ஜெபக்குறிப்பு: 2025 மே 5 திங்கள்
ஜெயம் கொடுக்கிற தேவன் தாமே 10,11,12 படித்து தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு வெற்றியையும் சிறந்த மதிப்பெண்களையும் தந்து ஆசீர்வதிக்கவும், குறைந்த மதிப்பெண்களும் தோல்வியும் கண்ட பிள்ளைகள் மனமடிவாகாமல் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுள்ளவர்களாவதற்கும் கர்த்தர் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.
மனதுருக்கம்!
தியானம்: 2025 மே 5 திங்கள் | வேதவாசிப்பு: மத்தேயு 15:29-39

அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள் (யாத். 2:6).
ஆழமான குழியில் ஒரு மனிதன் விழுந்துவிட்டான், அவ்வழியே சென்ற ஒருவன் அவனைப்பார்த்து, “ஐயோ, பாவம் உனக்காக நான் வேதனைப்படுகிறேன்” என்றான். மற்றொருவன், “நீ கவனமாக பார்த்து நடந்திருக்க வேண்டாமோ?” என்று கூறிவிட்டுச் சென்றான். அவ்வழியே சென்ற ஒரு கணித மேதை வெகு நேரம் அவ்விடத்தில் நின்று, அம்மனிதன் அக்குழியில் எப்படி விழுந்திருப்பான் என்று கணக்கிட்டான். ஒரு செய்தித்தாள் நிருபர் அங்கு வந்து, அக்குழியின் தகவல்களைச் சேகரித்தார். ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளன் வந்து, அம்மனிதனைக் குழியினின்று எடுக்க எவ்வளவு விசை சக்தி தேவை என்பதைக் கணக்கிட்டார். புவியியலாளன் வந்து அக்குழியின் உள்ளேயிருக்கும் மண்ணின் தன்மையினைக் கூறுமாறு அந்த மனிதனைக் கேட்டுக்கொண்டான். சுயபரிதாபம் நிறைந்த ஒரு மனிதனோ, “நான் இதைவிட மோசமான குழியில் விழுந்திருக்கிறேன். உனக்குத் தெரியுமா?” என்று கூறினான். இறுதியாக அவ்வழியே வந்த ஒரு சாதாரண மனிதன் குழியில் விழுந்த மனிதன்மீது இரக்கங்கொண்டு அவனைக் குழியிலிருந்து தூக்கி, அவனுக்கு ஏற்ற உதவிகளைச் செய்தான்.
குழந்தையைக் கிடத்திய நாணற்பெட்டி நதியோரமாக விடப்படவும், பார்வோனின் குமாரத்தி குளிக்க வரவும் சரியாக இருந்தது. அவள் நாணலுக்குள் இருந்த பெட்டியைக் கண்டு, அதை எடுப்பித்து, திறந்தபோது ஒரு ஆண் குழந்தை! அந்தப் பிள்ளையும் அழுதது. எபிரெய ஆண்குழந்தைகளைக் கொன்றுபோடும் படி ராஜாவின் கட்டளை பிறப்பிக்கப்பட்ட சமயம் அது. அப்படியிருந்தும் அழுத குழந்தைமீது ராஜகுமாரத்தி இரக்கங்கொண்டு அதைத் தனதாக்கிக்கொண்டாள். இரக்க உணர்வு எப்பொழுதுமே நம் செயலில் வெளிப்படவேண்டும். அவளது இரக்க சுபாவம் பிள்ளைமீது அன்பைச் சொரிந்தது. அவனே இஸ்ரவேலின் மீட்பனானான். இயேசுகிறிஸ்துவும் தமது இரக்க சிந்தையை எப்போதும் செயலில் வெளிப்படுத்தினார். “இயேசுகிறிஸ்து மனதுருகினார்” என்று நற்செய்தி நூல்களில் எட்டுமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. பிணியாளிகளை சுகமாக்கி, பசியுள்ளவர்களைப் போஷித்து, நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்த அவர் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போதும், அவரை நோக்கிக் கூப்பிட்ட ஒவ்வொருவர்மீதும் இரக்கம் பாராட்டி அவர்கள் தேவையைச் சந்தித்தார்.
பிரியமானவர்களே, இன்று நம்மைச் சுற்றிலும் வாழுகின்ற தேவையுள்ளவர்களை வெறுமனே பார்ப்பதுடன் நின்றுவிடாமல், அவர்களுக்காக ஏதேனும் செய்யலாமே. மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு உணவு எடுத்துச் செல்லலாம்; வெளியே சென்று நடமாட முடியாதபடி வீட்டுக்குள் இருக்கும் வயதானவர்களிடம் போய், அவர்களைச் சந்திக்கலாம்; ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காக குரல் கொடுக்கலாம். நமக்குள் இரக்க உணர்வு இருந்தால் மட்டும் போதாது; அது நமது செயலிலும் வெளிப்படவேண்டும்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, பிறர்மீது எங்களுக்குள்ளிருக்கும் இரக்கஉணர்வை எங்கள் செயல்களில் காண்பிக்க உமதருள் தாரும். ஆமென்.