்: 2025 பிப்ரவரி 28 வெள்ளி | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 18:24-28

…. தேவனுடைய மார்க்கத்தை அதிகத் திட்டமாய் அவனுக்கு (அப்பொல்லோ) விவரித்துக் காண்பித்தார்கள் (அப்போஸ்தலர் 18:26).
ஒரு குடும்பத்தினர் வெளிநாட்டவரை விருந்துக்கு அழைத்திருந்தனர். விருந்தினருக்கு நண்டு விருப்பம் என்பதால், அவர் கரண்டியால் சாப்பிடுவதற்கு இலகுவாக நண்டின் ஓட்டை உடைத்து சமைத்து வைத்தார்கள். அவரும் அதை சுவைத்து உண்ணும்போது நான்கு வயதுள்ள அவ்வீட்டு சிறுமி, தானாகவே நண்டை உடைத்துச் சாப்பிடுவதை இவர் கவனித்தார். உடனே, நானும் இவளைப்போல நண்டை உடைத்துச் சாப்பிட இவளிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி, கரண்டியை அப்பால் வைத்துவிட்டு கைகளினால் சாப்பிட ஆரம்பித்தார். தனது வயதையும் மதிப்பையும் எண்ணாமல் ஒரு சிறுமிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திய இவர் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டார்.
இங்கே அப்பொல்லோவும், ஆவியில் அனலுள்ளவனாய், கர்த்தருக்கு அடுத்த வைகளை திட்டமாய்ப் போதகம் பண்ணுகிறவனாய் இருந்தும், தனக்கு எல்லாம் தெரியும் என்றிராமல், ஆக்கில்லா பிரிஸ்கில்லாவிடம் கற்றுத் தெரிந்துகொள்ள தன்னைத் தாழ்த்தி விட்டுக்கொடுக்கிறதை வாசிக்கிறோம். இவ்விதமாய் அவன் கற்றுக்கொண்டதால் அதிக உறுதியுடன் வெளியரங்கமாய் யூதர்களுடன் பலமாய்த் தர்க்கம் பண்ணி, இயேசுவை கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்த ஏதுவாயிற்று. அப்பொல்லோ தன்னைத் தாழ்த்தக் கற்றுக்கொண்டதால் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள்ளாய் பெலப்படுத்தவும், அவர்களுக்கு உதவவும் அவனால் முடிந்தது. ஆம், தம்மை தாழ்த்துபவர்கள் கற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள்.
நாமோ நமக்கு எதுவும் தெரியாமலேயே எல்லாம் தெரிந்ததுபோல பேசிவிடுகிறோம். அறிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் பெருமை நம்மை விடாது. தேவனுடைய வார்த்தைகளைக்கூட ஆராய்ந்து படிக்க நமக்கு விருப்பம் கிடையாது. தெரிந்த சிறிதளவை வைத்துக்கொண்டு நாமும் குழம்பி, பிறரையும் குழப்பிவிடுகிறோம். நாம் புதியவற்றைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். தெரியாதோருக்கு அத்தம்பதியினர் செய்ததுபோல நாமும் உதவி செய்திட தயாராக இருக்கவேண்டும்.
பிரியமான தேவபிள்ளையே, சற்று நம்மை ஆராய்ந்து பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் யாருமே இல்லை. எத்தனை தடவை நமது பெருமையினால் பல காரியங்களைத் தவற விட்டிருக்கிறோம். நாம் பிறருக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய தருணங்களை இழந்திருக்கிறோம். இன்றே தாழ்மையாக இருக்க நாம் கற்றுக்கொள்ள தீர்மானிப்போம். கர்த்தர்தாமே நம்மை வழி நடத்துவாராக! உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று, உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும் (சங்-119:73).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, பரிசுத்த வேதாகமத்தை ஆழமாய் கற்று ஆவிக்குரிய காரியங்களில் தேறினவர்களாக காணப்படவும், மற்றவர்களையும் அவ்வழி நடத்திச் செல்லும் கிருபைகளால் எங்களை நிரப்பும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 27 வியாழன்
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். (மத். 7:1)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 10,11 | மாலை: மாற்கு 6:32-56
ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 27 வியாழன்
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (ஏசாயா 66:13) ஒவ்வொரு நாளும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகிற குடும்பங்கள், அநேக நாட்களாக ஜெபித்தும் இன்னும் ஏற்ற பதில் இல்லையே என சோர்ந்துபோயிருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர்தாமே திடப்படுத்தி தமது வலக்கரத்தால் தாங்கிநடத்த வேண்டுதல் செய்வோம்.
இரட்சிப்பின் தேவன்!
தியானம்: 2025 பிப்ரவரி 27 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 15:11-24

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே (ரோமர் 5:9).
மேசையிலே சுவையான உணவு, தண்ணீர், சாப்பிடத் தட்டு எல்லாமே ஆயத்தமாயிருக்க, அதே மேசையில் உட்கார்ந்தும் உணவு உண்ணாமல் மரித்துப் போனால் அவனைப்போல பரிதாபத்திற்குரியவன் ஒருவன் இருக்கமுடியாது. ஆத்தும மீட்பை இன்னமும் பெற்றுக்கொள்ளாதிருக்கிறவனின் நிலையும் இதுதான்.
மனிதனுடைய மீட்பிற்கான சகல காரியங்களையும் ஆண்டவர் செய்து முடித்துவிட்டார். பாவிகளாகிய நம்மை மீட்பதற்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். வந்தவர், சிலுவைவரை தன்னை அர்ப்பணித்து, மரித்து, உயிர்த்து நமக்கான மீட்பை தந்துவிட்டார். அதைப் பெற்றுக்கொள்வதும், மறுப்பதும் நமது தெரிந்தெடுப்பில்தான் தங்கியுள்ளது. இன்று இந்தப் பெரிதான இரட்சிப்பைக் குறித்துக் கரிசனையற்றிருப்போர் அநேகர். இரட்சிப்பைப் பெற்றும் அதைக் காத்துக்கொள்ள முடியாமல் பின்மாற்றங் கண்டோர் பலர். இரட்சிக்கப்படாதோர் குறித்து அக்கறையற்றிருப்போர் அதிலும் அநேகர். மொத்தத்தில் உன்னதமான இரட்சிப்பு இன்று உதாசீனம் செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை.
இது ஏன்? தன் பாவத்தை உணர்ந்து, தன்னைப் பாவி என்று அறிக்கை செய்கிறவனே இந்த மீட்பைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால், தான் ஒரு பாவி என்று உணருமளவுக்குத் தன்னை தாழ்த்துவதுதான் இன்று மனிதனுக்கு மிகவும் கடினமான காரியமாயுள்ளது. இன்றைய வேதப்பகுதியில் இளைய குமாரன் தகப்பனின் அன்பை உதாசீனம் செய்து தனதுபோக்கில் சென்றான். அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, “…தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் நான் பாவம் செய்தேன், இனி உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல…” என்று அறிக்கை செய்ததைப் பார்க்கிறோம். இந்த மனம் உடையவேண்டுமானால் நாம் நமது நிலையை உணர்ந்து நம்மைத் தாழ்த்தவேண்டும்.
தேவபிள்ளையே, எவனொருவன் தான் பாவியென்றும் பாத்திரனல்லவென்றும் அவர் சமுகத்தில் தன்னைத் தாழ்த்துகிறானோ, அவன் மீட்பிற்குத் தூரமானவன் அல்ல. “நான் பாத்திரனல்ல” என்று உணரும்போதே பரம தகப்பன் நம்மைத் தமது பிள்ளையாக ஏற்கிறார். எனவே நாம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க ஆயத்தமா? “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காகப் மரித்ததினாலே தேவன் நம்மீது வைத்திருந்த அன்பை விளங்கப்பண்ணினார்” (ரோமர் 5:8). இந்த உன்னத அன்பை நாம் ஏன் உதாசீனம் செய்யவேண்டும்? இன்றே நம்மைத் தாழ்த்தி நம்மை ஒப்புவிப்போமாக. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே.2:8).
ஜெபம்: எங்கள் இரட்சிப்பின் தேவனே, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் இரட்சிப்பின் நற்செய்தியினாலே உலகமக்கள் சந்திக்கப்படவும் மீட்பின் திட்டம் இப்பூலகில் நிறைவேறவும் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.