அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(4) திபெத்திய மொழிபெயர்ப்பு
கிறிஸ்தவ மிஷனெரிகள் உட்புக முடியாத ஒரு நாடாக திபெத் இருந்தபோதிலும் தேவனுடைய வார்த்தையானது திபெத்திய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு, அந்நாட்டுக்குள் சென்றுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மொரேவிய கிறிஸ்தவர்கள், திபெத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கக்கூடிய வாய்ப்புகளை அறிந்துவர இரு மிஷனெரிகளை அனுப்பினர். இவர்கள் கடும் இக்கட்டுகளுக்கு முகங்கொடுத்ததோடு, திபெத்திய எல்லைப் பகுதியில் குடியிருப்பதற்கும் சீன அதிகாரிகளினால் அனுமதிக்கப்படவில்லை. எனினும் இவர்கள் தமது முயற்சியைக் கைவிடாமல் கைலாங் எனும் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர்கள் 1856-இல் தமது நண்பரான ஹெயின்ரிச் ஜெஸ்கி என்பவரை சந்தித்தனர். இவர் திபெத்திய மக்களை சந்திப்பதற்கான ஒரு வழி, அவர்களுடைய மொழியைக் கற்று வேதாகமத்தை அம் மொழியில் மொழிபெயர்ப்பதே என்பதை அறிந்தவராக அப்பணியைச் செய்யத் தொடங்கினார்.
இதன் பயனாக 1871-இல் புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதி கள் திபெத்திய மொழியில் மொழி பெயர்த்து அச்சிடப்பட்டு திபெத்திய நாட்டின் எல்லைப்பகுதிகளில் குடியிருந்த மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. இது அப்பகுதி திபெத்திய மதத்தலைவர்களுக்குத் தெரிந்தபோது, அப்புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என அவர்கள் கட்டளையிட்டனர். இதனால் சிலர் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களைத் தமக்கு கொடுத்தவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டனர். ஆனால் பலர் அவற்றைத் தமது திபெத்திய தெய்வச் சிலைகளுக்கு முன் வைத்து, தமது மதநூல்களுக்கு செய்வதுபோலவே அவற்றுக்கு முன் விளக்கேற்றினர்.
அதேசமயம், சீன எல்லைப் பகுதியிலிருந்து சில மிஷனெரிகள் திபெத்துக்குச் சென்றதோடு, திபெத்திய வேதப்பிரதிகளையும் நாட்டுக்குள் எடுத்துச்சென்றனர். சில மிஷனெரிகள் திபெத்திய மக்கள் விரும்பும் பொருட்களை சீனாவிலிருந்து கொண்டுவந்து அவர்களுக்கு விற்பனை செய்ததோடு, திபெத்திய வேதாகமத்தையும் அவர்களுக்கு கொடுத்தனர். பல திபெத்திய மக்கள் வேதபுத்தகத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டுள்ளனர். சீன கிறிஸ்தவ வியாபாரிகளும் திபெத்திய வேத புத்தகங்களை மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.
(5) மலாய மொழிபெயர்ப்பு
1814-இல் பிரித்தானிய வெளி நாட்டு வேதாகமச் சங்கம் மலேசிய கிறிஸ்தவர்களுக்காக அவர்களுடைய மலாய மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டது. 1970-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மலேசியாவிலிருக்கும் வேதாகமச் சங்கம் கிழக்கு மலேசியாவில் பேசப்படும் 7 மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததை அறிகின்றோம்.
(6) தாய்லாந்து மொழிபெயர்ப்பு
நெதர்லாந்து மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த குட்லொஃப் என்பவர் 1828 முதல் 1831 வரையிலான காலப் பகுதியில் தாய்லாந்தில் பணியாற்றிய காலத்தில் வேதாகமத்தை அந்நாட்டு மொழியான சயமீஸ் மொழியிலும், வேதாகமத்தின் சில பகுதிகளை லாஓ, மற்றும் கம்போடிய மொழியிலும், மொழிபெயர்த்துள்ளார். எனினும், இவரது மொழிபெயர்ப்புகள் அச்சிடப்பட்டது பற்றி எவ்வித குறிப்புகளும் இல்லை. 1834-இல், வேதாகமச் சங்கம் தாய்லாந்து மொழியில் வேதாகமத்தின் பகுதியொன்றை அச்சிட்டது. பின்னர் 1843-இல் புதிய ஏற்பாடும், 1883இல் முழு வேதாகமமும் தாய்லாந்து மொழியில் வெளியிடப்பட்டது. தாய்லாந்தின் வடபகுதி மக்களது மொழியில் புதிய ஏற்பாடு 1914-இலும், முழுவேதாகமமும் 1927-இலும் வெளிவந்தது.
1967-இல் இதன் திருத்தப்பதிப்பு வெளிவந்தது. 1967-இல் தாய்லாந்து மொழி புதிய ஏற்பாடானது முதல் தடவையாக தாய்லாந்திலேயே அச்சிடப்பட்டது. தற்போது இலகு மொழிநடையிலான தாய்லாந்து மொழி வேதாகமம் தயாரிக்கப்பட்டு வருவதோடு, தாய்லாந்தின் 5 கோத்திர மொழிகளிலும் வேதத்தின் பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
(7) வியட்னாமிய மொழிபெயர்ப்பு
1911-இல் புரட்டஸ்தாந்து சபைகளைச் சேர்ந்த மிஷனெரி சங்கங்கள் வியட்நாமுக்கு மிஷனெரிகளை அனுப்பின. 1916-இல் வேதாகமம் வியட்நாமிய மொழியில் வெளிவந்தது. இதன்பின்னர் வியட்நாமிய கோத்திர மக்களது சில மொழிகளிலும் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. 1957-இல், வைக்கிளிப் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் தமது மொழி பெயர்ப்பு வேலைகளை வியட்நாமில் ஆரம்பித்தனர். அவர்கள் தற்சமயம் 20-இற்கும் அதிகமான வியட்நாமிய கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்து வருகின்றனர்.
(8) கொரிய மொழிபெயர்ப்பு
1832-ஆம் ஆண்டு குட்லொஃப் என்பவர் கொரியாவுக்கு விஜயம் செய்ததோடு, சீனமொழிபெயர்ப்பு வேதப் பிரதிகளையும் அங்கு விட்டுச் சென்றுள்ளார். கொரிய மொழியில் புதிய ஏற்பாடு முதன் முதலாக ஜோன் ரொஸ் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்டது. எனினும், இதில் சீன மொழியின் செல்வாக்கு அதிகம் இருந்த மையினால், திருத்தப்பட்டு 1900-இல் வெளியிடப்பட்டது. 1910-இல் பழைய ஏற்பாடும் கொரிய மொழியில் வெளிவந்தது. 1935-இல் இவ்விரு ஏற்பாடுகளும் திருத்தப்பட்டன. 1960-இல் முழு வேதாகமத்தையும் மறுபடியுமாகத் திருத்தும் வேலைகள் ஆரம்பமாகின. கொரியாவை ஜப்பான் ஆக்கிரமித்திருந்த காலத்தில் வேதாகமம் மட்டுமே கொரிய மொழியில் வெளியிடப்பட்ட ஒரே ஒரு புத்தகமாகும். மற்ற அனைத்தும் ஜப்பான் மொழியிலேயே வெளியிடப்பட்டன. அக்காலத்தில் வேதாகமமே கொரிய மொழி அழிந்து போகாமல் இருப்பதற்கு காரணமாயிருந்தது என்பதற்காக 1970-இல் கொரிய அரசாங்கம் கொரிய வேதாகமச் சங்கத்துக்கு சிறப்பான விருதொன்றை வழங்கியுள்ளது.
(9) சிங்கள மொழிபெயர்ப்பு
இலங்கையில் கி. பி. முதலாம் நூற் றாண்டிற்குப் பின்னர் 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளிலும் சில கிறிஸ்தவர்கள் இருந்த போதிலும், 16-ஆம் நூற்றாண்டு போர்த்துக்கேயரது வருகையோடேயே கிறிஸ்தவம் நாட்டின் கரையோரப்பகுதிகளில் பரவத் தொடங்கியது. எனினும் அக் காலத்தில் வேதாகமத்தைச் சிங்கள மக்களது மொழியில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகளில் ரோம சபை மிஷனெரிகள் ஈடுபடவில்லை. அவர்கள் சிங்கள மொழியில் ஒரு வேதாகம உபதேசப் புத்தகத்தை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
17-ஆம் நூற்றாண்டில் (1658-இல்) போர்த்துக்கேயரிடமிருந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் தமது சீர்திருத்த கிறிஸ்தவத்தை அறிமுகப் படுத்தியதோடு, இலங்கை மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். (தமிழ் வேதாகமத்தை மொழி பெயர்க்க ஒல்லாந்தர் மேற்கொண்ட பணிகள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் நாம் பார்ப்போம்).
1670-ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த ஒல்லாந்த சீர்திருத்த சபை மிஷனெரி சைமன்கட் என்பவர், லத்தீன், கிரேக்கம், எபிரேயம், டச்சு, போர்த்துக்கேயம், தமிழ், மற்றும் சிங்கள மொழிகளில் பட்டம் பெற்றிருந்தார். இவர், மத்தேயு சுவிசேஷத்தையும், அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் 14 அதிகாரங்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆரம்பத்தில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட பிரதிகளாக உபயோகிக்கப்பட்ட இம்மொழிபெயர்ப்பு 1780-ஆம் ஆண்டே அச்சிடப்பட்டது. 1717-ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த விலம்ஸ் கொனைன் என்பவர், நான்கு சுவிசேஷங்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதன் பிரதிகள், இவரது மரணத்தின் பின்பு கண்டு பிடிக்கப்பட்டு, வெட்ஸெலியுஸ் என்பவரினால் 1739-இல் அச்சிடப் பட்டது.
புதிய ஏற்பாட்டின் ஏனைய புத்தகங்கள் ஹென்றிக்சன் பிலிப்ஸ் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்டதோடு இவை ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டிருந்த புத்தகங்களோடு சேர்க்கப்பட்டு 1780-இல் சிங்கள புதிய ஏற்பாடு வெளிவந்தது. இதன்பின்னர் பிலிப்ஸ் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்க தொடங்கினார். 1786-இல் ஆதியாகமமும் 1787-இல் யாத்திராகமமும் 1789-இல் லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் எனும் புத்தகங்களும் சிங்களத்தில் இவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.
(தொடரும்)