ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 18 செவ்வாய்
போதிய வருமானமின்றி கடன்சுமையால் வருந்தும் மக்களது விடுதலைக்காகவும், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்.11:28) என அழைக்கும் ஆண்டவரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும், வாழ்வை அழிக்க எண்ணுகிற சத்துருவின் கரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் ஜீவன் பாதுகாக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.
நாவடக்கம்!
தியானம்: 2025 மார்ச் 18 செவ்வாய் | வேத வாசிப்பு: யாக்கோபு 3:1-12

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது (யாக்கோபு 3:8).
யாக்கோபு நிருபம், இயேசுவின் சகோதரனான யாக்கோபுவினால் எழுதப்பட்டது. இவர் எருசலேம் ஆதி திருச்சபை தலைமைத்துவத்திலிருந்த ஒருவர். இவர் சிதறியிருந்த பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் பல புத்தமதிகளை எழுதினார் (யாக்.1:1) என்று தெரிகிறது. அவற்றில் “நாவை” அடக்கி வார்த்தையில் ஜாக்கிரதையாயிருப்பது எத்தனை முக்கியம் என்பதைக்குறித்த உதாரணங்களை எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றில் ஒன்று, குதிரைகளைக் கீழ்ப்படுத்தும் படிக்கு அவற்றிற்குக் கடிவாளம் போட்டு அவைகளுடைய முழுச் சரீரத்தையும் கட்டுப்படுத்துவதைக் குறித்ததாகும்.
அடுத்தது, கப்பல் பெரிதாய் இருந்தாலும், கடுங்காற்றில் அலசடிப்படும் போது, ஒரு சிறிய சுக்கானினால் கப்பலோட்டி எப்படியாகக் கப்பலை ஜாக்கிரதையாகத் திருப்புகிறான் என்றும், சிறிய நெருப்பு எவ்வண்ணம் பெரிய காட்டுத் தீயை ஏற்படுத்தும் என்பதையும் யாக்கோபு குறிப்பிட்டு எழுதுகிறார். ஆம், நமது நாவை அடக்கிப் பேசுவதினால் முழுச்சரீரத்தையும் பாவத்திற்கு விலக்கிக் காத்துக்கொள்கிறோம். புயல்போன்ற பிரச்சனைகள் வந்தாலும் ஒரு சிறு சுக்கானைப் போன்று வார்த்தைக்கூடாக போய்ச்சேரவேண்டிய இடத்தைப் போய்ச்சேர நம்மால் முடியும். அதேவேளை, ஒரு பெரிய அழிவை ஏற்படுத்தவும் நமது நாவில் பிறக்கும் ஒரு சொல் போதும் என்பதை உணர்ந்து, நமது பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது.
நமது பேச்சுக்கூடாக நமது வாழ்வில் எவ்வளவுதூரம் பாவம் உட்பிரவேசிக்கின்றது என்று யாக்கோபு நமக்கு விளக்கியுள்ளார். ஆகையால், நமது பேச்சில் எப்போதும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். யாக்கோபின் இந்தப் புத்திமதிகள் ஆரம்பகால திருச்சபை கிறிஸ்தவர்களுக்குமட்டும் எழுதப்பட்டதல்ல; கிறிஸ்துவோடு நெருங்கி வாழவேண்டும் என்ற வாஞ்சையுள்ள சகலருக்கும் இந்த அறிவுரைகள் தேவை. “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுவதற்குப் பொறுமை யாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” (யாக்.1:19) என்ற போதனையை எப்போதும் மனதிற்கொண்டு நமது நாவை அடக்கி, ஞானமான வார்த்தைகளைப் பேசுவோமாக.
அன்பானவர்களே, நமது நாவிலிருந்து புறப்படும் சொற்கள், பிறருக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பிறரை வேதனைப்படுத்தாமலும் தூற்றாத படிக்கும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். “துதியும் தூற்றுதலும் ஒரே நாவிலிருந்து பிறக்கலாகாது” (யாக்.3:10). நம்மால் அடக்கக் கடினமானது என்றால் அது நமது நாவுதான். பேச்சிலும் சரி, உணவுக்காக நீளுவதிலும் சரி. நாவைக் கட்டுப் படுத்த ஆவியானவர் நமக்குத் துணை செய்வாராக.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்கள் வாயின் வார்த்தைகளில் நாங்கள் ஜாக்கிரதை யாயிருந்து அன்பின் வார்த்தைகளைப் பேசி, பிறருக்குப் பயனுள்ள வாழ்வு வாழ எங்களை ஒப்புவிக்கிறோம், ஏற்றுக்கொள்ளும். ஆமென்.