ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2014)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

உன்னதங்களிலுள்ள ஆவிக்குரிய சகலவிதமான ஆசீர்வாதங்களையும் நமக்கு அருளி வருகிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

தேவனுடனான நெருக்கமான உறவுக்குள் மக்களை வழிநடத்தும் இவ் வுன்னத பணியில் வானொலி, தொலைகாட்சி, இணையதளம், இலக்கியம் ஆகிய ஊடகங்கள் வாயிலாக இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லவும், அநேகமாயிரம் மக்கள் பிரயோஜனமடையவும் தேவன் கிருபை செய்து வருகிறபடியால் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். தாங்கள் பெற்று வரும் ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துவருகிற வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கிறோம். இத்தியான நூலில் தியானங்களை எழுதிவரும் தேவ பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்யுங்கள்.

இத்தியான நூலில் பிரசுரமாகும் துதிஜெப விண்ணப்பப் பகுதியில் இடம் பெற்றுள்ள ஜெப விண்ணப்பங்களுக்காக உங்கள் தியான நேரத்தில் வேண்டுதல் செய்யவும் மற்றவர்களுக்காகப் பரிந்து பேசவும் அன்பாய் கேட்கிறோம். நீதிமான் செய்கிற ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கும். உங்கள் ஜெப விண்ணப்பங்களையும், மனபாரங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளலாம். நாங்களும் பங்காளர்களும் இணைந்து பாரத்தோடு உங்களுக்காக ஜெபிப்போம்.

செப்டம்பர் மாத தியானங்களை சகோதரர் சேவியர் அவர்கள் உபத்திரவங்கள், பாடுகள், துன்பங்கள் வழிசெல்லும் தேவபிள்ளைகளை தைரியப்படுத்தும்வண்ணமாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாத தியானங்களில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் பலவித ஆவிக்குரிய சத்தியங்களை தொகுத்து எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் யாவும் உங்கள் யாவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்