அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(9) சிங்கள மொழிபெயர்ப்பு

1786-இல் ஆதியாகமமும் 1787-இல் யாத்திராகமமும் 1789-இல் லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் எனும் புத்தகங்களும் சிங்களத்தில் இவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

1796-ஆம் ஆண்டு இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றினர். 1812-ஆம் ஆண்டு கொழும்பில் வேதாகமச்சங்கத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டது. 1813-இல், கல்கத்தா வேதாகமச் சங்கம், ஒல்லாந்து சபை மிஷனரிகள் மொழிபெயர்த்த சிங்கள புதிய ஏற்பாட்டில் 2000 பிரதிகளை அச்சிட்டு கொழும்புக்கு அனுப்பியது. எனினும் இலங்கை வேதாகமச்சங்கம் அம்மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. 1805-ஆம் ஆண்டு அரசில் பணிபுரிவதற்காக இலங்கை வந்த டொல்ஃபிரி என்பவர் பல மொழிகளை அறிந்திருந்ததோடு, இலங்கை வந்த குறுகிய காலத்திலேயே பாளி மற்றும் சிங்கள மொழிகளைக் கற்றமையினால், அவரிடம் புதிய சிங்கள வேதாகம மொழி பெயர்ப்புப் பணியை வேதாகமச் சங்கம் ஒப்படைத்தது. இவர் 1817-இல் மரணமடைந்தார்.

அச்சமயம் இவர் புதிய ஏற்பாட்டில் 2 தீமோத்தேயு 2 ஆம் அதிகாரம் வரை சிங்களத்தில் மொழிபெயர்த்திருந்தார். மொழிபெயர்ப்பு வேலைகளில் இவருக்கு மெதடிஸ்ட், பப்டிஸ்ட், அங்கிலிக்கன் சபை மிஷனரிகளும் பல சிங்கள மக்களும் உதவி செய்துள்ளனர். டொல்ஃபிரியின் மரணத்தின்பின் அவருக்கு உதவியாயிருந்த மிஷனரிகள் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பூர்த்தி செய்தனர். புதிய ஏற்பாடு 1817-இலும், பழைய ஏற்பாடு 1823-இல் மூன்று பகுதிகளாகவும் வெளிவந்தது. இம்மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களுள் அங்கிலிக்கன் சபை மிஷனரி அன்று ஆர்மர், பப்டிஸ்ட் சபை மிஷனரி சாட்டர், மெதடிஸ்ட் சபை மிஷனரி கிளவ் என்போர் முக்கியமானவர்களாவர்.

1827-இல் இவ்வேதாகமம் திருத்தப்பட்டது. சிங்களத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்த காலத்தில் டொல்ஃபிரி பாளி மொழியிலும் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். அவரது மரணத்தின் பின் மெதடிஸ்ட் மிஷனரி க்ளவ் இம்மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்தார். இம்மொழி பெயர்ப்பு பர்மாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு பெளத்த பிக்குகள் மத்தியில் ஊழியம் செய்தவர்களால் உபயோகிக்கப்பட்டது. டொல்ஃபிரியின் வேதாகமத்தின் மொழிநடை உயர்வானது என கருதிய சபை மிஷனரி சங்கத்தினர் 1820-இல் ஒரு புதிய சிங்கள மொழிபெயர்ப்பு வேதாகமத்தைத் தயாரிக்கத் தொடங்கினர்.

கோட்டே எனுமிடத்தில் பணியாற் றிய சாமுவேல் லெம்பிரிக், ஜே.செல் சிர்க் எனும் இரு மிஷனரிகளும் புதிய சிங்கள வேதாகம மொழி பெயர்ப்பாளர்களில் முக்கியமானவர்களாவர். எனினும், இவர்களது மொழி பெயர்ப்பில் தரம் குறைந்த சிங்கள மொழியே உபயோகிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. 20 வருட காலமாக இம்மொழி பெயர்ப்பு பரீட்சார்த்தமாக உபயோகிக்கப்பட்ட போதிலும், மக்கள் இம்மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், 1852-இல் ஒரு புதிய மொழி பெயர்ப்பைத் தயாரிக்க வேதாகமச் சங்கம் ஒரு குழுவை நியமித்தது. இதில் அங்கிலிக்கன் மற்றும் மெதடிஸ்ட் சபை மிஷன்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகித்தனர். இவர்களது முயற்சியின் பயனாக 1885-இல் புதிய சிங்கள வேதாகமம் வெளி வந்தது.

அதேசமயம், பப்டிஸ்ட் சபை மிஷனரிகளான ஜேம்ஸ் சாட்டர், எபனேசர் டேனியல் எனும் இருவரும் இன்னுமொரு புதிய சிங்கள மொழி பெயர்ப்பு வேதாகமத்தைத் தயாரித்தனர். இவர்களது பணி காரணமாக 1862-இல் புதிய ஏற்பாடும், 1876-இல் பழைய ஏற்பாடும் சிங்கள மொழியில் வெளிவந்தது. 1905-இல் இம்மொழி பெயர்ப்பு திருத்தப்பட்டது. இது மறுபடியுமாக 1919-இல் ஒரு சில திருத்தங்களுடன் பிரசுரிக்கப்பட்டது. அதேசமயம் 20-ஆம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்களும் வேதாகமத்தை சிங்களத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். 1920-ஆம் ஆண்டு சகல சபைகளும் உபயோகிக்கக்கூடிய விதமான ஒரு ஐக்கிய பதிப்பு வேதாகமம் இருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 1925-இல் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1931-இல் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1938-இல் முழு வேதாகமத்தினதும் ஐக்கிய பதிப்பு சிங்கள மொழியில் வெளிவந்தது. இவ்வைக்கியப் பதிப்புத் தயாரிப்பில் பப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தவர்கள் மொழிபெயர்த்த வேதாகமமே முக்கிய பங்கு வகித்தது.

(10) ஏனைய மொழி பெயர்ப்புகள்

ஆசியாவில் பலதரப்பட்ட மொழிகளைப்பேசும் மக்கள் இருக்கின்றனர். அம்மக்களுடைய மொழிகளிலும் தேவனுடைய வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. லாஓஸ் நாட்டில் பணியாற்றிய சுவிஸ் மிஷனரிகள் 1926-இல் புதிய ஏற்பாட்டையும், 1932-இல் முழுவேதாகமத்தையும் லாஓஸ் நாட்டு மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதேபோல, கம்போடியாவில் பணியாற்றிய கிறிஸ்தவ மிஷனரி ஐக்கியத்தைச் சேர்ந்த மிஷனரிகள் 1929-இல் புதிய ஏற்பாட்டையும், 1954-இல் முழு வேதாகமத்தையும் கம்போடிய மொழியில் மொழிபெயர்த்து வெளி யிட்டனர்.

மேலும், இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் பேசப்படும் மொழிகளுள் 8 மொழிகளில் முழு வேதாகமமும், 12 மொழிகளில் புதிய ஏற்பாடும் 30 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

(தொடரும்)