ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2014)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை சேர்த்துக் கொள்ளும்படியாய் வரப்போகிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ் வருடத்தின் இந்த நாள் வரைக்கும் அற்புதமாய் நம்மை வழிநடத்தின நம் தேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். கடந்த இதழ் உங்கள் யாவருக்கும் உரிய நேரத்தில் கிடைக்க தேவன் கிருபை செய்தபடியால் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். எங்களது வேண்டுகோளுக்கிணங்கி, தபால் அலுவலகத்தில் புகார் செய்து முயற்சியெடுத்த பங்காளர்களுக்கு நன்றி கூறுகிறோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தின் வேத வாசிப்பு அட்டவணையை பயன்படுத்தி இவ்வருடத்தில் வேதத்தை வாசித்து முடித்தோர் தவறாமல் எங்களுக்கு எழுதித் தெரியப்படுத்தவும். இவ்வருடத்தில் பங்காளர் சந்தாவை இதுவரை புதுப்பிக்காதவர்கள் புதுப்பிக்க அன்பாய் கேட்கிறோம். கிறிஸ்துமஸ் பாடல்கள் அடங்கிய புதிய பாடல் CD (Vol.20)  ஒன்றை டிசம்பர் மாதத்தில் வெளியிடுகிறோம். “இலவச தபால் வழி வேதபாடம்” எமது தலைமை அலுவலகத்திலிருந்து ஆங்கிலம் மற்றும் அநேக இந்திய மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் வேதபாடம் கற்க விரும்புவோர் எங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

இவ்விதழில் நவம்பர் மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் வேதாகமத்திலுள்ள பெண் கதாபாத்திரங்களைக் கொண்டு அருமையான தியானங்களை எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாத தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்து நாம் அனைவரும் பிரயோஜனப்படும்படியாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை எழுதிவருகிற தேவபிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்யுங்கள். இத்தியான நூலை அநேகருக்கு அறிமுகப் படுத்துங்கள்.

உங்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்