அடையாளம் என்ன?

தியானம்: நவம்பர் 9 ஞாயிறு; வாசிப்பு: மத்தேயு 24:1-3

“…இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு
அடையாளம் என்ன?…” (லூக்கா 21:7).

நேற்றைய காரியங்களைக் குறித்துச் சிந்தித்து, பிழைகளைத் திருத்திக் கொள்வதைவிட, இன்றைய காரியங்களைக் கவனிப்பதையும்விட, நாளையைக் குறித்து அறிவதிலேதான் மனிதன் அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு. இதற்காகவே குறிசொல்லுகிறவர்களை நாடுவோர் அநேகர். கிறிஸ்தவர்கள் இன்று குறிசொல்லுகிறவர்களை நாடாவிட்டாலும், யாராவது தீர்க்கதரிசனம் சொல்ல மாட்டார்களா என்று தேடி அலைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த மனப்பான்மை அன்று இயேசுவின் சீஷருக்கும் இருந்தது. எல்லோரும் மனுஷர்தானே. அன்று யூதர் தங்கள் தேவாலயத்தைக் குறித்துப் பெருமை பாராட்டி வந்தனர். இயேசுவின் சீஷர்கள் அந்தத் தேவாலயத்தின் கட்டங்களைக் காண்பிக்கும்படி இயேசுவிடம் வந்தபோது, இயேசு ஒரு அதிர்ச்சி தகவலைக் கூறிவிட்டார். இந்த தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிபட்டுப்போகும் என்பதே அந்தத் தகவல். இடிந்துபோன சீஷர்கள், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று வருங்காலத்தைக் குறித்து இயேசுவிடம் கேட்டனர் என்று வாசிக்கிறோம். அடுத்ததாக நிகழப்போகும் இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதலை ஜீரணிக்க முடியாத சீஷர்கள், அவற்றை விட்டுவிட்டு, எப்போதோ நடக்கவிருக்கும் சம்பவத்திற்கு அடையாளம் தேடினர். இயேசுவும், இனி வரப்போகிற கடினமான காலங்களுக்கு முகங்கொடுக்கும்படி சீஷரை ஆயத்தப்படுத்தத் தயங்கவில்லை. பொய்யான மேசியாக்கள், இயற்கை அழிவுகள், உபத்திரவங்கள் சகலத்தைக் குறித்தும் இயேசு தமது சீஷரை எச்சரித்தார். ஆனால், அவற்றின் மத்தியிலும் தாம் அவர்களுடன் கூடவே இருப்பதாகவும், அவர்களுக்கூடாக தமது இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதாகவும், முடிவிலே, தமது ராஜரீகத்திலே வந்து அவர்களைச் சேர்த்துக் கொள்வதாகவும் வாக்களித்துத் திடப்படுத்தினார்.

இந்த அடையாளங்கள் இன்று நமக்கும்தான். அப்படியிருக்க இனி ஒரு அடையாளத்தைத் தேடி நாம் ஓடவேண்டிய அவசியமில்லை. இயேசு சொன்ன படி எருசலேம் தேவாலயம் தரைமட்டமானது. அது போலவே மிச்சமும் நிறை வேறி வருகிறது; ஆகவே, மீதியும் நிகழும். கிறிஸ்துவின் வருகை மிகமிக சமீபித்துவிட்டதை உணர்ந்து நமது வாழ்வைச் சீர்ப்படுத்துவோமாக. சொல்லப்பட்ட அடையாளங்கள் நிறைவு பெறும் வரைக்கும் கிறிஸ்துவின் வருகை தாமதமாகும். அதற்காக, நாம் அஜாக்கிரதையாக வாழ்ந்து வீணராகாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். ஒவ்வொரு நாளையும் கடக்கும்போது, நமது மரணமோ, கிறிஸ்துவின் வருகையோ சமீபித்துவிட்டது என்பதை மறவாதிருப்போமாக.

ஜெபம்: “கர்த்தாவே, மனம் சஞ்சலப்படாதபடிக்கு உமது வருகையைச் சந்திக்க எங்களை உமது வார்த்தைகளால் திடப்படுத்தினீர் ஸ்தோத்திரம். ஆமென்.”