வாக்குத்தத்தம்: 2025 ஏப்ரல் 20 ஞாயிறு
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார். (மாற்கு 16:9)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 3-5 | மாலை: லூக்கா.16
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார். (மாற்கு 16:9)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 3-5 | மாலை: லூக்கா.16
பயப்படாதிருங்கள் … அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை (மாற்கு16:6) உயிர்த்தெழுந்த நாளின் ஆராதனையில் சகல ஜனங்களும் கர்த்தருடைய ஆலயத்தில் திரளாய் கூடி கெம்பீரசத்தத்தோடே கர்த்தரை மகிமைப்படுத்தவும், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நற்செய்தி உலக மக்கள் அனைவருக்கும் சென்றடையவும் தேவனிடம் மன்றாடுவோம்.
தியானம்: 2025 ஏப்ரல் 20 ஞாயிறு | வேதவாசிப்பு: 2 கொரிந்தியர் 4:13-18

கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி …. (2கொரிந்தியர் 4:14).

சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசகர்களுக்கும் சத்தியவசன பங்காளர்களுக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந் ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1பேதுரு 1:3,4). மரணத்தை வென்று பாதாளத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாசகர்களுக்கு சத்தியவசனத்தாரின் வாழ்த்துக்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் பங்கடையும்படி கர்த்தர் தாமே நம் அனைவரையும் தகுதிப்படுத்துவாராக.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு ஒரு ஜீவனுள்ள நம்பிக்கையைத் தந்திருக்கிறது. மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜன் வாயு எவ்வளவுக்கு அத்தியாவசியமோ, அதிலும்மேலாக மனிதர்கள் வாழ்வதற்கு நம்பிக்கையானது அவர்களுக்கு அவசியத்திலும் அவசியமாகும். இயேசுவை மறுதலித்து, ஒளிந்து ஓடிய பேதுரு, பின்னர் எழுதிய ஜீவனுள்ள நம்பிக்கை எது? நமது பாவங்கள் தவறு கள் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கை; நமது மீட்பின் நம்பிக்கை; குழப்பங்கள் துயரங்கள் மத்தியிலும் சந்தோஷமும் சமாதானமும் திடநம்பிக்கையும் பாதுகாப்பும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை; இயேசுகிறிஸ்துவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்திருக்கிறார் என்ற நம்பிக்கை; வேதவாக்கியம் சொன்னபடி “இயேசு திரும்பவும் வருவார்” என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை; புதிய வானம் புதிய பூமி ஒருநாள் வரும், தேவனுடைய ராஜ்யம் வெற்றிகரமாக ஆளுகை செய்யும் என்ற நம்பிக்கை. இவையாவும் இயேசுவின் உயிர்த்தெழுதல்மாத்திரமே நமக்குத் தந்திருக்கிறது.
ஆனபடியினாலே தேவபிள்ளையே, நாம் எந்தநிலையிலும் சோர்ந்துபோக வேண்டிய அவசியமே இல்லை. நமது புறம்பான மனுஷன் நாளுக்கு நாள் சரீர முதிர்வை நோக்கி நகர்ந்தாலும், பல காரணங்களால் இயலாத நிலை நேரிட்டாலும், நமது உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுவதால் நாம் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் நிச்சயமாகவே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏனெனில் நித்திய மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்வின் நம்பிக்கை, இன்று நாம் முகங்கொடுக்கின்ற யாவையும் மேற்கொள்ள நமக்கு பெலன் தருகிறது. இப்படியிருக்க, இன்னமும் பாவத்துடன் போராடிக்கொண்டும், உலகத்தின் அநித்திய சந்தோஷங்களில் அகப்பட்டுத் திண்டாடிக்கொண்டும் இருப்பது ஏன்? இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பையும், நமக்காக அவர் அடைந்த வெற்றியையும் சிந்தித்து, உயிர்த்தெழுந்த ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, முன்செல்வோமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, நீர் உயிரோடு எழுந்ததினால் கிருபையாகப் பெற்றுக்கொண்ட அழியாத அசையாத ஜீவனுள்ள நம்பிக்கைக்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.