ஜெபக்குறிப்பு: 2025 மே 17 சனி

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து … அவர்களை இரட்சிக்கிறார் (சங்.145:19) கல்லூரிகளில் மேற்படிப்புக்காக முயற்சித்துவரும் பிள்ளைகள் விரும்புகிற விருப்பப் பாடங்கள் அவர்களுக்கு நல்ல கல்லூரியில் கிடைப்பதற்கும், பிள்ளைகள் அனைவரும் தேர்ந்தெடுத்து படிக்கும் பாடங்களில் சிறந்த தேர்ச்சியடைந்து அவர்களது எதிர்காலம் வளமுள்ளதாய் இருப்பதற்கும் ஜெபிப்போம்.

துயரத்தில் ஆறுதல்!

தியானம்: 2025 மே 17 சனி | வேதவாசிப்பு: சங்கீதம் 90:7-14

YouTube video

என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து … அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன் (யாத் 3:7).

தன் ஒரே மகனை இழந்துவிட்ட ஒரு தகப்பன், போதகரிடத்தில் வந்து “எனது மகன் இறந்தபொழுது தேவன் எங்கே இருந்தார்?” என்று மிகவும் வேதனையோடு கேட்டார். அக்கேள்விக்குப் பின்னால் இருந்த துயரத்தை அறிந்த போதகர், “தம்முடைய ஒரேகுமாரன் இயேசு கிறிஸ்து மரித்தபொழுது தேவன் எங்கே இருந்தாரோ அந்த இடத்தில்தான் உங்களுடைய மகன் இறந்தபோதும் அவர் இருந்தார்” என்று அமைதியாய் பதிலளித்தார். ஆம், நீங்களும் நானும் அனுபவிக்கும் சகல வேதனைகளையும் நம்முடைய ஆண்டவரும் அனுபவித்திருக்கிறார்.

கர்த்தர் மோசேயிடம், “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் இடுகிற கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற பாடுகளை நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறினார் (யாத்.3:7). இது வெறும் அறிவளவில்மட்டும் தெரிந்துவைத்திருக்கும் ஒன்றல்ல. மாறாக, தமது ஜனங்கள் படுகின்ற சரீர வேதனைகளை, மனவேதனைகளை கர்த்தர் உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டார். அவர்களின் கூக்குரல் அவர் செவிகளைத் துளைத்ததால் உண்டான வேதனைக் குரல்தான். இது வெறும் வேடிக்கை பார்க்கும் மனித கூற்றல்ல, மாறாக, ஒவ்வொரு அடிகளின் வேதனையையும் அனுபவித்து, அநியாயமான தீர்ப்பினால் சோர்ந்து, உதவியற்ற நிலையில் பயந்து நடுங்கிய ஒரு அடிமை தனது உடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கூற்றாகும். தேவனுடைய மனிதனான மோசே, “கர்த்தாவே, திரும்பி வாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்” என்று கதறுகிற சத்தம் தேவனுடைய செவிகளில் விழாது இருந்திருக்குமா?

அருமையான சகோதரனே! சகோதரியே! இன்று எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையில் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறாயா? இயேசுகிறிஸ்து உன் வேதனைகளை அறிவார். ஏனெனில் அவர் தன்னுடைய சொந்த சீஷனால் காட்டிக்கொடுக்கப்பட்டார். நீ நியாயமற்ற தீர்ப்பினால் மனம் வருந்துகிறாயா? இயேசு பாவமற்றவராய் இருந்தும் ஒரு கள்வனுக்குரிய தண்டனையை அனுபவித்தார். நீ உனது அன்பிற்குரியவர்களின் மரணத்தினால் சோகமாயிருக்கிறாயா? தனது நண்பன் லாசரு மரணத்தால் உள்ளம் கலங்கிய கிறிஸ்து கண்ணீர் விட்டார். தனிமை உணர்வு உன்னை வாட்டுகிறதா? அன்று கெத்செமனே தோட்டத்திலே சீஷர்கள் எல்லோரும் கைவிட்டு ஓட, அவர் தனிமையாய் பாவத்தின் தண்டனையை அனுபவித்தார்.

அருமையான தேவபிள்ளையே, உன் வேதனைகளை அவற்றை ஏற்கனவே அனுபவித்தவரிடம் கொண்டுசெல். அதன் கொடுமை அவருக்குத்தான் தெரியும். எனவே, அவர் அதை ஒதுக்கிவிடமாட்டார். நமது வேதனைகள் அனைத்தையும் அறிந்தவர் அவைகளை நீக்கவும் வல்லவர்.

உனது உடைந்த இருதயத்தின் அனைத்துப் பகுதிகளையும் கிறிஸ்துவிடம் கொடு; அவர் உன்னில் அதிசயங்களைச் செய்வார்!

ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் இருதயத்தின் வேதனைகளை நீக்கி காயங்களை கட்டுகிற உமது அன்பிற்காக, மனதுருக்கத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.