சீர்திருத்தம்
அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2014)
– Dr.உட்ரோ குரோல்
“அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின்
பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.”
(2 நாளாகமம் 29:20)
இஸ்ரவேலின் வடநாட்டிலிருந்து பத்து கோத்திரங்கள் தாழ்ச்சியையும், தென்நாட்டைச் சேர்ந்த இரண்டு யூதாவின் கோத்திரங்கள் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்துக் கொண்டிருந்தன. சமாரியாவின் அழிவுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், யூதாவின் பதின்மூன்றாவது இராஜாவாக எசேக்கியா தனது தகப்பனார் ஆகாசின் மறைவுக்குப் பின்னர், அரியணை ஏறினார். அப்பொழுது இஸ்ரவேலை அதன் கடைசி அரசரான ஓசியா ஆண்டு கொண்டிருந்தார். எசேக்கியா இராஜாவாகிறபொழுது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் நீண்ட நல்லாட்சி புரிந்தார்.
தமது தகப்பனைப் போலிராமல், தேவனுக்கு முன்பாக தாவீதைப் போல செம்மையாய் நடந்தார். “அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.” (2நாளா.29:2) என்று வேதம் அவரைப் பற்றிக் கூறுகிறது. பென்சிரா என்ற பழங்காலத்து வரலாற்று ஆசிரியர், தாவீது, யோசியா மற்றும் எசேக்கியா ஆகிய மூன்று அரசர்கள் மாத்திரமே உன்னத தேவனுடைய கட்டளைகளை மறக்காமல் கைக்கொண்டனர் என எழுதியுள்ளார். மேலும் இவரைப் பற்றி, “அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக் கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று” (2இரா.18:5-7) என்று வேதத்தில் எழுதப் பட்டுள்ளது.
தனது ஆட்சியின் முதலாவது மாதத்தில் யூதாவின் வரலாற்றில் காணாத ஒரு மத சீர்திருத்தத்தை இவ்வரசர் கொண்டுவந்தார். ஆகாஸ் அரசரால் மூடப்பட்டிருந்த தேவாலயத்தைத் திறந்து அதனைப் பழுது பார்த்து, சர்வாங்க தகனபலி பீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்தார். இத்தகைய சீர்திருத்தத்தைச் செய்வதற்கு ஏசாயா தீர்க்கதரிசி அவருக்கு தூண்டுகோலாகவும், உறுதுணையாகவும் இருந்தார். எசேக்கியா அரசனுக்கு ஏசாயா தீர்க்கதரிசி உறவின் முறையாவார் என்று யூதபாரம்பரியம் கூறுகிறது. இத்தீர்க்கதரிசி, உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகிய நான்கு யூத அரசர்களின் ஆட்சியின் பொழுது தீர்க்கதரிசனம் உரைத்தார் (ஏசாயா 1:1). எசேக்கியா அரசரும் ஏசாயா தீர்க்கதரிசியும் இணைந்து, யேகோவா தேவனை வணங்குவதற்கு இஸ்ரவேலில் மதசீர்திருத்தத்தைச் செய்தனர். எட்டே நாளில் தேவாலயம் பழுது பார்க்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டது. கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகன பலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரிக்கப் பட்ட அறிக்கை எசேக்கியா அரசருக்கு அளிக்கப்பட்டது. இவை ஆகாஸ் அரசர் காலத்தில் உபயோகமற்றவையாக இருந்தன.
“அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.” (2 நாளா.29:20). ஆசாரியர்கள் செலுத்தப்பட வேண்டிய பலிகளை செலுத்தினர். லேவியர்கள் கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசித்து, கீதங்களால் கர்த்தரைத் துதித்தனர். கீதவாத்தியங்கள் முழங்க, ஆசாரியர்கள் பூரிகைகளை ஊதி ஆர்ப்பரிக்க, சபையினர் தேவனைப் பணிந்துகொண்டனர். உண்மையிலேயே இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. அங்கிருந்த அனைவரும் எசேக்கியா அரசருடன் இணைந்து யேகோவா தேவனைப் பணிந்து கொண்டனர். இது எசேக்கியா அரசரின் முதல் சீர்திருத்தம்.
இரண்டாவதாக, அவர் “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள்” என்று இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினார். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் யோசுவாவின் காலத்தில் இஸ்ரவேலர் பஸ்கா பண்டிகையை ஆசரித்தனர். அதன்பின்னர், இஸ்ரவேலர் அப்பண்டிகையை ஆசரித்தது இங்கேதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விடைப்பட்ட கொந்தளிப்பின் நாட்களில் தேவனுடைய ஜனம் எவ்வளவாய் தாழ்ந்துவிட்டனர்!
தம்முடைய ஜனத்தின் மேல் கரிசனை கொண்டு, தமது ஆலயத்தைப் பழுதுபார்த்து, சுத்தப்படுத்தி, பலிகளையும் ஆராதனையையும் ஒழுங்குபடுத்தி அதிகாலமே எழுந்து தம்மை பணிந்துகொண்ட இம்மனிதனைக் கண்ட யேகோவாவின் மனம் அதிகமாய் மகிழ்ச்சியினால் துள்ளியிருக்கும். இவையெல்லாம் எசேக்கியா அரசரின் சீர்திருத்தங்களின் ஆரம்பமே. இன்று இதுபோன்ற எசேக்கியாக்கள் அதிகாலமே எழும்பி, இஸ்ரவேலில் மீண்டும் தொழுகையில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால் தேவனுடைய உள்ளம் எவ்வளவாய் களிகூறும். இதற்காக நாம் ஜெபிப்போமா? தேவஜனங்களின் இரட்சிப்புக்காகவும் இஸ்ரவேலின் சமாதானத்துக்காகவும் வேண்டிக்கொள்வோம்.
அதிகாலை கீதம்:
உம் கிரியையை உயிர்ப்பியும் தேவா!
உம் வல்லமையான கரங்கள் விரியட்டும்;
உம் வல்லமையான சத்தத்தை உயர்த்தும்,
உம் ஜனங்கள் உயிரடைந்து கேட்கட்டும்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை