ஒப்பந்தம்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2014)
– Dr.உட்ரோ குரோல்

“லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத்  திரும்பிப்போனான்.   .. நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், …கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர் (ஆதி. 31:55, 49)”.

தாங்கள் மறுபடியும் சுகத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திக்க விரும்பும் இரு குழுக்கள் ஏறெடுக்கப்படும் ஜெபமாக இது கருதப்படுகிறது. ஆயினும் இதன் பின்னணியை நோக்கும் பொழுது இது ஓர் எதிர்மறையான பொருளையே தருகிறது.

யாக்கோபு ஓர் எத்தனாக இருந்தான். ஒரு பயிற்றங்கூழுக்காக தன்னுடன் பிறந்த ஏசாவை அவனுடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட வற்புறுத்தினான். பின்னர் தன்னுடைய தகப்பனிடம் பொய் சொல்லி ஏமாற்றி, மாற்றக் கூடாத குடும்ப ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான். யாக்கோபு என்ற பெயரின் பொருள், சூழ்ச்சியினால் துரோகம் செய்து, ஒருவரை அகற்றிவிட்டு அவரது இடத்தைக் கவர்ந்துகொள்வது என்பதாகும். அவன் தன்னைப் போலவே ஏமாற்றுக்காரனான தனது மாமனார் லாபானை சந்தித்தான். யாக்கோபு ஆரானை அடைந்தபொழுது, ரூபவதியான ராகேலை சந்தித்தான். அவளைத் திருமணம் செய்வதற்காக ஏழு ஆண்டுகள் லாபானிடம் வேலை செய்தான். அந்த ஏழு ஆண்டுகளின் முடிவில் லாபான் யாக்கோபை ஏமாற்றி ராகேலுக்குப் பதிலாக லேயாளை கொடுத்தான். எனவே, தான் விரும்பிய பெண்ணுக்காக யாக்கோபு இன்னொரு ஏழு ஆண்டுகள் வேலைசெய்ய வேண்டியதாயிற்று. லாபானின் குமாரத்திகளுக்காக இவர் பதினான்கு ஆண்டுகளையும், மந்தைகளுக்காக மற்றொரு ஏழு ஆண்டுகளையும் லாபானிடம் பணிபுரிந்தார்.

இந்த காலத்தின் முடிவில் தேவன் யாக்கோபுக்கு வாக்குப் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்கு திரும்புவதையும் அவனுடைய பொருத்தனையையும் நினைப்பூட்டினார். எனவே யாக்கோபு லாபானிடம் தான் பெத்தேலுக்கு போவதற்காகத் தன்னை விடுவிக்குமாறு கேட்டான். ஆனால், இது லாபானின் பொருளாதாரத்தை பாதிக்கும் காரியமாகும். எத்தனாக இருந்தாலும், தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கு யாக்கோபு சுதந்திரவாளியாவார். தனது செல்வத் திரட்சிக்குக் காரணம் தேவனுடைய ஆசீர்வாதம் யாக்கோபிடம் இருந்ததால்தான் என்பதை லாபான் நன்கு அறிந்திருந்தார். எனவே பிரிந்துசெல்வதை மறந்து விடுமாறும் தன்னுடனேயே இருந்து விடும்படியாகவும் யாக்கோபுக்கு பரிந்துரைத்தார். எனவே லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் பொழுது, ஆரானை விட்டு இரகசியமாக ஓடிவிடுவதே யாக்கோபுக்கு ஒரே வழியாயிருந்தது.

தனது தகப்பனுடைய சுதந்திரம் தனக்குக் கிடைக்காது என்பதை அறிந்திருந்த ராகேல் தனது வீட்டை விட்டுக் கிளம்பும்பொழுது, குடும்ப சுரூபங்களைத் திருடிக்கொண்டாள். மெசப்பத்தோமியாவின் வடபகுதியிலுள்ள நுசி என்ற இடத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியிலிருந்து, குடும்ப தெய்வ சுரூபங்களை உடையவரே சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட வாரிசு என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாகவே ராகேல் தனது தகப்பனுடைய சுரூபங்களை அவருடைய அனுமதியின்றியும், யாக்கோபுக்கு மறைத்தும் எடுத்துக்கொண்டாள்.

தனது வீட்டைவிட்டு யாக்கோபு புறப்பட்டுச் சென்றுவிட்டதை அறிந்த லாபான் யாக்கோபையும் அவனுடைய குடும்பத்தையும் பின் தொடர்ந்தான். ஏழு நாட்களுக்குப் பின் அவர்களை கீலேயாத் மலையில் கண்டுபிடித்தான். உடனடியாக யாக்கோபிடம் தனது சுரூபத்தைப் பற்றி வினவினான். அதைப்பற்றி அறிந்திராத யாக்கோபு தனது பொருட்களை சோதனையிட்டுக் கொள்ள லாபானை அனுமதித்தார். ராகேல் அதனை தந்திரமாக ஒளித்து வைத்தபடியினால் அச்சுரூபங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் நம்பிக்கையின்மையை உண்டு பண்ணியது. ஆனால் இருவருக்கும் இடையில் இச்சந்தேகமானது நிரந்தரமாகிவிடக் கூடாது என்பதால் இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் திட்டமிடப்பட்டது.

இதன்படி இருவருக்குமிடையே ஒரு தடை உருவாக்கப்பட்டது. மிஸ்பாவில் உண்டாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மிக எளிமையானதே. லாபானுக்கும் யாக்கோபுக்கும் இடையில் கற்குவியல் சாட்சியாக உருவாக்கப்பட்டது அந்தக் குவியலையும் அந்தத் தூணையும் கடந்து மற்றவரிடத்துக்கு வராதபடிக்கும் அந்தக் குவியலும் சாட்சி, அந்தத் தூணும் சாட்சி. இந்த நிகழ்வுக்கு தேவன் ஒருவரே சாட்சி என்பதால், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் ஆண்டவரே நம்மைக் கண்காணிப்பாராக” என்று சொல்லிக்கொண்டனர். சந்தேகமும் நம்பிக்கையின்மையும் இதன் அடிப்படையாக அமைந்தது.

“லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான்” (ஆதி. 31:55). பின்பு லாபான் புறப்பட்டு, ஆரானுக்குத் திரும்பிப் போனான். இதன் பிறகு லாபானைப் பற்றி வேதாகமத்தில் குறிப்புகள் தரப்படவில்லை.

தேவ மனிதனாகிய யாக்கோபு, உலக மனிதனான லாபானுடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறான். உலகத்துடன் தேவையான உடன் படிக்கைகள் செய்துகொள்ள வேதாகமம் தடை கூறவில்லை. அடிக்கடி தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் இவ்வுலகில் செய்யப்படுகின்றன. ஆனால் அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படக்கூடாது என்பதை வேதம் எச்சரிக்கிறது (2கொரி.6:14). யாக்கோபு இருபது வருடங்களாக லாபானுடன் உடன்படிக்கை செய்வதை கவனமாகத் தவிர்த்து வந்தான். உலகத்தோடு தன்னை உடன்படிக்கை செய்துகொண்டால் அது கவர்ச்சியாகவும், இலாபமாகவும் காணப்பட்டாலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் ஆசீர்வாதங்களுக்கு ஈடாகாது என்பதை அந்த தேவ மனிதர் அறிந்திருந்தார். இன்றைய கிறிஸ்தவர்களும் உலக ஆசீர்வாதங்களைவிட தேவனுடைய ஆசீர்வாதமே மேலானது என்பதை அறிந்துகொள்வது நல்லது.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை