அவரது வேளை

தியானம்: நவம்பர் 4 செவ்வாய்; வாசிப்பு: சங்கீதம் 90:1-10

“உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த
நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது”
(சங்கீதம் 90:4).

திருமறையில் இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையைவிட அவரது இரண்டாவது வருகை அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இந்த சத்தியத்தைக் கருத்தில் கொள்ளுவதேயில்லை. வேறு சிலரோ இயேசுகிறிஸ்து வரப்போகிறார் என்று சொல்லி தங்களுடைய அன்றாட பொறுப்புக்களையும் கடமைகளையும், உறவுகளையும் உதாசீனம் செய்துவிட்டு, தமது சொத்துக்கள் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, வெண்ணிற ஆடை அணிந்து, ஒரு மலையின்மேல் ஏறிக் காத்திருந்தார்கள் என்று கேள்விப்பட்டோமல்லவா! அவர் வரவில்லையே என்று தற்கொலை செய்தவர்களும் உண்டு. இதையெல்லாம் கேட்டுவிட்டு, “இப்படித்தான், அவர் வருவார், வருவார் என்று சொல்வார்கள்; அவர் எங்கே வரப்போகிறார்” என்ற எண்ணம் அநேகருக்குள் ஊறிப்போயிருக்கிறது.

கிறிஸ்துவின் வருகை ஏன் தாமதமாகிறது என்பதற்குப் பதில் என்ன? 2பேதுரு 3:8ல், “பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்” என்று பேதுரு எழுதியுள்ளார். அதாவது, நாம் காலத்தை அளக்கின்ற அளவு வேறு. கர்த்தர் அளக்கின்ற அளவு வேறு. உலகத்தின் கால அட்டவணைக்குள், அந்த உலகத்தை படைத்தவரையே அடக்கிவிட நினைப்பது மடமைத்தனம். அவரது பார்வையிலே ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் தெரிகிறது. ஆகையால், அவர் தம்முடைய வேளைக்குக் காத்திருக்கின்றார். வேளை வரும்போது நிச்சயம் வருவார். “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி.22:20) என்றவர் வருவார்.

தேவனுடைய பிள்ளையே, ஆண்டவரை நமது வேளைக்குள் அடக்குகின்ற முயற்சியை விட்டுவிட்டு, அவரது வேளைக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். நமது ஜெபத்திற்கு உடனடிப் பதில் கிடைக்காதுபோனால், பதட்டப்படாமல், அங்கும் இங்கும் அலையாமல், சுயத்தில் எதையும் செய்யத் துணியாமல் தேவனின் வேளைக்காகப் பொறுமையோடு காத்திருக்கக் கற்றுக்கொள்வது நல்லது. வாக்குக்கொடுத்தவர் அதை நிறைவேற்ற வல்லவர். ஆகவே, வருவேன் என்றவர் நிச்சயம் வருவார். நாம் நினைத்தபடி அல்ல; அவரது வேளையின்படி அவர் வருவார். ஆகவே, நாம் நாள் குறிப்பது தவறு. எந்த நாளிலும், எந்தவேளையிலும் வரக்கூடிய கிறிஸ்துவை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக வாழுகிறோமா என்பதுவே முக்கியம்.

ஜெபம்: “ஆண்டவரே, வாக்குக்கொடுத்த நீர் அதை நிறைவேற்ற வல்லவர். உமது வருகையில் உம்மைச் சந்திக்க ஆயத்தமாக உதவி செய்யும். ஆமென்”