ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 20 வியாழன்
சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்கு உள்ள தடைகளை அகற்றி அநேக ஆலயங்களிலே கர்த்தர் வாசலை திறந்துதரவும், ஆண்டவரைவிட்டு தூரம் போன ஒவ்வொருவரும் மீண்டும் வேதாகமத்திற்கு திரும்பவும், வசனத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கத் தக்கதாக முன்னேற்றப்பணி கூட்டங்கள் அமைய வேண்டுதல் செய்வோம்.
வேதம் பேதமின்றிப் பேசும்!
தியானம்: 2025 மார்ச் 20 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 119:89-96

நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன் (சங்கீதம் 119:94).
சுமார் முப்பது ஆண்டுகளின் பின்னர், என் உறவினர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவர் கூறினார்: “முப்பது வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எனக்கு வேதத்தைத் தந்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிச்சொல்லி, என்னை ஆலயத்திற்கும் கூட்டிச்சென்றீர்கள். இவைகளை நான் பெரிதுபடுத்தவில்லை. பின்பு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்த நிலையில், எங்கள் குடும்பம் போர் சூழலில் சிக்கியது. இந்நிலையில் வீடு வாசல் தொழில் எல்லாவற்றையும் இழந்து ஒரு பிச்சைக்காரனைப்போல நின்றிருந்தேன். கண்ணீரும் கஷ்டமும் நெருக்கிய அந்த நிலையில் நீங்கள் கூறிய சத்திய தெய்வம் இயேசுவை நினைத்துப்பார்த்து, நீங்கள் தந்த வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அன்று சொன்ன வார்த்தைகள் எனக்குள் துளிர்விடத் தொடங்கியது. என் பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டேன். இப்போது இயேசுவை என் சொந்த மீட்பராக ஏற்றுக்கொண்டேன். முப்பது வருடங்களுக்கு முன் கர்த்தர் என் காலிலே ஒரு கட்டைப்போட்டார். நானோ கண்மூடித்தனமாக வாழ்ந்து அலைந்து திரிந்தேன். இப்போது அந்தக் கயிற்றைப்பிடித்து இழுத்து என்னை ஆண்டவராகிய இயேசு தன் பக்கம் சேர்த்துக்கொண்டார். கர்த்தருக்கே நன்றி” என்றார் அவர். எத்தனை சந்தோஷமான செய்தி! எனக்குள் பெரிய மகிழ்ச்சி. வேதவாக்கியத்திற்குப் பேதம் ஏது? அதைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டுபிடிப்பார்கள். விதைக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தை விளைச்சலைக் காணாமல் திரும்பாது என்பது எத்தனை உண்மை!
இந்த இனிய அனுபவங்களையே தாவீதும் தனது அனுபவமாகக் கொண்டிருந்தார். “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்” (சங்.119:92). வேதம் நமது மனமகிழ்ச்சியா? மனமடிவா? வேதத்தை வாசித்து தியானித்து அதை நேசிக்கிறவர்களுக்கு அது மனமகிழ்ச்சி! மூடி வைத்துவிட்டு கண்மூடித்தனமாக வாழ்ந்தால் மனமடிவுதான் மிஞ்சும். வேத வாக்கியங்கள் நமது கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அது வழிகாட்டும். இந்த வேதவார்த்தையின் வெளிச்சம் அந்த சகோதரனுக்கும் இரட்சிப்பின் வழியைக் காட்டியது. பெற்ற இரட்சிப்பு நிலைவரப்பட கர்த்தருடைய வார்த்தையிலே நமது காலடிகளை ஊன்றவேண்டும். கர்த்தருடைய ஒரேயொரு வார்த்தையை வேண்டி நின்ற நூற்றுக்கதிபதியின் வேலைக் காரன் பிழைத்துக்கொண்டான் (மத்.8:8, லூக்.7:7). வார்த்தையின்படி வலையைப் போட்ட பேதுரு திரளான மீன்களைப் பிடித்தான்.
வார்த்தையைக் கேட்பதும் அதன்படி நடப்பதும் அவசியம். நாமும் வேதசத்தியத்தை கேட்பது மட்டுமல்ல, அதன்படி நடக்கிறவர்களாக வாழ்வோமாக.
ஜெபம்: ஆண்டவரே, வேதமே எங்களது மனமகிழ்ச்சி. வேதசத்தியத்தை கேட்டு, அதை விட்டுவிடாமல் அதன்படி நடக்கிறவர்களாக இருப்பதற்கும் உதவி செய்யும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 19 புதன்
ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும். ( 2நாளா. 25:8)
வேதவாசிப்பு: உபாகமம் 20,21 | மாலை: லூக்கா 01:26-56
ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 19 புதன்
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார் (உபா.1:10) என்ற வாக்கைப் போலவே சத்தியவசன ஊழிய பங்காளர்களையும் ஆதரவாளர்களையும் திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப் போல கர்த்தர் பெருகப்பண்ணி, ஆசீர்வதிப்பதற்கும், அவர்களது கைப்பிரயாசங்கள் காரியசித்தி அடைவதற்கும் ஜெபிப்போம்.
தேவசித்தத்திற்கே ஒப்புக்கொடு!
தியானம்: 2025 மார்ச் 19 புதன் | வேத வாசிப்பு: மத்தேயு 26:36-39

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக (மத்தேயு 6:10).
தேவனுடைய சித்தமானது மனுஷருடைய திட்டம் போன்றது அல்ல. இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றுக்கொன்று முரணானவையாகும்; எதிரும் புதிருமாகவே காணப்படும். வாலிப நாட்களிலே படித்துவிட்டு, குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு அது நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணிக் காத்திருந்தேன். பின்னர் அது கிடையாமல் போய்விட்டது; சோர்வும் ஏமாற்றமுமே மீதியானது. கடைசியில் கர்த்தர் தமக்குச் சித்தமான ஒரு வேலையைத் தருவாரென்று நம்பிக்கை வைத்து, ஜெபிக்க ஆரம்பித்து, அதற்காகக் காத்திருந்தேன். கர்த்தர் சித்தமே எந்தன் பாக்கியம் என்ற ஜெபத்துடன் வாழ கர்த்தர் எனக்குக் கற்றுத் தந்திருந்தார். எத்தனை ஆச்சரியம்! யாருமே எதிர்பார்த்திராத விதமாக ஆச்சரியமான விதத்தில் வங்கி ஒன்றில் நல்ல வேலை கிடைத்தது. வசை பாடியவர்கள் எல்லோரும் வாழ்த்துக் கூறினார்கள்.
ஆண்டவராகிய இயேசுவே, “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்.22:42) என்று பிதாவின் சித்தத்தை ஏற்று அதற்கே முதலிடம் கொடுத்து தன்னை ஒப்புக் கொடுத்தார். பிதாவின் சித்தத்திற்கு முதலிடம் கொடுக்கும்போது அது கர்த்தருக்குக் கீழ்ப்படிதலின், அடங்கி நடத்தலின் வெளிப்பாட்டைக் காண்பிக்கின்றது. அதனால் முதலில் சில இடர்கள் இருந்தாலும், அதன் பின்விளைவுகள் ஆசீர்வாதமாகவே இருக்கும். ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும். தேவசித்தத்திற்கு கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்ததின் பலன், இயேசு மரித்தும் உயிரோடே எழுப்பப்பட்டார். முழு மனித குலத்திற்குமான இரட்சிப்பு என்னும் மீட்பின் விடுதலையை அது பெற்றுக்கொடுத்தது. அதுவே சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்ததன் பலன். கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்: அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு நீடித்த நாளாயிருப்பார்: கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் (ஏசாயா 53:10). இதுவே தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தலின் மேன்மையாகும்.
தேவபிள்ளையே, நமது விருப்பத்தையும் சித்தத்தையும் ஒறுப்பது என்பது இயல்பாகவே நமக்குக் கடினமான காரியம்தான். நம்மைப்பார்க்கிலும் நம்மை முழுமையாக அறிந்தவராகிய தேவசித்தத்துக்கு நம்மை விட்டுவிடுவோமானால், தேவ நாமம் நமது வாழ்வில் மகிமைப்படும்; நாமும் தேவசித்தத்தை நிறைவேற்றிய கிருபை பெற்றுக்கொள்வோம். இன்று நாம் நம்முடைய விருப்பத்தைக் கர்த்தருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறோமா? ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத்.18:14).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்களது சுயவிருப்பங்களின்படியல்ல, உமது சித்தமே எங்களது பாக்கியம் என உமது பாதத்தில் காத்திருக்கும் கிருபையைத் தாரும். ஆமென்.