நித்திய ஜீவன்

தியானம்: நவம்பர் 28 வெள்ளி; வாசிப்பு: யோவான் 5:24-29

“…வசனத்தைக் கேட்டு, …விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன்
உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை
விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்…” (யோவான் 5:24).

வேற்று மதத்தில் பிறந்து வளர்ந்து, தன் வாலிப நாட்களில் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருக்காக ஊழியம் செய்துவந்த ஒரு ஊழியர் அண்மையில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு மரணத்தோடு போராடி தனது 71ஆவது வயதிலே மரித்தார். அவர் மரணத்தை எவ்வளவு நம்பிக்கையோடும் தைரியத்தோடும் சந்தித்தார் என்பதே பேச்சாக இருந்தது. அவரது கடைசி நாட்களில் மருத்துவமனையில் அவருக்கு உதவிக்காக தங்கியிருந்த இளம் விசுவாசிகளுக்கு, கிறிஸ்துவுக்குள் அவர் கொண்டிருந்த விசுவாசம் மிகுந்த சவாலாக இருந்தது. அந்த ஆழமான விசுவாசத்திற்குக் காரணம் கிறிஸ்துவுடன் வாழுகிற உறுதியும், நித்திய ஜீவனைக் குறித்த அசையாத நம்பிக்கையும்தான். அவரது மரண ஆராதனை பாட்டுத்தாளில், அவரது விசுவாசத்தால் தொடப்பட்ட ஒரு வாலிபன் இயற்றிய கவிதை வரிகள் இப்படியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது:

“ஓ! பாலா (அண்ணா) உன் மரணத்தினாலேயே
நீ, மரணத்தையும், நோயையும் வென்றுவிட்டாய்!

ஈற்றிலே நீ பொன்னென விளங்கிவிட்டாய்!
நீ புடமிடப்படும்பொழுது நாம் அழுதோம், ஆனால் நீயோ சிரித்தாய்!
விசுவாசக்கொள்கைகள் பேசி விசுவாசத்தை விற்றுவிட்ட கிறிஸ்தவர்கள்
உன்னிடம் கற்பதற்கு பாடங்கள் பல தந்து போனாய்!
உனக்குக் கடமையை மறந்த கனவுகள் பிடிப்பதில்லை.
ஆண்டவரை மறக்கும் அவசரம் பிடிப்பதில்லை.
பாவத்திற்கு பங்காளியாகும் தலைமைத்துவம் பிடிப்பதில்லை.
குடம் குடமாய் பொய்யில் குளிப்பவரைப் பிடிப்பதில்லை.
எங்கள் தலைவர்களிலொருவனாய் எமக்கு வழிகாட்டி நின்றாய்!
நம் எல்லோருக்கும் என்றென்றைக்கும் தலைவனாம்
இயேசு பாதம் சேர்ந்தாய்!”

ஆம், இயேசுகிறிஸ்துவை தம் வாழ்க்கையில் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டவர்களுக்கு, நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அதை திருடர்களால் களவாட முடியாது, நோயினால் அதைக் கொன்றழிக்க முடியாது, சுனாமியினால் அடித்துச்செல்ல முடியாது. அது நித்தியமான, நிச்சயமான நம்பிக்கை. இதுவே ஒரு விசுவாசி மரணத்தை நம்பிக்கையோடு சந்திக்க தைரியத்தைக் கொடுக்கிறது. இந்த நம்பிக்கை உங்கள் வாழ்விலும் உண்டா? உங்கள் மரண ஆராதனையில் கலந்து கொள்கிறவர்கள் கிறிஸ்துவுக்குள் நீங்கள் கொண்டிருந்த விசுவாசத்தைப் பறைசாற்றக்கூடுமா? மனுஷகுமாரன் வரும்போது நம்மில் அந்த விசுவாசத்தைக் காண்பாரா? சிந்திப்போமாக.

ஜெபம்: “ஆண்டவரே, உம் மீதுள்ள விசுவாசத்தை வாழ்வின் கடைசி மூச்சு வரை காத்து நடக்க எங்களுக்கு உதவி செய்தருளும். ஆமென்.”