ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 13 ஞாயிறு

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு … கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவா.12:13) இந்த விசேஷித்த நாளில் குருத்தோலை பவனி பாதுகாப்போடு நடைபெறவும் சிறுவர் பாலகர் வாயினால் துதி உண்டாகப்பண்ணி ஆர்ப்பரிப்போடே குருத்தோலை ஞாயிறை எல்லா திருச்சபைகளிலும் ஆசரிக்க வேண்டுதல் செய்வோம்.

வாசலைத் திறவுங்கள்!

தியானம்: 2025 ஏப்ரல் 13 ஞாயிறு | வேதவாசிப்பு: லூக்கா 19: 28-44; சங்.24.1-10

YouTube video

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிவேசிப்பார் (சங்கீதம் 24:7).

நகர வாசலுக்குள்ளே பிரவேசிக்கின்ற ராஜா வெற்றியோடு வருகிறாரா அல்லது தோற்றுப்போய் திரும்புகிறாரா என்பதை, மக்கள் அவருக்குக் கொடுக்கும் வரவேற்பிலிருந்தே ஊகித்துக்கொள்ளலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், எருசலேமின் நகரவாசலிலும் ஒரு ஆரவாரத்தொனி கேட்டது. அது “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஒலித்தது. இந்த ராஜா யார்? இவர் வெற்றிசிறந்த யுத்தம் எது?

இங்கே ஒரு வித்தியாசத்தை நாம் காணலாம். அன்று இந்த ராஜா, எதிரியை வெற்றிகண்டவராக நகரத்துக்குள் பிரவேசிக்கவில்லை; மாறாக, தான் தோற்கடிக்கவேண்டிய சத்துருவாகிய மரணத்தை எதிர்கொள்ளும்படி நகரத்துக்குள்ளே பிரவேசித்தார். ஜனங்கள் அதை உணராதிருந்தாலும் அவரை வெற்றிவேந்த னாகவே வாழ்த்தினார்கள். இது அவர்களால் திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. தம்மை அறியாமலே அவர்கள் அவரை வாழ்த்தினாலும், இந்த ராஜா அநாதியாய் என்றென்றும் வெற்றிசிறந்த ராஜாவேதான். இல்லையானால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே, “வாசல்களே திறவுங்கள்; அநாதியாய் நிற்கும் கதவுகளே உயர்ந்து இடங்கொடுங்கள்; மகிமையின் ராஜா, வருகிறார்” என்று தாவீது முழங்கியிருப்பாரா? தம்முடைய ஜனத்தை மீட்கவும், பாவத்தின் பலனாகிய மரணத்தின் அதிகாரியை முறியடிக்கவும், ஜீவியகாலமெல்லாம் மரணபயத்திற்கு அடிமைகளாகிவிட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கவும் இந்த ராஜா அன்று எருசலேமின் வாசலில் வந்து நின்றார். அவர் போருக்காக குதிரையிலும், இரதத்திலும் வரவில்லை; கழுதைக்குட்டியிலே ஏறிவந்தார். போர்வீரர்கள் அவர் பின்னால் செல்லவில்லை. சாதாரண பாமர மக்களே அவர் பின்சென்றனர். இந்த ராஜாவின் வெற்றி, அவருடைய பலத்திலல்ல; தம்மை மரணத்தில் ஊற்றிவிடுவதிலேயே தங்கியிருந்தது. அந்த எருசலேமின் வாசல்கள், “இப்பலத்தோடு வெற்றி கொள்ளமுடியாது” என்று அவருக்கு தம்மை திறந்துகொடுத்தன. ஆம், அது தோல்வியல்ல; ராஜாதி ராஜாவின் ஜெயமாக மாறியது.

பிரியமானவர்களே, இன்று இந்த ராஜா ஜெயங்கொண்டவராக உன் இருதய வாசலண்டையில் வந்து நிற்கிறாரே. இனிமேல் வெற்றிகொள்பவராக அல்ல, வெற்றி கொண்டவராகவே வந்து நிற்பார். நீயோ, நம்பிக்கையற்றவனாக, இவரால் முடியுமா என்ற சந்தேகத்தோடு உன் கதவை அடைத்துவிட்டிருப்பது ஏன்? அவரோ சாந்த ரூபியாய் உன் வாசலில் ஏங்கி நிற்கிறார். அன்று எருசலேம் தன் கதவுகளைத் திறந்தது, அவரது மகிமையைக் கண்டது. ஏன் நீ அந்த மகிமையைக் காணும்படி உன் கதவுகளை இன்று திறந்துவிடக்கூடாது? யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே (சங்.24:8).

ஜெபம்: இராஜாதி இராஜாவாகிய தேவனே, வாரும், என் இருதய வாசல்களை திறக்கிறேன். நீர் வெற்றி வேந்தனாக வாரும். உமது மகிமையை நான் காணட்டும். ஆமென்.