வார்த்தையை விசுவாசி

தியானம்: ஜுன் 20 வெள்ளி; வாசிப்பு: மத்தேயு 8:5-13

“ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது
என் வேலைக்காரன் சொஸ்தமாவான்”
(மத்தேயு 8:8).

இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார். சிலரைத் தொட்டுக் குணப்படுத்தினார். சிலரை விசுவாசத்தோடு செயற்படவைத்துக் குணப்படுத்தினார். சிலரை தம் வார்த்தையால் குணப்படுத்தினார். இப்படியாக வார்த்தையால் குணப்பட்டவர்களில் நூற்றுக்கு அதிபதி ஒருவனின் வேலைக்காரனும் ஒருவன். இந்த நூற்றுக்கு அதிபதி அதிகாரத்திலிருந்தாலும் தனது வேலைக்காரனை அதிகம் நேசித்தான். அவன் குணப்படவேண்டுமென்று இந்த அதிபதி இயேசுவிடம் வேண்டிக்கொண்டபோதும், இயேசு தன் வீட்டுக்கு வருவதற்குத் தான் பாத்திரன் அல்ல என்று சொல்லி, “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என்று வேண்டிக்கொண்டான். இந்த நூற்றுக்கு அதிபதி தன் வார்த்தையின்மீது வைத்திருந்த விசுவாசத்தை இயேசு கண்டு ஆச்சரியப்பட்டார். நூற்றுக்கதிபதி இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்தான். அவனது வேலைக்காரன் குணமானான். இன்றும் இந்த நூற்றுக்கு அதிபதிபோல இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து குணப்படுகின்றவர்கள் அநேகர்.

தன் சிறு குழந்தை திடீரென மரணமடைந்ததால் மனநிலை அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருபத்திநான்கு மணி நேரமும் படுக்கையிலிருந்தாள் மேரி. இந்த நிலைமையைக் கேள்வியுற்ற அவளது சகோதரி, வானொலியில் ஒலிபரப்பப்படும் கிறிஸ்தவ நிகழ்ச்சியொன்றைக் கேட்கும்படி வருந்திக் கேட்டுக் கொண்டாள். சகோதரியின் அன்பு கோரிக்கைக்குக் கீழ்ப்படிந்து அந்தக் கிறிஸ்தவ செய்தியைக்கேட்ட மேரியின் வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டிருந்த அவளது மனநிலை படிப்படியாகக் குணமடைய ஆரம்பித்தது. இதைச் சாட்சியாகச் சொன்னபோது, “இயேசு தமது வார்த்தையை அனுப்பி என்னைக் குணப்படுத்தினார்” என்று கூறினாள் மேரி.

சரீரநோயினாலும், மனநோயினாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இன்று அநேகர். ஒரு நோய் ஒருவனைத் தாக்கும்போது அவனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றும் தாக்கப்படுகிறது. சோர்வுற்று வேதம் வாசிப்பதைக்கூட நிறுத்தி விடுகிறவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவராக இன்று நாமும்  இருக்கிறோமா? இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவரது வார்த்தையின் வல்லமை என்றும் மாறாதது. அவர் இன்றும் தமது வார்த்தையை அனுப்பித் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களைக் குணப்படுத்தவல்லவராயிருக்கிறார். ஆதலால், விசுவாசத்தோடு அவரது வார்த்தையை இறுகப் பற்றிக் கொள்வோமாக. அவர் நம்மை ஆச்சரியமாக அற்புதமாகக் குணப்படுத்துவார்.

ஜெபம்: “கர்த்தாவே, நோயினாலும், மனச்சோர்வினாலும் உடைந்துபோனேன். உயிரடைய ஒரு வார்த்தை சொல்லும். நான் குணமாவேன். ஆமென்.”