வாக்குத்தத்தம்: 2025 மே 31 சனி

நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். (ஆதி. 15:1)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 11,12 | மாலை: யோவான் 9:21-41

ஜெபக்குறிப்பு: 2025 மே 31 சனி

கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார் (சங். 94:22) இவ்வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கன்மலையாகிய தேவன் நமது அடைக்கலமும் பெலனுமாய் இருந்து நாம் நடக்கிறவழியில் கால்கள் வழுவாதபடி காத்துக்கொண்ட கிருபைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் மறவாமல் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.

தேவனுடைய கோல்!

தியானம்: 2025 மே 31 சனி | வேதவாசிப்பு: சங்கீதம் 40:1-11

YouTube video

“… மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு … தேவனுடைய கோலையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு போனான் (யாத். 4:20).

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு கலைஞர் இருந்தார். அவர் வீதிகளில் செல்லும்பொழுதெல்லாம் அவரது கண்கள் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும், வாகனங்களின் உடைந்து நொறுங்கிய சமிக்ஞை விளக்குத்துண்டுகளையும் தேடும். வீணானவைகள் என்று கைவிடப்பட்ட இத்தகைய பொருட்களை அவர் சேகரித்து வீட்டிற்கு எடுத்துச்செல்வது வழக்கம். பின்னர், மிகச் சாதாரணமான அப்பொருட்களை தமது திறமையினால் மொசைக் வேலைப்பாடுடன் கூடிய வண்ணமிகு கலைப்பொருட்களாய் மாற்றிவிடுவார். அற்பமானவைகளாய் எண்ணப்பட்டவைகள் அவரது கைகள் பட்டதும் அசாதாரண உயிரோவியங்களாய் உருப்பெற்றுவிடும்.

நமது தேவனும் இவ்வண்ணமே செயலாற்றுபவர். அவரது அற்புத வல்லமையினால் மோசேயின் கையிலிருந்த அந்த சாதாரண கோல் எனப்பட்டது, தேவனுடைய கோல் என மாற்றியமைக்கப்பட்டது. அவனது கையிலிருந்த சாதாரண மரத்தடியைப் பயன்படுத்தி, எகிப்தியர்மீது வாதைகளை வரப்பண்ணவும், சமுத்திரத்தைப் பிளக்கவும், கன்மலையிலிருந்து தண்ணீரைப் புறப்படப்பண்ணவும் தேவனாலே மாத்திரமே கூடுமாதானயிருந்தது.

அன்பானவர்களே! இந்த உண்மை நமது வாழ்வுக்கும் பொருந்தும். நாம் கிறிஸ்துவுக்குள் வரும்பொழுது, ஆண்டவருக்குள் ஒரு புது சிருஷ்டியாக மாற்றம் அடைகிறோம். தேவன் நமது பழைய தன்மைகளில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்துவிட்டு, அத்துடன் நிறுத்திக்கொள்பவர் அல்ல. மாறாக, அவர் பழையவைகள் அனைத்தையும் ஒழித்து, சகலத்தையும் புதிதாக்குகிறார். ஆம், இயேசு கிறிஸ்துவுக்கு நாம் நமது வாழ்வை அர்ப்பணித்து, அவரை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்பொழுது, ஒரு அசாதாரண மாறுதல் நம்மில் தோன்றுகின்றது. மிகச் சாதாரணமானவர்களாய் நாம் எண்ணப்பட்டாலும், அவர் நம்மை விசேஷித்தவர்களாய் வனைய வல்லவர்.

அன்று கலிலேயா கடற்கரையில் வாழ்ந்த சாதாரண மீனவர்களை அழைத்து, முழு உலகுக்கும் வாசனை வீசும் மலர்களாகவும், பாவஇருளில் ஒளிவீசும் தீபங்களாகவும், சரித்திரத்தில் அழியாத ஜீவ சிற்பங்களாகவும், பலமுள்ள ஜீவசாட்சிகளாகவும், ஆதித்திருச்சபையின் ஆதார தூண்களாகவும் தேவனின் கரம் அவர்களை வடிவமைத்தது. எனவே சாதாரணமான நம்மையும் தேவனுடைய வல்லக் கரத்திலே கொடுப்போமா! அவர் நம்மையும் சிறப்பாக வடிவமைப்பார்.

தேவன் சாதாரணமானவைகளை அசாதாரணமானவைகளாக்கும் அதிசயங்களைச் செய்ய வல்லவர்!

ஜெபம்: எங்களை அதிசயமாய் நடத்திவருகிற கர்த்தாவே, உம்முடைய கரங்களில் எங்களைத் தருகிறோம். பழையன ஒழிந்து புதியதும் எஜமானனுக்கு பிரயோஜனமுமான பாத்திரமாய் எங்களை வனைந்தருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2025 மே 30 வெள்ளி

இரண்டாம் நூற்றாண்டில் நற்செய்தி ஆப்கானிஸ்தானில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இங்கு தேவாலயங்கள் இல்லை. இதுவரை மக்கள் வீடுகளில்தான் கர்த்தரை ஆராதிக்கின்றனர். சுவிசேஷத்திற்கு அங்கு நிலவிவரும் பலத்த எதிர்ப்புகள் மாறி மக்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்கவும் மேலும் சுவிசேஷத்திற்கான வாசல் திறக்கப்படவும் ஜெபிப்போம்.

அனுகூலமான துணை!

தியானம்: 2025 மே 30 வெள்ளி | வேதவாசிப்பு: சங்கீதம் 46:1-11

YouTube video

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார் (யாத்.4:12).

“எல்லோரும் நம்மைவிட்டு ஒதுங்கிச் செல்லும்போது நம்முடன் கூட நிற்பவனே உண்மை நண்பன்” என்று வால்டர் வின்செல் என்பவர் கூறினார். ஆனால், ஆத்ம நண்பர்களும்கூட நமக்கு உதவ முடியாத சில சந்தர்ப்பங்கள் உண்டு. அவர்கள் வெகுதொலைவில் இருந்து நமக்கு நேரடியாக உதவமுடியாமல் போகலாம். ஆனால், நாம் எங்கே இருந்தாலும், நமது சூழ்நிலைகள் எத்தகையதாய் இருந்தாலும் தேவனே நமக்கு உதவி செய்ய வல்லவர்!

அன்று பார்வோனை எதிர்த்து, எபிரெய மக்களை மீட்கும் பணியானது மோசேக்குக் கொடுக்கப்பட்டது. அவரது தலைமைத்துவம், அவரது ஜீவன், இஸ்ரவேல் மக்களின் எதிர்காலம் அனைத்துக்கும் அது ஒரு சவாலான நேரமாக அமைந்தது. அவனது நல்வாழ்வில் அக்கறைகொண்டு, அவனுக்காகப் பரிதபிக்கும் அநேகர் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனாலும், தேவன் மாத்திரமே “உன்னுடனேகூட இருந்து நீ பேசவேண்டியதை உனக்குக் கூறுவேன்” என்று சொல்லக் கூடியதாக இருந்தது.

தங்களுக்கு அருமையானவர்களையும், தங்கள் உடைமைகளையும் இழந்து போகும் நேரங்களில், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங்.46:1) என்று தேவபிள்ளைகளினால் மட்டுமே கூறமுடியும். கிட்லரின் வதை முகாமில் இருந்த கோரி டென் பூமின் தன்னுடன் இருந்த தனது சகோதரி பெட்சி துன்புறுத்தப்பட்டு இறந்தபோது தனது எண்ணங்களை அவள் இவ்வாறு நம்பிக்கையோடு கூறினாள்: நான் மரிப்பதற்குப் பயப்படவில்லை. மரண இருளின் பள்ளத்தாக்கு எனக்கு எந்த பயத்தையும் ஏற்படுத்தவில்லை. இயேசு என்னை இந்த சிறைச்சாலைகள் வழியாக சுமந்துசென்றார். அவர் இறுதிவரை என்னுடன் இருப்பார்.

அருமையான சகோதரனே, சகோதரியே! “இனி இதுதான் என்னுடைய முடிவு” என்று நீ கருதும்போது, தேவனே உன்னுடைய நம்பிக்கையின் “புதிய ஆரம்பம்” என்பதைக் கண்டுகொள்வாய். ஆகவே, தேவசித்தத்திற்குக் கீழ்படி. அவர் உனக்குப் பாதை காட்டுவார். “பயப்படாதே! நான் உன் தேவன். நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே! நான் உனக்குச் சகாயம் செய்வேன். நான் உன்னைப் பலப்படுத்தி உன்னை நிலைநிற்கச் செய்வேன். என்னுடைய சர்வ வல்லமையினாலும் கிருபையினாலும் நான் உன்னைத் தாங்குவேன்” என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இதுவொரு வாக்குத்தத்தம். அதைச் சுதந்தரிக்காமல் விட்டுவிடாதே.

தேவனைத் தவிர வேறு எதுவுமே எனக்கு இல்லை என்று நீ உணரும்போது அவரே உனக்குப் போதுமானவராக இருப்பதைக் காண்பாய்!

ஜெபம்: கிருபையுள்ள கர்த்தாவே, எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலையானாலும், நீர் எங்களுக்கு அருகில் சகாய கர்த்தராகவும் துணையுமாகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.