தாழ்மையின் ஆவி
தியானம்: டிசம்பர் 17 புதன்; வாசிப்பு: 1சாமுவேல் 16:14-23
“மனுஷனுடைய … வழிகளெல்லாவற்றையும் அவர்
சீர்தூக்கிப்பார்க்கிறார்” (நீதிமொழிகள் 5:21).
இரு நண்பர்கள்; ஒருவன் எப்போதும் பெருமையே பேசுவான், பெருமையான காரியங்களையே செய்வான். மற்றவனோ, மிகவும் தாழ்மையானவன், தன்னைத் தாழ்த்தி பிறருக்கு உதவுவதில் முன் நிற்பவன். இந்த வேறுபட்ட குணாதிசயமே அவர்களுடைய நட்பு முறியாமலிருப்பதற்குக் காரணமாயிற்று. இவர்களுக்கிடையில் இன்னொருவன் குறுக்கிட்டான். தாழ்மையான நண்பனிடம் ‘குட்டக் குட்ட குனிகிறவன் மடையன்’ என்ற பழமொழியை காதில் ஓதிவிட்டான். இப்போது அன்பான நண்பர்களுக்கிடையில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
சவுல்-தாவீது இருவருடைய குணாதிசயங்களும் வேறுபட்டவை. சவுல் எப்போதும் பெருமையாக வாழவே விரும்பினான். தான் இஸ்ரவேலின் ராஜா என்ற பெருமை அவனுக்குள் இருந்தது. தனக்கும் மேலே தேவனொருவர் இராஜாவாக இருக்கிறார் என்பதையே அவன் மறந்துபோனான். ஆனால், தாவீதோ அப்படியல்ல. தேவன் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணிய பின்பும், ஆடு மேய்க்கும் தனது தொழிலையே செய்துவந்தான். தன்னை அபிஷேகம் பண்ணின ஆண்டவர் தன்னை உயர்த்தும் வரைக்கும் அவரது பலத்த கைக்குள் தங்கியிருக்க தன்னை முழுவதும் அர்ப்பணித்தான் தாவீது.
தாவீதின்மீது எரிச்சல் கொள்ளாமல் இருக்க சவுலுக்கு முடியவில்லை. ஆனால், தாவீதோ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கவனமாக நடந்து, சவுலுடன் சண்டை ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். சவுல் எரிச்சல் கொள்கிறான் என்று கண்டு தாவீதும் அவனைப்போலவே நடந்திருந்தால் பெரிய போரே உண்டாயிருக்கும். ஆனால், தாவீதோ தனது தேவனை நம்பியவனாய் எப்போதும் தாழ்மையாகவே நடந்து முன்னேறிச் சென்றான். தாவீது தன்னைத்தானே உயர்த்துவதை வெறுத்து தேவனால் உயர்த்தப்படுவதையே நாடினான்.
தாவீதின் வாழ்வு நமக்கு நல்லதொரு உதாரணம். தாவீதிற்குள்ளிருந்த அந்த தாழ்மையின் ஆவி இன்று நமக்குள் உண்டா? பெருமை பேசவோ, பெருமையாய் நடக்கவோ நம்மிடம் என்னதான் இருக்கிறது? தேவன் நம்மை உயர்த்தும் வரைக்கும் காத்திருக்க ஏன் நமக்குப் பொறுமையில்லை? பெருமை எரிச்சலை வளர்த்து, பகைமை உணர்வை உண்டாக்கும். நமக்குள் தாழ் மையின் ஆவி இருக்குமானால் பிறர் வாழ்வைப் பார்த்து அதனை அவித்துப்போடாமல், அதனை அனல்மூட்டி, எல்லாரோடும் சமாதானமாய் வாழுவதற்குக் கற்றுக்கொள்வோம். அதனையே தேவன் நம்மிடத்தில் விரும்புகிறார். வாக்குவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடுவதும், சமாதானமாய் வாழுவதுமே கிறிஸ்தவ பண்பு.
ஜெபம்: “பிதாவே, நீர் தந்த தாழ்மையின் ஆவியை அனல் மூட்டி எழுப்பிவிடும். உமக்கே சாட்சியாக வாழ கிருபை தாரும். ஆமென்.”