அதிகாரம் – 4
1378இல் ஜான் விக்ளிஃப் பரிசுத்த வேதாகமத்தின் உண்மைத்தன்மை என்னும் தலைப்பில் ஒரு செய்தியை அச்சிட்டு வெளியிட்டார். இதில் வேதாகமத்தில் எந்தப் பிழையும் இல்லை; வேதாகமம் முழுவதிலும் தேவனுடைய வெளிப்பாடு இருக்கிறது என்று வலியுறுத்தினார்.
விக்ளிஃப் தைரியமாக அந்நிய ஆக்கிரமிப்புகள் மத்தியில் ஆங்கிலேயர்களின் உரிமைகள் பற்றியும், இங்கிலாந்து திருச்சபையில் நுழைந்து கொண்டிருக்கும் தீமைகள், தவறுகள், கெட்ட பழக்கவழக்கங்கள் இவற்றையும் சுட்டிக்காட்டி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
1379இல் விக்ளிஃப் போப்பின் அதிகாரத்தை எதிர்த்தார். சபையின் தலைவர் இயேசுகிறிஸ்துவே. போப் அல்ல என்று அச்சிட்டு வெளியிட்டார். விசுவாசிக்கு முழுஅதிகாரமும் அளிப்பது சபை அல்ல, வேதாகமமே என்று உறுதியாகக் கூறினார். சபையானது புதிய ஏற்பாட்டுத் திருச்சபையின் மாதிரியில் இயங்கவேண்டும் என்று முழக்கமிட்டார்.
விக்ளிஃப், இவரது ஆதரவாளர்கள் இவர்களின் முயற்சியால் சபைமக்கள் அனைவரும் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்படியாக, வேதாகமத்தை மக்களுக்கு அவரவர் மொழியில் கிடைக்க வகைசெய்தனர். 1382 இல் புதிய ஏற்பாடு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு முடிந்தது.
இங்கிலாந்தில் கல்வியறிவில்லாதவர்கள், சாதாரண குடிமக்கள், போர்வீரர்கள், ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுக்குப் படிக்கும்படி வேத புத்தகங்களைக் கொடுப்பது ஒரு மனக் கடினமான வேலையாக இருந்தது. வேதாகமத்தைப் படித்ததும், உள்ளங்கள் புத்துணர்ச்சியடைந்தன; ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டனர்; தேவன் மகிமைப்பட்டார்.
ஒரு விக்ளிஃபின் எதிரி இவ்வாறு கூறினான்: விக்ளிஃப் நற்செய்தியை மிகவும் சாதாரணமாக ஆக்கிவிட்டார். சாதாரண ஆண்களும் பெண்களும் எளிதில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்கிவிட்டார். கற்றறிந்த பெரியவர் களுக்கும், போதகர்களுக்கும் கொடுக்கவில்லை. இது பன்றியின் முன் முத்துக்களைப் போடுவதற்குச் சமம். நற்செய்தி என்னும் முத்துக்களை ஏழைகள் என்ற பன்றிகள் முன் போடுகிறார். பிரயோஜனம் என்ன? என்றான். அவனுடைய இத்தகைய கருத்துக்கு நாம் ஆண்டவருக்கு நன்றி கூறவேண்டியதுதான்!
இறைப்பணியில் ஆண்டவருடைய பங்கு என்ன? என்பதைக் கண்டு பிடிப்போம். தெய்வீக ஆயுதமான வேதாகமம் இப்பொழுது ஆயத்தமாயிருக்கிறது. எல்லா மக்களின் கரங்களிலும் இருக்கிறது. 16ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தப் புரட்சி இதனால் நடந்தேறியது. கர்த்தருடைய வசனம் என்றென்றும் வாழ்ந்து, தங்கியிருப்பது, கற்றவர்கள் அறிஞர்களின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஷெல்புகளில் வைத்து பூட்டி, இருட்டறைகளில் தூசுபிடிக்கப் போடப்பட்டிருந்தது. இப்பொழுது வெளியேற்றப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்தின் மக்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே படிக்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது.
விக்ளிஃப் சத்தியத்தின் பிறப்பிடம் வேதாகமம் மட்டுமே என்று அறிக்கை செய்தார். “போப் அல்லது அவருடைய ஆலோசனைக்குழு தவறு எதுவும் செய்வதில்லை” என்ற கொள்கையை வன்மையாகக் கண்டித்தார். எதிர்த்தார். மறுத்தார்.போப் பிறப்பிக்கும் கட்டளைகள் வேதாகமக் கொள்கைகளுக்கு ஒத்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்றார். சபைப் பொறுப்பில் இருக்கும் போதகர்கள், பாதிரியார்கள், பிஷப்புகள், போப் ஆகியோர் ஆளுகை செய்வதற் கல்ல. ஊழியம் செய்யவும், மக்களுக்கு உதவிசெய்யவும் மட்டுமே இருக்கின் றனர் என்றார்.
லோலார்டுகள் (Lollards) என்பவர்கள் மரித்தவர்களை அடக்கம் செய்யவும், பிணியாளிகளுக்கு உதவி செய்யவும் என்று தொண்டு புரிபவர்கள் போலாவார்கள் என அழைக்கப்பட்டனர். விக்ளிஃப் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வெளியேறும் பட்டதாரிகளை ஏழைப் பாதிரிகள் என்னும் தலைப்பில் பட்டியலிட்டுச் சேர்த்தார். இவர்கள் எங்கும் திரிந்து நற்செய்தி அறிவிக்கவும், பிணியாளிகளுக்கும்,ஏழைகளுக்கும் உதவி செய்யவும், விக்ளிஃப்பின் கொள்கைகளைப் பரப்பவும் அனுப்பப்பட்டனர். 1401இல் தேசத்துப் பாராளு மன்றம் லேலார்டு கருத்துக்களைப் பிரசங்கிப்பவர்களுக்கு ‘மரண தண்டனை’ என அறிவித்தது.
லண்டனில் உள்ள ஆர்ச் பிஷப், ‘விக்ளிஃப் பிரசங்கம் செய்யக்கூடாது’ என்று தடைவிதித்து விட்டார். எனவே விக்ளிஃப் தனது துறவி மடத்துக்குச் சென்று வேதாகமத்தை மொழி பெயர்ப் பதில் ஈடுபட்டார். அதோடு துண்டுத்தாள் பிரதிகளையும் எழுதி வெளியிட்டார்.
1384 டிசம்பர் மாதம் 28ஆம் நாள் லட்டர்வொர்த் சபையில் ஆராதனை நடத்திக்கொண்டிருக்கும்போது விக்ளிஃப் திடீரென்று பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.
விக்ளிஃப் எழுதிய புத்தகங்கள், துண்டுப் பிரதிகள் அனைத்தும் வெளியிடப்பட முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டன. 1415இல் கான்ஸ்டன்ஸ் மாநாட்டில் விக்ளிஃப் எழுதிய புத்தகங்கள் பிரசுரங்கள் அனைத்தையும் எரித்து அழித்துவிடுமாறு உத்தரவிடப்பட்டது. விக்ளிஃப்பின் சடலத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடுமாறு கட்டளையிடப்பட்டது.
1428இல் இந்தக் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் விக்ளிஃப்பின் சாதனைகளை யார் அழிக்கமுடியும்? அவை அவர் வைத்துப்போன சுதந்தரமாக நமக்கு உள்ளன.
1. விக்ளிஃப் பின்னால் இங்கிலாந்தில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்து வைத்தார்.
2. அவர் ஆங்கிலேயர்களுக்கு ஆங்கில மொழியில் வேதாகமம் கிடைக்கச் செய்தார்.
3. இவருடைய எழுத்துக்களும் கருத்துகளும் லோலார்டுகளை ஆயத்தம் செய்தன. அவர்கள் இங்கிலாந்து முழுவதும் நற்செய்தியோடு விக்ளிஃப்பின் சீர்திருத்தக் கருத்துக்களையும் பரவச்செய்தனர். சபைச் சீர்திருத்தமும், சமயச் சீர்திருத்தமும் நடைபெறுவது வரை லோலார்டுகளின் பணி தொடர்ந்தது.
4. சபையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு காட்டப்படக்கூடாது. அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும் என்னும் இவருடைய கருத்து ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாயிருந்தன. பின்னால் 1381இல் ‘விவசாயிகள் புரட்சி’ ஏற்பட இது வழிவகுத்தது.
5. இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த பொஹீமியாவைச் சேர்ந்த மாணவர்கள், விக்ளிஃப்பின் சீர்திருத்தக் கருத்துக்களை பொஹீமியாவுக்கு எடுத்துச் சென்று, அங்கு பரவச் செய்தனர். இந்தக் கருத்துக்கள் மக்கள் மனதில் வேரூன்றி, பின்னர் ஜான் ஹஸ் ஊழியம் செய்யும்போது, அவருடைய கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள உதவியாய் இருந்தது.