கலங்காதே!
தியானம்: ஜுன் 22 ஞாயிறு; வாசிப்பு: எரேமியா 49:7-11
“திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி,
நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன்
விதவைகள் என்னை நம்புவார்களாக.” (எரேமியா 49:11)
எரேமியா தீர்க்கதரிசிக்கூடாகத் தேவன் தமது ஜனங்களுடன் அநேக காரியங்களைக் குறித்துப் பேசினார். அவர்களுடைய பாவ வாழ்க்கையை வெளிப்படுத்தினார்; கண்டித்து உணர்த்தி, திரும்பவும் தம்மிடம் திரும்பும்படி அழைப்பு விடுத்தார். ராஜாக்களோடு பேசினார். வருங்காலத்தில் நிறைவேற இருப்பவற்றைக் குறித்தும் வெளிப்படுத்தினார். அத்துடன், அந்நிய தேசங்களின் நியாயத்தீர்ப்பையும்கூட வெளிப்படுத்தினார். அந்தவகையில் ஏதோமை குறித்துக் கர்த்தர் கூறியவற்றில் மேலுள்ள வார்த்தையும் ஒன்று.
இந்த ஏதோமியர் யாக்கோபின் இரட்டைச் சகோதரனான ஏசாவின் சந்ததியார். இவர்கள் இஸ்ரவேலரைப் பகைத்தார்கள். அவர்களது அகந்தையும், இஸ்ரவேலருக்கு எதிரான வெறுப்பும் அவர்களது மிகப் பெரிய பாவமாக இருந்தது. இந்த ஏதோமியரைக் குறித்தும், அவர்களுடைய அழிவைக் குறித்தும் வெளிப்படுத்தியதோடு, “திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக” என்றும் கர்த்தர் கூறினார். எந்த சூழ்நிலையிலும் திக்கற்றுப்போகும் பிள்ளைகளைக் குறித்த கலக்கத்தையும், விதவைகளின் ஏக்கங்களையும் தேவன் புறக்கணிக்கிறவர் அல்ல. தம்மை நம்பும்படியும், பிள்ளைகளை தம்மிடம் ஒப்புக்கொடுக்கும்படியும் ஆறுதல் கூறுகிறார் என்பதை நாம் இங்கே அறியக்கூடியதாக இருக்கிறதல்லவா!
இந்தத் தேவனே என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவனுமாயிருக்கிறவர். அவர் மரணபரியந்தமும் நம்மை நடத்துகிறவருமாய் இருக்கிறார். இவ்வளவாய் நம்மீது கரிசனையும் தயையுமுள்ள இந்த தேவனை இன்றும் யார் நோக்கிக் கூப்பிட்டாலும் அவர் கைவிடவே மாட்டார். நாட்டின் சூழ்நிலையினால் திக்கற்றவர்களைப்போல பிற தேசங்களில் வாழுகின்ற நமது பிள்ளைகளைக் குறித்தும், காணாமற்போயிருக்கும் பிள்ளைகளைக் குறித்தும், நன்கு கவனிக்கமுடியாத சூழ்நிலைகளால் தவிக்கும் பிள்ளைகளைக் குறித்தும் கலங்கி கண்ணீர்விடும் தாயே, தகப்பனே, ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். விதவையாகிவிட்ட நான் என்ன செய்வேன் என்று ஏங்கித் தவிக்கிறீர்களா? இன்றைய தியான வசனத்தை இறுகப் பற்றிக்கொண்டு தேவ கரத்தில் உங்கள் பிள்ளைகளையும், உங்களையும் ஒப்புக்கொடுங்கள். வாக்கு அளித்தவர் வாக்குமாறாதவர். தம்மை நம்புகிறவர்களுக்கு அவர் உண்மையுள்ளவராய் இருந்து, உங்கள் கதறல்களுக்கு நிச்சயம் பதில் தருவார். அவர் எல்லோரையும் பாரபட்சமின்றி நேசிக்கிறவர் அல்லவா!
ஜெபம்: “பிதாவே, உம்மையே நம்பி வருகிறேன். என் பிள்ளைகளையும் என்னையும் என்றென்றும் தாங்கி வழிநடத்தியருளும். ஆமென்.”