கனப்படுத்து!
தியானம்: ஜுன் 6 வெள்ளி; வாசிப்பு: 1இராஜாக்கள் 2:1-12
“என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள்,
உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே”
(நீதிமொழிகள் 1:8)
தாவீது, வயது சென்று மரணமடையும் காலம் சமீபித்தபோது, தனது மகன் சாலொமோனைத் தனது சிங்காசனத்தில் அமர்த்தினார். சாலொமோன் ராஜாவானான் என்ற செய்தி கேட்டதும், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று தாவீது பணிந்துகொண்டார் என்று வாசிக்கிறோம் (1இராஜா.1:48). இந்த ராஐ ஸ்தானத்தை சாலொமோன் பெற்றுக்கொண்டபோது, தாவீது அவனுக்குப் பல காரியங்களைக் கட்டளையாகச் சொன்னார். முக்கியமாக, கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தருக்குப் பிரியமானபடி அரசாளவேண்டும் என்று புத்தி கூறினார். சாலொமோனும் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான் என்றும் வாசிக்கிறோம் (1இராஜா.3:3). கிபியோனிலே பலியிடப்போன சாலொமோனிடம் கர்த்தர் சொப்பனத்திலே தோன்றி விரும்புகிறதைக் கேட்கும்படி சொன்னார். சாலொமோனும், கர்த்தருடைய ஏராளமான ஜனத்தை ஆளுவதற்குவேண்டிய ஞானத்தை கேட்டான். கர்த்தரோ, ஞானத்தோடு சகல ஐசுவரியத்தினாலும் அவனை நிறைத்தார் (1இராஐh.3:3-15). தகப்பன் தாவீது தன் மகனுக்கு தேவபயத்தைக் கற்றுக்கொடுத்தார். மகனும் அதன்படி நடந்த வரைக்கும் தேவனுக்குப் பிரியமானவற்றையே செய்தான்.
ஆனால், எப்போது சாலொமோன் தந்தையின் புத்திமதியை மீறினானோ அப்போதே அவனுடைய விழுகை ஆரம்பமானது. இராஜ்ய பாரமும் இரண்டாக பிரிந்தது. இதனால்தானோ, சாலொமோன் தான் எழுதிய நீதிமொழிகளிலே முக்கியமாக தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படியவேண்டுமென்று பிள்ளைகளுக்கு அநேக ஆலோசனைகள் வழங்கியுள்ளார் என்று எண்ணத்தோன்றுகிறது.
இன்று வாழ்க்கைமுறைகள், பெற்றோர் பிள்ளைகள் உறவுகள் தள்ளாடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. “பிள்ளைகளே! உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” என்று பவுல் எழுதியுள்ளார் (எபே.6:1-3). பெற்றோரைக் கனம்பண்ணுதல் என்பது அவர்களது கடமையை நிறைவேற்றுவது மாத்திரம் அல்ல; அவர்களுக்கு கீழ்ப்படிவதிலேயே கனப்படுத்துதல் தங்கியிருக்கிறது. இதனை தேவன் தமது பிள்ளைகளாகிய நம்மிடமும் எதிர்பார்க்கிறார். பிதாவாகிய தேவனை நாம் கனப்படுத்துவது உண்மையானால் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவோமாக. அதை மீறும்போது, அது நமக்கு மிகவும் கடினமாயிருக்கும்.
ஜெபம்: “பிதாவே, எனது பெற்றோருக்குக் கீழ்ப்படியாத வேளைகளை மன்னியும். அவர்களையும் உம்மையும் கனம்பண்ணி வாழ்வேன். ஆமென்.”