வாக்குத்தத்தம்: 2025 மே 1 வியாழன்

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலாத்தியர் 6:2).

… கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார். (உபாக. 28:12)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 29-31 | மாலை: லூக்கா.22:1-27

ஜெபக்குறிப்பு: 2025 மே 1 வியாழன்

கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர் (சங். 86:6,7).

மற்றுமொரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்க தேவன் நமக்கு அருளிய சிலாக்கியத்திற்காக துதிப்போம். நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும் கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார் (உபா.28:12) என்ற வாக்குப்படியே ஆண்டவர் தாமே நன்மைகளையும் பாதுகாப்பையும் தந்து வழிநடத்த ஜெபிப்போம்.

பயம் வேண்டாம்!

தியானம்: 2025 மே 1 வியாழன் | வேதவாசிப்பு: யாத்திராகமம் 1:7-17

YouTube video

மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள் (யாத். 1:17).

இம்மட்டும் நம்மை வழிநடத்தின தேவன்தாமே மே மாதத்திற்குள் பிரவேசிக்க நமக்கு கிருபை செய்தபடியால் அவருக்கே துதி கனமகிமை உண்டாவதாக! இப்புதிய மாதத்தில் தேவன் நமது சகல தேவைகளையும் சந்தித்து வழிநடத்துவதோடு நமது குறைவுகள் யாவற்றையும் நிறைவாக்கி வழிநடத்த வேண்டுதல் செய்கிறோம். …நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்… (உபா.28:12).

தேவனுக்கு மாத்திரம் பயந்து வாழ்ந்ததினால், ஸ்காட்லாந்து நாட்டு சீர்திருத்த வாதியான ஜாண் நாக்ஸ் என்பவர், “எவருக்கும் அஞ்சாத மனிதர்” என்று அழைக்கப்பட்டார். பரிசுத்த வேதாகமத்தில் சுமார் 116 இடங்களில் தேவனுக்குப் பயப்படுவதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. “கர்த்தருக்குப் பயப்படும் பயம்” என்பது முகஸ்துதியாகவோ, அல்லது, ஒரு தாழ்வு மனப்பான்மையுடனோ அல்லாமல், பக்தி விநயத்துடனும், பிரமிப்புடனும் கூடிய ஒரு மரியாதையாகும். ஒருவரை அனைத்துக்கும் மேலாக வைத்து எண்ணும் ஒரு உயர்ந்த எண்ணமே அது!

இக்காரியத்தையே இஸ்ரவேல் மக்களுக்கு பணிவிடை செய்த மருத்துவச்சிகளிடம் காண்கிறோம். அவர்கள் பிரசவம் பார்க்கும்போது பிறக்கின்ற எபிரெய ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிடும்படி எகிப்தின் அதிகாரம் படைத்த பார்வோன் மன்னனால் கட்டளைக் கொடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவச்சிகள் தேவனுக்கு அதிகமாய் பயந்ததினால் பார்வோனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. உலகத்தின் ஆட்சியாளனிடம் வெகுமதிகளைப் பெறுவதைவிட தேவனைப் பிரியப்படுத்துவதையே அவர்கள் தெரிந்தெடுத்தனர்.

பிரியமானவர்களே, தேவனுக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் ஒரு மனுஷனுக்கு அல்லது ஏதாவது ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் பயந்ததுண்டா? நீங்கள் வேலை செய்யும் இடத்தில் தேவனைப் பிரியப்படுத்த முடியாமல் ஏதேனும் ஒரு பயம் உங்களைத் தடுக்கிறதா? “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி.4:13). “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ.1:7) என்கிற தேவவார்த்தைகளை நினைவிற்கொள்ளுங்கள். உங்களைப் பயமுறுத்தும் சூழ்நிலைகளின்போது இவ்வசனங்களை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களை உருவாக்கி மீட்டுக்கொண்டவர், உங்களை பயத்திலிருந்து விடுவிக்கத் தேவையான பெலத்தைத் தருவார். அவர் ஒருவருக்கு மாத்திரம் பயந்து, அவர் ஒருவரைமாத்திரம் பிரியப்படுத்த ஆரம்பியுங்கள்.

உலகத்தின் துன்பங்கள் உங்களைப் பயமுறுத்தினாலும் தேவபயம் நேர்மையானதைச் செய்ய உங்களுக்குத் துணிவைக் கொடுக்கும்.

ஜெபம்: “அன்பின் தேவனே, இந்த புதிய மாதத்திலும் நீர் எங்களை ஆசீர்வதித்து குறைவு களையெல்லாம் நிறைவாக்கி வழிநடத்தும். மனுஷபயத்திலிருந்து நாங்கள் விடுதலை பெற்று உமக்குக் கீழ்ப்படிவதையே தெரிந்துகொள்ள கிருபை தாரும். ஆமென்.”

ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நமக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்றைக்கும் ஜீவிக்கின்ற அன்பின் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழை உங்களுக்கு அனுப்பி வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இத்தியானங்கள் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

இன்றைய நாட்களில் தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களும் தேவ பயமற்ற செயல்களும் கர்த்தருக்கு அவகீர்த்தியைக் கொண்டுவருகிற காரியங்களும் கிறிஸ்தவ சமுதாயத்தில் நடைபெற்று வருகிறதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனபடியால் நாம் விழிப்புள்ளவர்களாக இருந்து எச்சரிக்கையோடு தேவனிடத்தில் மன்றாடுவோம். பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் (2 பேதுரு 1:19).

சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்று வரும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம். தொடர்ந்து சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள். இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அநேகர் மனந்திரும்பவும் சத்தியத்தை அறிந்துகொள்ளவும் வேண்டுதல் செய்யுங்கள்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr. உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் தொடராக பிரசுரித்து வருகிறோம். அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். மே மாதத்தில் Dr. உட்ரோ குரோல் அவர்கள் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து எழுதிய தியானத்தின் மொழியாக்கத்தையும், ஜுன் மாதத்தில் சகோதரி ஜெபி பிடில் அவர்கள் பலவிதமான தலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். வாசித்து ஆசீர்வாதமடையுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

சமநிலை ஊழியம்!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நெகேமியா 6:1-15

அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந் தேதியிலே முடிந்தது (நெகே.6:15).

ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதன் முடிவு சிறப்பாக அமைய வேண்டும். ஒரு செயலை உருவாக்குவது வேறு; அதை வெற்றியாக முடிப்பது வேறு. நெகேமியாவும் அவரது உடன்வேலையாட்களும் தங்களது காரியத்தை வெற்றிகரமாக முடித்தார்கள். எருசலேமின் அலங்கமும் வாசல்களும் பலப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டது. எதிரிகள் யூதர்களைப் பார்த்து சிரித்தனர். அது இயலாத காரியம் என்று கேலி செய்தனர். ஆனால், அது செவ்வனே நிறைவேறி முடிந்தது. இத்திட்டத்தைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் சமநிலை; நாம் செய்கின்ற ஒவ்வொரு தேவஊழியத்துக்கும் இது தேவை.

முன்னேறுதலும் பின்பற்றுதலும்:

எருசலேம் நகரம் அவமானமான குழப்பத்தில் இருப்பதாகவும், புறஜாதியினரின் கேலிக்குரியதாகவும் இருக்கிறது என்பதை தனது சகோதரன் மூலமாகக் கேட்டவுடன் நெகேமியாவின் இதயம் உடைந்தது (நெகே.1). தேவனுடைய உதவிக்காக அவர் அழுது துக்கித்து ஜெபித்தார். அரசரின் அனுமதியுடன் வசதியான அரண்மனையைவிட்டு அவர் வெளியேறி, எருசலேமுக்குச் சென்று அதன் நிலையை ஆய்வுசெய்தார். தனது பாரத்தை அங்கிருந்த தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டார். 3ஆம் அதிகாரத்தில் தலைவர்கள் என்ற வார்த்தை 8 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகரம் செவ்வனே ஒழுங்கமைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் நெகேமியா தனது பணிக்குழுக்களை மேலும் சீரமைத்தார். பெரிய ஒரு தரிசனத்தை கவனமான மேற்பார்வையுடன் செயல்படுத்தினால் மற்றவர்களது ஏளனத்தை தவிர்க்கமுடியும். அதிகாரம் 3இல் அனைவரும் வேலைசெய்ய முன்வரவில்லை என்பதையும் வாசிக்கிறோம் (வச.5), மேலும் இப்பணிக்குழுவில் ஆசாரியர்கள் (வச.1) திறமையான கைவினைஞர்கள் (வச.8, 32), மகளிர் மற்றும் எருசலேமுக்கு வெளியே வசித்தவர்களும் இருந்தனர் (வச. 2, 5,7). சிலர் மற்றவர்களைவிட அதிக வேலை செய்தனர் (வச.11,19, 21,24, 27,30).

உருவாக்குதலும் போரிடுதலும் (நெகே.4:18):

கிறிஸ்தவ வாழ்வில் உருவாக்குவதும் எதிர்ப்பைச் சந்திப்பதும் இணைந்தே செல்கின்றன (லூக்கா 14:25:33); நாம் ஆயுதம் ஏந்தவில்லையெனில் கட்டப் பட்டதைப் பாதுகாப்பது இயலாத காரியம். நமது பாதுகாப்பு ஆயுதங்கள் எபேசி யர் 6:10-20இல் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் விசுவாசத்தோடு நாம் அதை அணிந்துகொள்ள வேண்டும். ஆவிக்குரிய வாழ்வில் நமது பேராயுதங்கள் தேவனுடைய வார்த்தையும் ஜெபமுமே ஆகும். நமது செய்கைகளின் பலனை இழந்துபோகாதபடி பாதுகாப்பதில் எச்சரிக்கையாயிருக்கவேண்டும் (2 யோவான் 8). இல்லையெனில் நாம் போராடுவதில் ஈடுபட்டு, உருவாக்குவதை மறந்துவிடுவோம்! தேவனுடைய போராளிகளும் ஊழியக்காரர்களும் சமநிலையைப் பின்பற்றவேண்டும்.

விழித்திருப்பதும் ஜெபிப்பதும் (நெகே.4:9):

ஊழியம் செய்தல், விழித்திருத்தல் (எச்சரிப்புடன் இருத்தல்), ஜெபித்தல் மற்றும் போராடுதல் ஆகியவை எவருக்கும் சவாலாக அமையவேண்டும். “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற கட்டளை மாற்கு 11:11 மற்றும் 14:38இல் தரப்பட்டுள்ளது. எபேசியர் 6:18 மற்றும் கொலொசேயர் 4: 2-4 ஆகிய பகுதிகளையும் தியானிப்பது நல்லது. நாம் விழித்திருந்து ஊக்கமாக உழைக்கும்பொழுது நம்மை திசைதிருப்பிவிட அநேக கரியங்கள் உண்டு. எனவே அது அதிக கடினமாக உள்ளது. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் மறு ரூபமலையில் உறங்கிவிட்டனர் (லூக்கா 9:32); கெத்செமனே தோட்டத்திலும் அவர்கள் நித்திரையாயிருந்தனர் (லூக்கா22:45). உறங்கும் விசுவாசிகள் பாதிக்கப்படுவார்கள் அவர்கள் வெற்றியாளர்கள் அல்லர்!

விசுவாசித்தலும் சேவித்தலும் (யாக்கோபு 2:14-26).

நமது ஊழியங்களுக்காக நாம் ஜெபிப்பது மட்டும் போதாது. நாம் உழைக்கவும் வேண்டும். ஆவியில்லாத சரீரம் செத்தது. அதுபோல கிரியை இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கும் (யாக்.2:26). நாம் தேவனுடைய திறமைமிக்க ஊழியர்களாக இருப்பதற்கான சமநிலை ஊழியமுறையை நெகேமியாவும் அவருடைய வேலையாட்களும் அழகாக விளக்குகின்றனர். நம்முடைய விசுவாசம் உண்மையானதாக இருந்தால், அது தேவனுடைய ஊழியத்தை செய்வதற்கான தூண்டுதலைத் தரும். நகரத்தின் அலங்கம் திரும்பக் கட்டப்படவேண்டும் என்றும், அதின் கதவுகள் சீர் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படவேண்டும் என்பதற்கான காரியத்தைத் தானே முன்னெடுத்துச் செயல்படுத்தவேண்டும் என்பதை நெகேமியா நன்கு அறிந்திருந்தார். தேவனுடைய அழைப்பு என்றால் அவர் அதனை செயல்படுத்துவார். நாம் அவரை நம்பி கீழ்ப்படியவேண்டும் என்பதே நமது பொறுப்பு ஆகும்.

மகிமையில் பிரவேசித்துள்ள எனது நண்பர் “சமநிலையுள்ள மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று அடிக்கடி சொல்லுவார். அந்த ஆசீர்வாதத்தை நானும் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவு கூருகிறோம் (1 தெச.1:2).

மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை

4. வேதாகமம் நித்தியமானது. பரிபூரணமானது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மே – ஜுன் 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தின் கடைசிப்பகுதி 19 நூற் றாண்டுகளுக்கு முன் எழுதி முடிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை நாம் அநேகக் காரியங்களைப் படித்து அறிந்துள்ளோம்.

1950 முதல் சோவியட் யூனியனும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் நடைபெற்றுவரும் விண்வெளி ஆராய்ச்சிகள், மனிதன் சந்திரனில் காலடி வைத்து, நடந்து சந்திரனில் உள்ள மண்கட்டிகளை எடுத்து வந்தது, எத்தனையோ செயற்கைக் கோள்களை அனுப்பியது, விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளது, சுனிதா வில்லியம்ஸ் என்னும் விண்வெளி வீராங்கனை ஆறுமாத காலம் விண்வெளியில் பறந்து ஆராய்ச்சிகள் செய்து, சாதனைகள் படைத்து வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியது இவற்றையெல்லாம் அறிந்துகொண்டிருக்கிறோம்.

பரவக்கூடிய கொடிய நோய்களைப் பற்றி எவ்வளவு காரியங்கள் அறிந்திருக்கிறோம்? (HIV, AIDS, புற்றுநோய்).

விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் கம்யூட்டர் வகைகள், செல்போன்கள் இவை புரியும் விந்தைகளை என்னவென்பது? சமீபகாலத்தில் இவ்வளவு கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் நிகழ்ந்திருக்கும்போது, நாம் எப்படி வேதாகமத்தைப் பூரணமானது என்று கூற முடியுமென்று தோன்றுகிறதல்லவா!

வேதாகமம் பூரணமானது என்று நான் கூறுவதன் உட்பொருள், ஆவிக்குரிய நிலையில் நாம் அறியவேண்டிய அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது என்பதே. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை யோவான் எழுதி முடித்தபின் ஆவிக்குரிய எந்தப் புதிய சத்தியமும் இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை!

தேவனைப்பற்றியும், அவரது நோக்கங்கள், திட்டங்கள் அனைத்தையும் வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இவ்வளவும் போதுமானது. இவையனைத்தையும் நீங்கள் வேதாகமத்தில் பெற்றிருக்கிறீர்கள்.

இன்று உலகில் ஏன் இவ்வளவு மரணங்கள், அழிவுகள், பிரச்சனைகள், வேதனைகள், துன்பங்கள் இருக்கின்றன? என்று அறியவேண்டுமானால் உங்களுக்குத் தேவை இந்த வேதாகமமே! அது மனிதனுடைய பாவம், அந்தப்பாவத்தால் ஏற்படும் விளைவுகள் இவற்றை நமக்கு வேதாகமம் விவரித்துக்காட்டும்.

தேவனுடைய அன்பு, இரக்கம், கிருபை இவற்றைக்குறித்து அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களைப் போக்க, உங்களுக்குப் பதிலாக மரணதண்ட னையைத் தம்மீது ஏற்றுச் சிலுவையில் மரிக்க அவர் செய்த தியாகத்தைப்பற்றி அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

கல்வாரிச்சிலுவையில் இயேசு மூன்றாணிகளில் தொங்கி, இரத்தம் சிந்தி உங்களுக்காக உயிர்விட்டது, அடக்கம் பண்ணப்பட்டது, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தது, இவற்றைப்பற்றி அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

இயேசு உயிர்த்தெழுந்த பின்னரும் உலகில் வாழ்ந்து மக்களுக்குக் காட்சியளித்து, தமது சீஷர்களுக்குக் கடைசிக் கட்டளை கொடுத்துப் பரமேறிச் சென்றதை அறிய வேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

பரிசுத்தவான்களாய் மரிப்பீர்களானால் நீங்களும் உயிர்த்தெழுவீர்கள். கிறிஸ்துவின் வருகையின்போது பரிசுத்தவான்களாய் வாழ்வீர்களானால் உங்கள் சரீரம் மறுரூபமாக்கப்பட்டு நீங்களும் நடுவானத்தில் இயேசுவோடு இருக்கும்படி எடுத்துக்கொள்ளப்படுவீர்கள் என்ற சத்தியத்தை அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

கிறிஸ்துவின் வருகையின்போது நீங்களும் சந்தோஷமாக கிறிஸ்துவுடன் எழுப்பப்பட வேண்டுமானால் நீங்கள் எப்படி வாழவேண்டும்? என்று அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.

ஒரு வேதாகம அகராதி உங்களுக்குச் சொற்களின் விளக்கத்தைத் தரும். நீங்கள் ஒரு நாவல் என்னும் தொடர் கதையை வாசிப்பீர்களானால் அது உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கும். ஆனால், கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை வாசித்தால்தான் உங்கள் வாழ்க்கை மாறுதல் அடையும். ஆவிக்குரிய வாழ்க்கையையும், நித்தியஜீவனையும் நீங்கள் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்தும் இந்த வேதாகமத்தில் உண்டு.

இந்த மாம்ச உலகில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வது என்பது சுலபமான காரியமல்ல. பரலோகத்தில் நித்திய வாழ்வு எப்படி இருக்கும் என்பதை உல கில் வாழ்ந்து காட்டவேண்டும்.

இந்த உலகில் நீங்கள் பாவத்துக்கு மரித்தவர்கள் என்றும், உங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்றும் இந்த உலகத் தின் ஒரே இரட்சகர் இயேசுகிறிஸ்துவே என்றும் நீங்கள் அறியவேண்டும். தேவன் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் அறியவேண்டும். தேவன் உங்க ளுக்காக மரிக்கத் தமது குமாரனை அனுப்பித்தந்தார் என்பதையும் நீங்கள் அறியவேண்டும். இதை வேதாகமம் தான் உங்களுக்கு அறிவிக்கிறது. நீங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என் றும், உலகஇரட்சகர் என்றும், உங்கள் இரட்சகர் என்றும் அறியவேண்டும். விசு வாசிக்கவேண்டும். அப்படி இயேசுவை விசுவாசித்தால் நீங்கள் இரட்சிக்கப்படு வீர்கள் என்று அறியவேண்டும். இதை யும் உங்கள் வேதாகமம்தான் உங்களுக் குச் சொல்லித்தருகிறது.

வேதாகமம் ஒரு தனிச்சிறப்புப் பெற்ற ஒரு புத்தகமா? இது எல்லாப் புத்தகங் களையும் விடவும் சிறந்ததா? இது மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட வித்தியா சமானதா? ஆம்! அப்படியேதான்!

வேதாகமம் தேவனுடைய புத்தகம்

பரிசுத்த வேதாகமம் தேவனுடைய உள்ளத்தை மனிதனுக்கு வெளிப்படுத் தும் புத்தகமாகும்.

பரிசுத்தவேதாகமம் மட்டுமே தேவனு டைய ஆவியினால் அருளப்பட்டது. அது நேரடியாக தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்டது.

வேதாகமம்மட்டுமே தவறு இல்லாத புத்தகமாகும். முற்றிலும் தவறோ, பிழையோ இல்லாதது. வேதாகமத்தில் எந்தவொரு தவறும், பிழையும் இருக்க முடியாது. இதில் எந்தத் தவறும் இடம்பெற முடியாது.

வேதாகமம் மட்டுமே நித்தியமான புத்தகம்! ஏனெனில் வேதாகமத்தை எழுதின தேவன் மட்டுமே நித்தியமானவர்.

வேதாகமம் மட்டுமே பூரணமான புத்தகம்! பரலோகத்துக்குச் செல்லும் வழி என்னவென்பதை நமக்குக் காட்டுவது இந்த வேதாகமம் மட்டுமே!

எனவே வேதாகமத்தை வாசித்துப் பயன்பெறுங்கள். நீங்கள் வேதாகமத்தைப் போல வேறொரு புத்தகத்தைக் காணவே முடியாது.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்