ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 23 புதன்
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் .. வல்லமையோடும், பரிசுத்தஆவியோடும். முழுநிச்சயத்தோடும் வந்தது (1தெச.1:5) தென்னாப்பரிக்காவில் கடவுள் நம்பிக்கையற்று எந்த மதத்தையும் சாராமல் வாழ்ந்துகொண்டிருக்கும் 15 சதவீதமான மக்களுக்கு சுவிசேஷம் முழுநிச்சயத்தோடு அறிவிக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்துவண்டை திரும்பவும், அங்குள்ள அனைத்து திருச்சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.
சிம்சோனின் தெரிந்தெடுப்பு!
தியானம்: 2025 ஏப்ரல் 23 புதன் | வேதவாசிப்பு: நியாயாதி. 13:2-5; 16:18-30

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது (1கொரிந்தியர் 3:19).
மனோவாவின் மனைவிக்குத் தரிசனமான கர்த்தருடைய தூதனானவர், அவளுக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்றும், “அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்” என்றும் சொன்னார். இவ்விதமாக கர்த்தருடைய வேலையைச் செய்வதற்கென்றே முன்னறிவிக்கப்பட்டு பிறந்தவன் சிம்சோன்.
ஒரு ஆணோ பெண்ணோ கர்த்தருக்கென்று நசரேய விரதத்திற்குப் பொருத்தனை பண்ணினால் எப்படி இருக்கவேண்டும் என்பதை எண்ணாகமம் 6:1-8 இல் வாசிக்கலாம். “அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்” என்பது கட்டளை. இதன்படி இவன் மதுபானம் குடியாமலும், தலைமயிர் வெட்டாமலும் இருக்கவேண்டும். ஆனால், சிம்சோனோ தானாக இந்த விரதத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை; மாறாக, “பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்” என்று கர்த்தரால் அறிவிக்கப்பட்டவன்.
ஆனால், திம்னாத்தில் ஒரு பெண்ணை விவாகம் பண்ணப் போனபோது, எதிர்ப்பட்ட ஒரு சிங்கத்தைக் கொன்று, விவாகம் பண்ணித் திரும்புகையில் அந்த செத்த உடலைப் பார்ப்பதற்கு “வழிவிலகிப் போனான்” என்று வாசிக்கிறோம். அதற்குள்ளிருந்த தேன்கூட்டைக் கலைத்து தேனையும் உண்டு, பிரமாணத்தை மீறிவிட்டான். அடுத்தது, இவன் அசாத்திய பெலன் கொண்டவன். ஆச்சரியமான விதங்களில் பல பெலிஸ்தரைக் கொன்றவன். இப்படிப்பட்ட வன், கர்த்தருக்கென்று பரிசுத்தமாய் வாழவேண்டியவன் தெலீலாள் என்ற ஒரு விலைமாதுவின் மடியில் விழுந்தான். அந்த மயக்கத்தில் தன்பலத்தின் இரகசியமாகிய தலைமயிரை இழந்து, பிடிபட்டு, கண்கள் பிடுங்கப்பட்டு வேடிக்கைப் பொருளானான். நசரேய பிரதிஷ்டைக்குள் இருந்த நாட்களெல்லாம் அதிசய பெலத்தால் நிறைந்திருந்தவன், எப்போது அதை மீறினானோ, அப்போது தேவனுடைய ஆவி அவனைவிட்டு நீங்கிப்போனது.
தேவகட்டளையா? தெலீலாளின் மடியா? இதில் சிமிசோனுடைய தவறானத் தெரிந்தெடுப்பினால் தன்னைவிட்டு கர்த்தர் விலகினதைக்கூட அது மறைத்துவிட்டது. “இந்த ஒரு விசை” என்று மீண்டும் அவன் ஜெபித்து விசுவாசத்தில் செயற்பட்டதால், எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் அவன் பெயர் இடம்பெற்றது. சிம்சோனுக்கு இறுதியாக கிடைத்த தருணம் நமக்கும் கிடைக்கும் என்றில்லை.
தேவபிள்ளையே, நாம் இன்று தேவ திட்டத்தையா? சுய வழிகளையா? எதைத் தெரிந்தெடுக்கப் போகிறோம்? எவ்வழியில் நாம் நடக்கப்போகிறோம்? மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் (நீதி-14:12).
ஜெபம்: அன்பின் தேவனே, உமது வழியில் நான் நடப்பதையும் உமது அழைப்பிலே உறுதியாக நிற்பதையும் நான் தெரிந்தெடுக்க என்னை இன்று உமக்கு அர்ப்பணிக்கிறேன். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 22 செவ்வாய்
அன்றியும் … ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். (ரோமர் 5:19)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 9,10 | மாலை: லூக்கா.17:20-37
ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 22 செவ்வாய்
திருமண வயதில் ஏற்றத் துணைக்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தருக்கு பயந்த ஆவிக்குரிய துணைகளை கர்த்தர் காண்பித்து அவர்களது குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும். அதிகமான விலைவாசி உயர்வினாலே பொருளாதாரத் தேவைகளோடு உள்ள குடும்பங்களில் அந்தக் குறைவுகளை கர்த்தர் நிறைவாக்கவும் வேண்டுதல் செய்வோம்.
மோசேயின் தெரிந்தெடுப்பு!
தியானம்: 2025 ஏப்ரல் 22 செவ்வாய் | வேதவாசிப்பு: எபிரெயர் 11:23-28

அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு… (எபிரெயர் 11:25).
தெரிந்தெடுப்பு என்பது, இலகுவான ஒன்றல்ல; அதற்கு விலைகொடுக்க வேண்டியதாக இருக்கும். சிலவற்றை இழந்துவிடுவதைத் துணிந்து தெரிந்துகொண்டால்தான் சில மேலானவைகளை அடையமுடியும். இதற்கு விசுவாசம் அவசியம். நாம் யார்மீது விசுவாசம் வைக்கிறோம், மனதின் நோக்கம் என்ன என்பவற்றிலேதான் எல்லாமே அடங்கியிருக்கிறது.
எபிரெய பிள்ளையாயிருந்தும் அரமனையில் ராஜகுமாரத்தியின் பிள்ளையாக வளர்ந்தவர் மோசே. ராஜ வாழ்வு, சகல சலுகைகளும் நிரம்பிய வளர்ப்பு; கல்வி முதற்கொண்டு போர் உட்பட சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். ஒருகாலத்தில் எகிப்தின் முக்கியஸ்தராக, ராஜ பதவி வகிக்கக்கூடிய வாய்ப்புப் பெற்றவர். இந்த உயர்நிலை சலுகையைத் துறந்துவிட யாருக்குத்தான் விருப்பம் வரும்? ஆனால், மோசே விரும்பினார். தான் யார் என்பதை அறிந்த மோசே, நிலையில்லாத இந்த ராஜ வாழ்வைவிட்டு, தனது ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டார்.
“எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” என்றும், “விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து” என்றும் வாசிக்கிறோம். அன்று மோசேக்கு கிறிஸ்துவைத் தெரியாது. ஆனால், மோசேயின் தெரிந்தெடுப்பு அவருக்குள்ளான விசுவாசத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இந்தத் தெரிந்தெடுப்பு அவரை, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனக்கூட்டத்தாரின் தலைவனாக, தேவனாகிய கர்த்தரின் பிரதிநிதியாக, தேவனுடைய கரமாக, கட்டளை கொடுக்கிறவராக அவரை உயர்த்தியது. இன்றும் இந்த மோசே பேசப்படுகிறார்.
இப்படியே பவுலும், “கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” (பிலி. 3:8) என்று அறிக்கை செய்திருக்கிறார். நமக்காக வைக்கப்பட்டிருக்கிற நித்திய மகிழ்ச்சியின் நிமித்தம் இந்த உலகில் நாம் எதையாவது விட்டுவிட தயாராய் இருக்கிறோமா? உலகம் தரும் சொகுசு வாழ்வா? கிறிஸ்துவினிமித்தம் துன்பம் அனுபவித்தலா? இதில் நாம் எதைத் தெரிந்தெடுப்போம்? நம்முடைய காலம் மிகவும் குறுகியது. ஒரு குறுகிய வட்டத்துக்குள் நாம் சுழலுகிறோம். ஆனால் கர்த்தரோ நீடிய பார்வையுடையவர், அவர் நித்தியர். ஆகவே, நமது குறும்பார்வையை விலக்கி, நாம் தேவனுடைய நீடித்த பார்வையில் இணைவோமானால், இந்த உலகம் தருகின்ற அநித்திய சந்தோஷங்களின் அவலநிலை நமக்குப் புரியும்.
ஜெபம்: அன்பின் தேவனே, இவ்வுலகின் அநித்தியமான பாவ சந்தோஷத்தை அனுபவிப்பதைப் பார்க்கிலும் உம்மை அறிகிற அறிவின் மேன்மைக்காகவும் தேவ இராஜ்ஜியத்தின் மேன்மைக்காகவும் பாடுபட என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.