ஜெபக்குறிப்பு: 2025 மே 16 வெள்ளி
மலேசியாவில் உள்ள இனக்குழுக்களில் மலாய் 60%, சீனர்கள் 30% தமிழர்கள் 7%; இதில் 9% பேர் மாத்திரமே கிறிஸ்தவர்களாக உள்ளனர். அரசாங்கம் கிறிஸ்துவை பின்பற்றுவோரை கடுமையாக புறக்கணிக்கிறது. மேலும் சுவிசேஷத்திற்கு தடையுள்ளது. இந்நிலை மாறவும் கர்த்தர் வல்லமையாய் கிரியை செய்து சபைகளை உயிர்ப்பிக்க ஜெபிப்போம்.
பரிசுத்த பூமி!
தியானம்: 2025 மே 16 வெள்ளி | வேதவாசிப்பு: சங்கீதம் 96:1-13

அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்; (யாத். 3:5).
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு வரும் யாத்திரீகர்கள் தங்களது பாதணிகளை வாசலிலே கழற்றிவிடவேண்டும். ஏனெனில் காலணி தூசிகூட தாம் வழிபடும் இடத்தினை அசுத்தமாக்கி, மாசுப்படுத்தக்கூடாது என்பதில் அந்த மக்கள் கருத்தாய் உள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு பிறமத நண்பர், அவர் தனது வணக்க ஸ்தலத்துக்குப் போகும்போது தனது வேஷ்டியை தரையிலே தேயவிடாது, சற்று உயர்த்தியே அணிவார். “அது ஏன்?” என்று அவரிடம் கேட்டபோது, தான் வழிபடும் இடத்துக்குப் போகும்போது தனது ஆடை மாசுபடக்கூடாது; தூய்மையாக செல்லவேண்டும் என்பதற்காகவே அப்படி அணிவதாகக் கூறினார். இவர்களில் யாரை என்ன சொல்ல? அன்று தேவன் மோசேயை நோக்கி “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். வனாந்தரமான இடமாயிருந்தால் என்ன, அலங்காரமான தேவாலயமானால் என்ன, தேவன் இருக்கும் இடம் எப்போதுமே பரிசுத்தமான இடமாகும். எனவே தாம் பிரசன்னமாகி இருந்த அந்த இடம் பயபக்திக்குரிய இடம் என்பதை உணர்த்துவதற்காகவே அன்று பாதணிகளைக் கழற்றும்படி மோசேயிடம் தேவன் சொன்னார்.
“பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோ கத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்” என்கிறார் சங்கீதக்காரர் (சங்.96:9). இந்த பரிசுத்தம் என்பது பழைய ஏற்பாட்டிலே நிழலாட்டமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், இன்று உள்ளும் புறமும் நாம் கர்த்தருக்குப் பிரியமானபடியே அவர் பிரசன்னத்தில் இருக்கவேண்டியவர்கள். பாதணியைக் கழற்றுவது புறச்செயலாக இருந்தாலும், நமது உள்ளான மனுஷனுக்குள் இருக்கும் பரிசுத்த பயமே நமது வெளிவாழ்விலும் வெளிப்படுகிறது என்பதையும் நாம் மறக்கக் கூடாது. நாம் தேவனைத் தொழுதுகொள்ள வரும்போது அவரது பிரசன்னத்துக்குள் வருகிறோம். அப்படி வரும்போது நமது வெளித்தூய்மையைவிட உள்ளத் தூய்மை மிக முக்கியமானது!
மேற்கத்திய நாடுகளில் ஆலயத்துக்குள் வரும் மக்கள் குளிர்காலநிலை நிமித்தமாக தங்கள் பாதணிகளைக் கழற்றுவதில்லை. ஆனாலும் சிந்தனையில் சுத்தம் அவசியம். பத்திரிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை நமது சிந்தையை சீக்கிரத்தில் அசுத்தப்படுத்தி, நமது எண்ணத்திலும் இருதயத்திலும் பாவக்கறைகளை உண்டுபண்ணலாம். பரிசுத்தமும் மகத்துவமும் உள்ள தேவனுக்குமுன் இவ்வுலகத்தின் அசுத்தங்களுக்கு இடமில்லை. தேவனுடைய பிரசன்னத்துக்குள் செல்லுவது, நம்முடைய வாழ்வில் சேர்ந்துள்ள பாவஅழுக்குகளை அறிக்கையிட்டு சுத்தப்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்.
தேவாதி தேவனைத் தொழுதுகொள்ள நாம் அணிந்துசெல்ல மிகவும் ஏற்ற உடை பரிசுத்தமான உள்ளமாகும்.
ஜெபம்: “பரிசுத்தமானவரே, என் சிந்தையிலும் இருதயத்திலும் செயலிலும் கறைபடாத படி பரிசுத்தமாய் வாழ எனக்கு கிருபை தந்தருளும். ஆமென்.”