நாம் யார் தெரியுமா?
தியானம்: அக்டோபர் 1 புதன்; வாசிப்பு: எபேசியர் 2:1-8
“அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய
சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்”
(எபேசியர் 1:3).
மனைவியின் தூண்டுதலால் தன் பெற்றோரிடம் சென்ற மகன், “எனக்குரிய சொத்தை இப்போதே தந்துவிடுங்கள். உங்கள் தானதருமங்களைப் பின்னர் வைத்துக்கொள்ளுங்கள்” என்று பொரிந்து தள்ளினான். அதிர்ந்துபோன தகப்பன் மாரடைப்பினால் இறந்துவிட்டார். ஆத்திரமடைந்த தாய், அவர் எழுதி வைத்திருந்த உயிலை மகனின் முகத்தில் விட்டெறிந்தாள். அதிலே, தனது முழுச் சொத்துமே தனக்குப் பின்னர் தன் மகனுக்கு என்றும், தான் ஓய்வு பெற்றபின் சம்பாதித்த சம்பாத்தியம் ஏழைகளுக்கு உரியது என்றும் எழுதப்பட்டிருந்தது.
இன்று நமது நிலைமையும் இதுதான். நமக்குத் தேவையான யாவையும் ஆண்டவர் நமக்கென்று தந்துவிட்டார். அதைப் புரிந்தும் புரியாதவர்கள்போல, உலகத்தின் பயமுறுத்தலுக்குப் பயப்பட்டு, எப்பொழுதும் நமக்கிருக்கும் குறைகளைக் குறித்தே முறையிடுகிறோம். ஆண்டவர் நமக்கு என்னதான் குறை வைத்துள்ளார்? தமது மரணம் உயிர்த்தெழுதலால் சகலத்தையும் செய்து முடித்து விட்டாரே! மன்னிப்பு, இரட்சிப்பு, தேவனுடைய பிள்ளை என்ற உயர்ந்த நிலை, ஆண்டவரே நமக்குள் வாழுகின்ற கிருபை, ஆவிக்குரிய கொடைகள், தேவசித்தம் செய்யக்கூடிய வல்லமை, பிசாசை எதிர்கொள்ளும் அதிகாரம், கிறிஸ்துவோடு நெருங்கிய உறவு, நித்தியமாய் கிறிஸ்துவோடு வாழுகின்ற நிச்சயம், கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக்கொள்ளும் கிருபை, எல்லாவற்றுக்கும் மேலாக பாழாய்ப்போன இவ்வுலகத்தில் உழன்ற நம்மை, இதே உலகில் தமக்குச் சாட்சியாக ஏற்படுத்தினாரே… இதற்கும் மேலே நமக்கு என்னதான் வேண்டும். “இவையெல்லாம் நமக்குச் சோறு போடுமா” என்று கேட்கிறீர்களா? இத்தனை பாக்கியத்திற்கும் நம்மைத் தகுதிப்படுத்திய தேவனுக்கு நாளை அழிந்துபோகும் இந்த உடலுக்கு உணவுகொடுக்க முடியாதா என்று திருப்பிக் கேட்டுப் பாருங்கள். நாளை மாறிப்போவதற்கு, கர்த்தர் நமக்கு அளித்துள்ள ஈவுகள் எதுவுமே உலகினால் உண்டானவை அல்ல. கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களும் இன்று நம்முடையவைகள். அந்த உரிமை நமக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டாயிற்று. அப்படியிருக்க, உலகம் நம்மை சற்றுத்தடுக்கி வீழ்த்தப் பார்த்தாலே நாம் தடுமாறிவிடுவது ஏன்?
தேவபிள்ளையே, இவ்வுலகம் குறைகளையே பெரிதுபடுத்தி, பூச்சாண்டி காட்டி மிரட்ட நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல. நாம் யார், நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐசுவரியம் என்ன என்பதை உணர்ந்து, உலக போராட்டங்களைக் கண்டு மிரளாமல், எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் ஐசுவரிய சம்பன்னரின் விலையேறப்பெற்ற பிள்ளைகள் என்பதை நிரூபிப்போமாக.
ஜெபம்: “பிதாவே, இத்தனை பாக்கியம் பெற்ற நான், என்ன பாடுகள் நேர்ந்தாலும் தயங்காது உமக்கே சாட்சியாக வாழ என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.”