ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி-பிப்ரவரி 2015)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று வாக்குப்பண்ணின தேவாதி தேவனின் இனிய நாமத்தில் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கர்த்தர் நம்மேல் வைத்த இரக்கத்தினாலே இன்னுமொரு புதிய ஆண்டிற்குள்ளாக நாம் பிரவேசிக்க அவர் உதவி செய்துள்ளார். வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற தேவன் இப்புதிய வருடத்தின் ஒவ்வொரு நாளையும் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே ஆசீர்வாதமாய் நடத்துவார். நமது அன்றாட வாழ்க்கைக்குரிய அனைத்து தேவைகளிலும் கர்த்தர் நம்மோடிருப்பார். ஆகவே நாம் அனுபவிக்கிறதற்கு சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்து முன்னேறிச் செல்வோம். இப்புதிய ஆண்டிலே நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர வேண்டுதல் செய்கிறோம்.

2014 ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். கடந்த ஆண்டில் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காதவர்களும் புதுப்பித்துக்கொண்டு இவ்வூழியத்தைத் தாங்க அன்புடன் நினைவூட்டுகிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.

ஜனவரி மாத தியானங்களை சகோதரி ஜெபி பிடீல் அவர்களும், கடைசி நான்கு நாட்களில் சகோ.சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத் தியானங்கள் உங்கள் யாவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம்.

பங்காளர்கள் வாசகர்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியர்கள் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்