வாக்குத்தத்தம்: 2025 மே 3 சனி

அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு. (பிர. 4:14)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 3,4 | மாலை: லூக்கா.22:54-71

ஜெபக்குறிப்பு: 2025 மே 3 சனி

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2கொரி.9:15) கடந்த நாட் களில் நம்முடைய வேண்டுதலின் சத்தத்திற்கு அநேகருக்கு மனமிரங்கி கர்த்தர் கொடுத்த நல்ல வேலைக்காக, சுகத்திற்காக, விடுதலைக்காக, நடப்பித்த சகல அற்புதங்களுக்காக முழுஇருதயத்தோடு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி ஜெபிப்போம்.

விதைப்பும் அறுப்பும்!

தியானம்: 2025 மே 3 சனி | வேதவாசிப்பு: யாத்திராகமம்; 1:15-21

YouTube video

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார் (யாத்.1:21).

ஒரு விவசாயி தன் வயலை நன்கு பண்படுத்தி அதற்குத் தேவையான பசளை போட்டு, விதை விதைக்கிறான். ஏற்ற காலத்தில் பருவமழை பெய்யுமானால், அவன் மிகுந்த அறுவடைகளைப் பெறுவான். ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இது உண்மையாகும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.

எபிரெய மருத்துவச்சிகள் தேவன் மீதிருந்த பயபக்தியினாலே, ராஜ கட்டளையை மீறத் துணிந்து, எபிரெய கர்ப்பிணிப் பெண்களுக்கு இரக்கத்தையும் தயவையும் காட்டினார்கள். அதன் பலனைக் கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்தார்; ஆம், அவர்களுக்கு கர்த்தர் நன்மை செய்தார். எப்படியெனில் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கும்படி செய்தார். அன்று இஸ்ரவேல் மக்களிடையே, ஆண் பிள்ளைகளே குடும்பத்தின் வாரிசுகளாகக் கருதப்பட்டனர். அந்த மருத்துவச்சிகளின் நற்செயல்களின் பலனாக தேவன் அவர்களுடைய சந்ததிகளையும் பெருகப்பண்ணினார்.

இக்காலத்திலும் இந்த விஷயங்கள் மாறவில்லை. பூமியில் நாம் எவைகளை விதைக்கிறோமோ அவைகளையே அறுக்கிறோம். அப்படியேதான் நமது வாழ்விலும் நாம் எதை விதைக்கிறோமோ அதையேதான் அறுப்போம். நமது சரீரங்களை, குடியினாலும் போதை வஸ்துக்களினாலும் தீட்டுப்படுத்தும்போது முடிவில், அது நம்மையே அழித்துவிடுகிறது. ஆனால், நன்மையான காரியங்களைச் செய்யும்போது நாமும் நன்மையான பலனைப் பெற்றுக்கொள்வோம். மாத்திரமல்ல, கடைசி நாளில் நாம் சந்திக்கவேண்டிய, நமது கிரியைகளுக்கான மற்றுமொரு பலாபலனும் உண்டு. அது கிறிஸ்தவர்களுக்கு “கிறிஸ்துவின் நியாயாசனம்” (2 கொரி.5:10) என்றும், மற்றவர்களுக்கோ “வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு” (வெளி.20:11-15) என்றும் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

இவ்விரண்டு நியாயத்தீர்ப்புகளிலும் நாம் செய்த கிரியைகளின் நிமித்தம் நியாயந்தீர்க்கப்படுவோம். நம்முடைய கிரியைகளின்நிமித்தம் நாம் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதில்லை; இரட்சிப்பு தேவனுடைய கிருபையின் ஈவு மாத்திரமே. மறுபுறத்தில், நமது கிரியை தேவனிடமிருந்து வெகுமதிகளை அல்லது தண்டனையைப் பெற்றுத் தருவதாய் அமையும். நாம் செய்யும் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்; அதற்கான பலனும் நமக்கு உண்டு.

எனவே, மற்றவர்களுக்கு நன்மை செய்வோம். தேவன் மேலுள்ள அன்பின் நிமித்தமும், இரக்கம் காட்டுவோம். நன்மை செய்தால் தேவன் அதை மறக்கமாட்டார். ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் (எபே-2:10).

உங்களுக்கு நல்லதொரு அறுவடை வேண்டுமென்றால் நல்ல விதைகளை விதைக்கவேண்டும்.

ஜெபம்: நல்ல கர்த்தாவே, நற்கிரியைகளிலே நாங்கள் வளருகிறவர்களாக இருப்பதற்கு தூயஆவியானவர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டிநிற்கிறோம். ஆமென்.