வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 1 சனி

ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் (1தெசலோனிக்கேயர் 5:11).

நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. (ஏசா. 44:21)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 15,16,17 | மாலை: மாற்கு 08:01-21

ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 1 சனி

நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார் (சங்கீதம் 3:4).

நீ என் தாசன்: இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா.44:21) என்ற வாக்கினால் திடப்பட்டு புதிய மாதத்திற்குள் பிரவேசிப்போம். மறவாதநேசர் இம்மாதம் முழுவதும் நமது கரங்களைப் பிடித்து இடறாத செம்மையான வழியிலே நடத்தி தேவைகளைச் சந்திக்கும்படியாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

குறைவுபடாது!

தியானம்: 2025 மார்ச் 1 சனி | வேத வாசிப்பு: 1 இராஜாக்கள் 17:10-16

YouTube video

 என் பாத்திரம் நிரம்பி வழிகிறது (சங்கீதம் 23:5).

கடந்த மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்து ஒரு புதிய மாதத்திற்குள்ளாக கடந்து வர தேவன் கிருபை செய்தபடியால் அவரை முழுஇருதயத்தோடு ஸ்தோத்திரிப்போம். இந்த புதிய மாதம் முழுவதும் தேவன்தாமே நமது குடும்பத்தைப் போஷித்து நம் தேவைகளை சந்தித்து நமது விண்ணப்பங்களுக்கு பதில் தந்து வழிநடத்த வேண்டுதல் செய்கிறோம். நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமியா 29:11).

எங்கும் கொடிய பஞ்சம் யாரிடத்திலும் உணவு இல்லை. அவ்வேளை தன்னிடத்தில் உள்ள கொஞ்ச மாவிலும் அப்பத்தைச் சுட்டு தானும் தன் பிள்ளையும் சாப்பிட்டு, இறந்து போகலாம் என்ற சிந்தையோடு அப்பத்தைச் சுட ஆயத்தம் செய்துகொண்டிருந்தாள், அந்த ஏழை விதவைத் தாய். அவளை நோக்கி, தேவனுடைய தீர்க்கதரிசியாகிய எலியா, அவளிடம் இருந்ததை தனக்கு உணவாகக் கேட்டபோது, அவள் தேவனைக் கனப்படுத்தி, தேவஊழியனுக்கு இல்லையென்றில்லாமல் கொடுத்தாள். நடந்தது என்ன? பஞ்சம் தீரும்வரை அவள் பாத்திரத்தில் மா தீர்ந்துபோகவும் இல்லை. அவள் கலசத்தில் எண்ணெய் குறைந்து போகவுமில்லை. இந்நாட்களில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஓட்டைப் பைக்குள் போட்ட காசைப் போல, போதாது என்று சொல்லி குறைவுபடும் குடும்பங்கள் ஏராளம். இன்று எங்கு பார்த்தாலும் விலைவாசி அதிகரித்துவிட்டதென்பது உண்மைதான். ஆனாலும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்று வாக்குத்தத்தம் உண்டே. அப்படியானால் ஏன் இந்த குறைவு?

முதலாவதாக, கர்த்தர் நம்மைப் பராமரிப்பார் என்று சொல்லிக்கொண்டு, ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு, “என் வாழ்வில் ஏன் இந்தக் குறைவு?” என கர்த்தரைக் குறைசொல்ல முடியாது. இரண்டாவதாக, நாம் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய பங்கை கொடுக்க மறக்கக்கூடாது. இன்று நம்முடைய குறைவுக்கு ஒருவேளை கர்த்தருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்காததும் ஒரு காரணமாக இருக்குமோ? மல்கியா 3:10ன்படி நாம் அவருக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்கும்போது, கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என வசனம் சொல்லுகிறது. கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் கொடுக்கக்கூடாது. மாறாக, நாம் மனமகிழ்ச்சியுடன் கொடுக்கும்போது கர்த்தர் நம்மையும் நமது குடும்பத்தையும் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

தேவபிள்ளையே! முதலாவது, உங்களையும் உங்களிடத்தில் உள்ள அனைத்தையும் தேவனுக்கென்று கொடுத்து, அவரைக் கனப்படுத்துங்கள். “என்னைக் கனம் பண்ணுகிறவனை நானும் கனம் பண்ணுவேன்” என்று, வாக்களித்த தேவன், உங்களை ஆசீர்வதித்து, உங்கள் மூலம் மற்றவர்களும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள கிருபை செய்வார்.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இந்த மாதத்தை எங்களுக்கு ஆசீர்வதித்துத்தாரும். உக்கிராணத்துவம் உள்ளவர்களாய் வாழவும் குறைவுகள் மத்தியிலும் உம்மை கனப்படுத்தவும் எங்களுக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தை காணிக்கையாலும் ஜெபத்தினாலும் தாங்கும் அன்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

ஓராண்டிற்குள் வேதாகமத்தை வாசிப்பதற்கான அட்டவணைப்படி 2024ஆம் ஆண்டு வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இவ்வாண்டிலும் இன்னும் அநேகர் வேதாகமத்தை வாசிக்க உற்சாகப் படுத்துகிறோம். சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து சத்தியங்களை கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் பயனடைந்து வருகின்றனர். தாங்களும் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து ஆசீர்வாதமடையுங்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளே இடம்பெற்றுள்ளது. சத்தியவசன தொலைக் காட்சி ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க உங்களை அன்பாய் அழைக்கிறோம். YouTube சேனலில் வெளிவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் தொடராக பிரசுரித்து வருகிறோம். அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். லெந்துநாட்களுக்கான சிறப்பு செய்திகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. மார்ச் மாதத்தில் 5-18 நாட்களுக்கு தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும் 19-31 ஆகிய நாட்களுககு சகோ.தர்மகுல சிங்கம் அவர்களும் எழுதியுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கிறிஸ்துவின் பாடு மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் தெரிந்தெடுப்புகளை குறித்தும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

தேவனுடைய கரம்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: எஸ்றா 8:21-31

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது (எஸ்றா 8:31).

கிறிஸ்துவுக்கு இளைஞர்கள் என்ற இயக்கத்தின் தலைவரான பாப் குக் என்பவர் ஒரு YFC மாநாட்டில் “உங்களுடைய வாழ்க்கையிலும் ஊழியங்களிலும் நிகழ்வதை நீங்கள் விளக்கமுடிந்தால் தேவன் அதைச் செய்யவில்லை என்றே பொருள்; எனவே உங்களது வாழ்க்கையை அற்புதங்களின் அடிப்படையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பல ஆண்டுகளுக்கு முன் கூறியதை என்னால் மறக்கமுடியாது. தேவனுடைய கரம் நம்மீது இல்லையெனில், தேவனுடைய வல்லமையை நாம் ஒருபோதும் அனுபவிக்க முடியாது. அதுவே கிறிஸ்தவ வாழ்விலும் ஊழியங்களிலும் முன்னேற்றத்தைத் தரும். இச்சத்தியத்தை விளக்கும் வேதாகம புத்தகம் எஸ்றாவின் புத்தகம் ஆகும். “தேவனுடைய கரம் தமது பிள்ளைகளுக்காக ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்தது” என்பதை அது நன்கு விவரிக்கிறது.

வழிநடத்தும் கரம்: “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்” (நீதி. 21:1). யூதர்கள் எழுபது ஆண்டுகள் சிறைபட்டுப்போவார்கள் என்றும், பின்னர் தங்கள் தேசத்துக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எரேமியா தீர்க்கதரிசி முன்னறிவித்திருந்தார் (எரே.25:1-14; 29:10,11). நாடு கடத்தப்பட்ட தீர்க்க தரிசி தானியேல் இவ்வுண்மையை அறிந்துகொண்டார். தேவனுடைய இவ்வாக்கு றுதியை உரிமை கோரி ஜெபத்தில் தன்னை அர்ப்பணித்தார். கோரேஸ் அரசரின் இருதயம் தேவனால் ஏவப்பட்டது. சிறைப்பட்டவர்களை விடுதலை செய்தார் (எஸ்றா 1:1-4). அரசியல் அழுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் லஞ்சம் இவைகளால் அல்ல; தேவனுடைய மக்கள் தேவனுடைய வாக்குறுதிகளை நம்பி ஜெபித்ததால் இது நடந்தது.

ராஜாவின் இதயம் தேவனுடைய கரத்தால் அசைக்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் தங்களுடைய நாட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தனர் (எஸ்றா 1:5). சுமார் ஐம்பதாயிரம் பேர் பாபிலோனை விட்டு எருசலேமை நோக்கி நீண்ட பயணமாயினர். நாடுகடத்தப்பட்ட ஆண்டுகளில் அநேக குடும்பங்கள் வசதியாக வாழ்ந்தனர். எனவே அவர்கள் பாபிலோனில் தங்கியிருக்கவே விரும்பினர். ஆனால், அர்ப்பணித்திருந்த மீதியாயிருந்த மக்கள் விசுவாசத்தோடு தங்களது நாட்டுக்குத் திரும்பி ஆலயத்தைக் கட்ட பயணமாயினர். இப்பணிக்காக பாபிலோனில் தங்கியிருந்த யூதர்கள் தங்களது ஆஸ்தியில் தாராளமாகக் கொடுத்தனர். கோரேஸ் அரசர் ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுத்தார் (வச.5-8). இந்த சிறப்பான நிகழ்வுகளுக்கு தேவனே மகிமைக்குப் பாத்திரர். ஜெபத்துக்கும் கர்த்தருடைய வசனத்துக்கும் நம்மை அர்ப்பணித்தால் இதைவிட அதிகமான அற்புதங்களை நாமும் உணரலாம்.

பாதுகாக்கும் கரம்: அதிவேகமான தகவல்தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகுந்த இந்த காலத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ள நாம் தயங்குவதில்லை. ஆனால், அக்காலத்தில் இவ்வித வசதிகள் எதுவும் இல்லை. கொள்ளைக் கூட்டத்தார் சாலைகளில் பதிவிருந்தனர். எனவே பயணம் செய்வது பெரும் ஆபத்தாக இருந்தது. மேலும் அது வசதியற்றதாகவும், களைப்படையச் செய்த தாகவும் இருந்தது. ஆனால், தேவனுடைய கரம் இப்பயணத்தை மேற்கொண்ட யூதர்களைப் பாதுகாத்தது. அவர்கள் எருசலேமை அடைந்தவுடன் எருசலேம் திரும்பக் கட்டப்படுவதை விரும்பாத எதிரிகளால் தாங்கள் சூழப்பட்டிருந்ததை அறிந்துகொண்டனர். ஆனால், அவர்களுடன் சமரசம் செய்யாதவாறு தேவன் அவர்களுக்கு ஞானத்தையும் தைரியத்தையும் கொடுத்து காத்துக்கொண்டார். ஏமாற்றும் சர்ப்பமாகிய சாத்தான் பொய்சொல்லி தன்னுடைய தாக்குதலை ஆரம்பிப்பான் (எஸ்றா 4:1-5). அதில் அவன் தோற்றுவிட்டால் அவன் விழுங்கும் சிங்கமாக மாறிவிடுவான். ஆனால், தேவனுடைய கரம் வல்லமையுடையது; அவர் நமக்கு வெற்றியைத் தருவார்.

சீர்ப்படுத்தும் கரம்: எஸ்றா 9-10 மற்றும் நெகேமியா 9-13 ஆகிய அதிகாரங்கள் கர்த்தருடைய சட்டத்துக்கு கீழ்ப்படியாமல் அந்நிய ஜாதி பெண்களைத் திருமணம் செய்திருந்த யூதர்களின் சோக வரலாற்றைத் தெரிவிக்கின்றன. இந்த சமரசத்துக்கு தலைவர்கள் சம்மதித்தால் அது தேவபக்தியுள்ள ஜாதியைக் கலப்படம் செய்தவர்களாவார்கள் (மல். 2:13-16). தலைவர்கள், “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவர்களை சிட்சிக்கிறார்” (எபி.12:5,6) என்ற கொள்கையில் பழகவேண்டும். ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியும்பொழுது அவரது கரம் ஆசீர்வாதத்தை அளவில்லாமல் ஊற்றும். நாம் அவரை எதிர்க்கும்பொழுது அவரது கரம் நம்மேல் பாரமாயிருக்கும் (சங்.32:4). நாம் தேவனுக்குப் பணிபுரிய வாஞ்சிக்கும்பொழுது அவரது கரம் நம்மேல் எப்பொழுதும் நன்மையாக இருக்கும் என்பது உண்மை. கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ் செய்யும் (சங்கீதம் 118:16).

மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை

4. வேதாகமம் நித்தியமானது. பரிபூரணமானது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மார்ச் – ஏப்ரல் 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தின் தனித்தன்மைகள் பற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வேறு எந்தப் புத்தகத்துக்கும் இல்லாத தன்மைகள் சிறப்பாக வேதாகமத்தில் உள்ளன. அவை:

1. அகத்தூண்டல். 2. உட்கருத்தை உணர்த்தி காட்டுதல். 3. தவறு இல்லாமல் இருத்தல். 4. பிழை இருக்க வாய்ப்பே இல்லாதிருத்தல்.

இன்னும் இரண்டு தன்மைகள் உண்டு. அவற்றைக் குறித்து இப்போது பார்ப்போம்.

1. நித்தியமானது. 2. பூரணமானது.

வேதாகமம் நித்தியமானது. தேவன் நித்தியமானவராக இருந்தால் அவருடைய வார்த்தையும் நித்தியமானதுதானே! எனவே வேதம் நித்தியமானது என்றவுடன் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தேவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதுதான் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். அவருடைய உள்ளத்தில் உலகம் தோன்றுவதற்கு முன்னரே இருந்த சிந்தனைகளும், வார்த்தைகளும் வேதாகமத்தில் உள்ளன. காலம்கடந்த பின்னரும் அவை அவருடைய மனதில் இருக்கும்.

நாம் ஒவ்வொரு காரியத்தையும் காலத்தோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கிறோம். ஆனால் தேவன் அப்படிச் செய்வதில்லை. அவர் காலத்துக்கு அப்பாற்பட்டவர். அவருடைய வார்த்தையில் காணப்படும் சத்தியங்கள் நித்தியமானவை. ஏனெனில் அவை என்றென்றும் சத்தியமாகவே இருக்கும்.

நிச்சயமாகவே இந்தச் சத்தியங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் எழுதப்பட்டன. ஆனால், இந்த எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தைக்குக் காலம் இல்லை; அது நித்தியமானது! ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் சங்கீதக்காரனான தாவீது, “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” என்றான் (சங்.119:89)

தேவனுடைய வார்த்தையை பவுல் எழுதும்போது நிலைப்படுத்தப்படவில்லை. பவுல் எழுதுவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே நிலைப்படுத்தப்பட்டிருந்தது. வேதாகமத்தின் முதல் ஆகமங்களான ஐந்தாகமங்களையும் எழுதும்போது வேதாகமம் நிலைப்படுத்தப்படவில்லை. வேதாகமம் மோசே இவைகளை எழுதுவதற்கு முன்னரே இருந்தது.

வேதாகமம் எழுதப்படுவதற்கு ஒரு ஆரம்பம் இருந்தது. ஆனால் அதில் இருக்கும் செய்திக்கும், சத்தியத்துக்கும் ஆரம்பம் இல்லை. இந்த வேதாகமம் நித்தியமானபடியால் எப்போதும் நடை முறையில் உள்ளதாகவே இருக்கும்.

கர்த்தருடைய வேதத்தை நித்தியமானதாக இல்லாமல் ஆக்கவும், அழித்துவிடவும் பலர், பலவகைகளில் முயற்சி செய்தனர். அதை அழித்து ஒழித்துவிடவும், வரலாற்றில் இடம்பெறாமல் செய்யவும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அனைத்தையும் செய்தனர்.

பாபிலோனியர் முயற்சித்தார்கள். தோல்வி அடைந்தார்கள்.

அந்தியோகு எப்பிபானஸ் யூத சமயத்தையும் அவர்களுடைய பரிசுத்த நூல்களையும் அழிக்க நினைத்தான். தோல்வியடைந்தான்.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ரோமச் சக்கரவர்த்தியான டயோக்கிளீஷியன் மக்கள் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பிக் கிறிஸ்தவம் வலுப்பெறுவதைத் தடுக்கச் சட்டத்தின்மேல் சட்டம் பிறப்பித்தான். அவன் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களைக் கொன்றான். வேதாகமங்களை சுட்டெரித்தான். மிகவும் பெருமிதத்துடன், கிறிஸ்தவ சமயம் அழிக்கப்பட்டுவிட்டது. விக்கிரக வணக்கம் புதுப்பிக்கப்பட்டது என ஒரு தாமிரப் பட்டயத்தில் எழுதினான். ஆனால், அந்த ரோமப்பேர ரசால் தேவனுடைய நித்திய வார்த்தை யாகிய வேதாகமத்தை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியவில்லை.

பிரான்ஸ் தேசத்தில் உள்ள, சமயப்பற் றில்லாத வால்ட்டயர் ஒருதடவை இப்படிக் கூறினான். இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் கிறிஸ்தவசமயம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்துபோகும். வரலாற்றில்மட்டும் இடம்பெறும் என்றான். ஆனால், அந்த வால்ட்டயர் 1778ஆம் ஆண்டு இறந்துபோனான். வேதாகமம் ஒருபோதும் அழிவதில்லை.

இன்றும் கதை அப்படியேதான் இருக்கிறது. ஹாலிவுட்காரர்கள், மனித இன நலக் கொள்கைக்காரர்கள், பரிணாமக் கொள்கைக்காரர்கள், சில சபைப்பிரிவினர் ஆகியோர் வேதாகமத்தை அழித்து விடவும், அதன் சக்தியைக் குறைக்கவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவனுக்கு முன்பாகத் துணிகரமான பாவங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், வேதாகமம் நித்தியமானது!

வேதாகமத்தை எரித்துப்போடவும், அழித்துப்போடவும், துண்டுதுண்டாகக் கிழித்தெறியவும் எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் தோல்வியடையும். ஆண்டவராகிய இயேசு இப்படியாகக் கூறியிருக்கிறார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை (லூக்கா 21:33).

வேதாகமத்தைத் தனிசிறப்புமிக்கதாக ஆக்கும் இன்னொரு அம்சம் என்ன வென்றால், வேதாகமம் பூரணமானது என்பதாகும்.இந்தத் தன்மை இதை வேறு புத்தகங்களிலிருந்து பிரித்து வித்தியாசமானதாகக் காட்டுகிறது. வேதாகமம் தேவனைப் பூரணமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகமாகும்! தேவனைப்பற்றி வெளிப்படுத்துவதில் ஒருபகுதி மட்டுமல்ல, வெளிப்படுத்தப்பட்டது கொஞ்சம். இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டியது உண்டு என்பதல்ல. வேதாகமம் பூரணமானது. ஒரு குறைவுமில்லாதது. அது பூரணமான வட்டம்!

உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைகளில் உள்ள (மேய்ப்பர்கள் முதல் இராஜாக்கள் வரை) வெவ்வேறு காலங்களில் 40 எழுத்தாளர்களால் 1500 வருடகால இடைவெளிக்குள் எழுதி முடிக்கப்பட்ட புத்தகங்கள் எப்படி பரிபூரண மானதாக இருக்கமுடியும்?

இந்த வேதாகமத்தின் கடைசிப்பகுதி 19 நூற்றாண்டுகளுக்குமுன் எழுதி முடிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை நாம் எவ்வளவோ காரியங்களைப் படித்து அறிந்துள்ளோம்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்