ஜெபக்குறிப்பு: 2025 மே 8 வியாழன்

கடந்த நாட்களில் மியான்மர் நாட்டில் பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள், உலகின் பல நாடுகளிலும் பெருவெள்ளம், அக்கினி இதுபோன்ற இயற்கை சீற்றங்களாலும் அழிவுக்குள்ளான இடங்கள், அகதிகளாக்கப்பட்ட மக்கள் இவர்களுக்காகவும் அந்த நாட்டினரின் இயல்பு நிலை திரும்பவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்!

தியானம்: 2025 மே 8 வியாழன் | வேதவாசிப்பு: சங்கீதம் 51:10-19

YouTube video

நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்று போட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான் (யாத். 2:14).

குளிர் பிரதேசத்தில் ஓநாய்களைப் பிடிப்பதற்கு, கூரிய ஈட்டியில் இறைச்சித் துண்டுகளைக் குத்தி வைப்பார்களாம். அதை உண்ண வரும் ஓநாய்கள் ஈட்டியில் குத்தப்பட்டுள்ள இறைச்சியை சுவைத்துச் சாப்பிட ஆரம்பிக்கும். இறுதியில் குளிரில் மரத்துப்போன தன் நாவு குத்தப்படுவதைக்கூட அறியாமல் தன்னுடைய இரத்தத்தைத் தானே குடித்து பரிதாபமாய் இறந்துபோகுமாம். தன் பாவத்தை அறியாமல் அல்லது பாவத்தை மறைத்து வாழ முற்படுவதும் இது போன்றதுதான். பாவம் உடனடியாகவோ, படிப்படியாகவோ நிச்சயம் நம்மை அழிவுக்கு நேரே இட்டுச்செல்லக் கூடியது.

அன்று மோசேயும் தனது பாவத்தை மறைக்க முயன்றான். எபிரெயன் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு அந்த எகிப்தியனைக் கொன்று போட்டான் மோசே. பின்னர் அவனது உடலை மணலில் புதைத்துவிட்டான். மறுநாளில் எபிரெய மனுஷர் இருவர் சண்டைபண்ணுவதைக் கண்டு, அநியாயம் செய்கிறவனைப் பார்த்து, உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கூறி சமாதானம் பண்ணப் பார்த்தான். அப்போது மோசே செய்த பாவம் வெடித்தது, “நீ எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான் அவன். 24 மணி நேரத்துக்குள்ளாக காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று மோசே பயந்தான். நாம் பாவத்தை எவ்வளவு ஜாக்கிரதையாக மறைக்க முயன்றாலும் அதை ஒருபோதும் முற்றிலும் மறைத்துவைக்க முடியாது. அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும். பாவத்தை மறைத்து, நமக்குநாமே தீங்கு வரவழைக்காமல், அதை அறிக்கையிட்டு விட்டுவிடுவோமானால் அது நிச்சயம் விடுதலையைத் தரும், அதையே தேவனும் எதிர்பார்க்கிறார். வேதாகமத்திலே சிலரது பாவங்கள் வெளியரங்கமாக்கப்பட்டு கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அங்கு உடனடியாக வெளிப்பட்டதைக் காணலாம். ஆனால், வேறு சில சந்தர்ப்பங்களில் சிலரது பாவங்கள் மறைக்கப்பட்டு, கடவுளின் நியாயத்தீர்ப்பு உடனடியாக வெளிப் படாத சம்பவங்களும் உண்டு. ஆனால், எது எப்படியாயினும் பாவத்துக்கான கடவுளுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படாமல் போகாது.

தேவபிள்ளையே, உன் பாவத்துக்கான நியாயத்தீர்ப்பு இன்னமும் வெளிப்படாததால் தொடர்ந்து பாவம் செய்யத் துணிகரம் கொண்டுள்ளாயா? சாக்குப் போக்குகள் கூறி உன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாயா? உனது இதயத்தை வருத்தும் மறைவான பாவங்கள் எவை? இன்றே அதை தேவனிடம் அறிக்கையிடு. அவரது மன்னிப்புக்காகக் கெஞ்சு. பாவத்திலிருந்து விடுதலையடைய உனக்கு உதவி செய்யக்கூடிய நல்ல நண்பர்களிடமோ அல்லது உன் சபைப் போதகரிடமோ அதைக்கூறி ஆலோசனை கேட்பதும் உனக்கு நன்மை பயக்கும்.

நாம் ஒத்துக்கொள்ள மறுக்கும் பாவத்தைத்தவிர வேறு எந்தப் பாவத்தையும் தேவனால் மன்னிக்க முடியும்!

ஜெபம்: நீதியின் தேவனே, உம் பார்வைக்கு மறைவானது எதுவுமில்லை. என் இதயத்தில் காணப்படும் துணிகரங்கள், அக்கிரமசிந்தை யாவற்றையும் எனக்கு மன்னியும். ஆமென்.